' மீண்டும் வா எங்கள் சிங்கமே ' - ஒரு சிஎஸ்கே ரசிகனின் காத்திருப்பு!  

VK
சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ்

23 மார்ச் 2019 எப்போது இந்த நாள் வரும் என்று தினந்ததோறும் காத்துக்கொண்டிருக்கிறார்கள் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள். காரணம் ஐபிஎல் தொடரின் 12வது சீசன். இந்த முறை கோப்பையை வெல்ல அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவும் என்பதில் சந்தேகமில்லை. நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்தோடு இந்த சீசனில் களமிறங்குகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. மற்ற ஐபிஎல் அணிகளின் ரசிகர்களை காட்டிலும் சென்னை அணியின் ரசிகர்களின் காத்திருப்பு கொஞ்சம்அதிகமாகவே இருக்கிறது. காரணம் கடந்த 3 சீசன்களுக்கு பிறகு தனது சொந்த மண்ணில் கால் பதிக்க காத்திருக்கிறது சென்னை அணி.

குறிப்பாக இரண்டு ஆண்டுகள் கழித்து கடந்த 2018ம் ஆண்டு மீண்டும் ஐபிஎல் தொடரில் களமிறங்கிய சென்னை அணி பல்வேறு தடைகளை கடந்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. 27 மே 2018 அன்று 2018ம் ஆண்டின் ஐபிஎல் கோப்பை யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் வாய்ந்த சன்ரைசர்ஸ் அணி ஐதராபாத் அணியை மும்பை வான்கடே மைதானத்தில் எதிர்கொண்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ்

டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச தீர்மானிக்க ஐதராபாத் அணியின் துவக்க வீரர்கள் ஷிகர் தவான் மற்றும் கோஸ்வாமி தங்கள் அணியின் ரன் கணக்கை துவங்கினர். ஆரம்பத்தில் சென்னை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய சன்ரைசர்ஸ் அணி வில்லியம்ஸன் மற்றும் யூசுப் பதானின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்தது. குறிப்பாக இறுதிக் கட்டத்தில் யூசுப் பதான் 25 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 4 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதன்மூலம்,120 பந்துகளில் 179 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய சென்னை அணி ஆட்டத்தின் 4-வது ஓவரிலேயே டூ பிளஸ்ஸிஸ்சின் விக்கெட்டை பறிகொடுக்க, ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இதனை அடுத்து ஜோடி சேர்ந்த ரெய்னா மற்றும் வாட்சன் சீரான இடைவெளியில் ரன் குவிக்க துவங்கினர்.

ராயுடு மற்றும் வாட்சன்
ராயுடு மற்றும் வாட்சன்

குறிப்பாக வாட்சன் ஐதராபாத் அணியின் பந்துவீச்சை வான்கடே மைதானத்தின் நான்கு திசைகளிலும் சிதறடித்தார். மொத்தம் 57 பந்துகளில் 8 சிக்ஸர்கள் 11 பவுண்டரிகளுடன் 117 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் சென்னை அணி 18.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து ஐபிஎல் கோப்பையை மூன்றாவது முறையாக உச்சி முகர்ந்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் 2018
சென்னை சூப்பர் கிங்ஸ் 2018

இரண்டு ஆண்டுகளாக தங்கள் அணி விளையாடுவதை பார்க்க முடியாமல் ஏங்கிக் கொண்டிருந்த சென்னை அணியின் ரசிகர்களுக்கு அந்த தருணம் மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. இன்னும் சில ரசிகர்கள் உணர்ச்சி பெருக்கில் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.

இந்த ஆண்டு மீண்டும் ஒருமுறை கோப்பையை வெல்ல 'தல' தோனியின் தலைமையில் களமிறங்க காத்திருக்கிறது சென்னை அணி. அதே சமயத்தில், தாங்கள் பார்த்த..., ரசித்த..., நேசித்த சென்னை அணியை, மீண்டும் ஒருமுறை தங்களுடைய கோட்டையான சேப்பாக்கத்தில் விளையாடுவதை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்க தான் செய்கிறார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னையின் அடையாளங்களுள் ஒன்றான சேப்பாக்கம் மைதானத்தில் தல தோனியின் கடைசி பால் சிக்ஸர், 'சின்ன தல' ரெய்னாவின் காற்றில் பறக்கும் கேட்சுகள், ஜடேஜாவின் 'ஸ்வார்ட் செலிபிரேஷன்', பிராவோவின் கரீபியன் நடனம், பாகுபலி ராயுடுவின் இமாலய சிக்ஸர்கள் மற்றும் ஒட்டுமொத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கம்பீரமான கிரிக்கெட் இவற்றை மீண்டும் காண காலம் கனிந்து விட்டது.

'நடப்பு ஐபிஎல் சாம்பியனும் நாங்கதான், நடக்கபோற ஐபிஎல்லின் சாம்பியனும் நாங்கதான்' என்று பெருமிதம் கொண்டு சென்னை சேப்பாக்கத்தில் வரும் 23ம் தேதி மரணமாஸாக களமிறங்க காத்திருக்கும் சிஎஸ்கேவின் ரசிகர்களுக்கு இக்கட்டுரை சமர்ப்பணம்!

App download animated image Get the free App now