உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பதற்கான இந்திய அணி வரும் 15ம் தேதி மும்பையில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சங்கருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகக் கோப்பை 2019 தொடர் இங்கிலாந்தில் மே 30-ந் தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை நடக்க இருக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.
தேர்வுக்குழு கூட்டத்தில் விராட் கோலி:
இந்ததொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் ஏப்ரல் 15 அன்று மும்பையில் தேர்வு செய்ய உள்ளதாக பிசிசிஐ தேர்வுக்குழு தெரிவித்துள்ளது. 10 அணிகள் பங்கேற்க்கும் உலகக் கோப்பை தொடருக்கான அணிகளை ஏப்ரல் 23ம் தேதிக்குள் அனைத்து அணிகளும் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. தேர்வுக்குழு தலைவர் எம்.ஸ்.கே பிரசாத் தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில் விராட் கோலியும் பங்கேற்ப்பார் என தெரிகிறது, இந்திய அணி தேர்வுக்குழு ஏற்கனவே 20 பேர் கொண்ட பட்டியலை தேர்வு செய்து வைத்திருப்பதாகவும், அதில் 15 பேர் தேர்வு செய்ய படுவர் எனவும் சில கடைசி நேர மாறுதல்களுக்கும் வாய்ப்புள்ளது.
ஏற்கெனவே கேப்டன் கோலி கூறியுள்ளபடி ஐபிஎல் 2019 தொடரின் செயல்பாடுகள் அணி தேர்வில் மாற்றத்தை ஏற்படுத்தாது என்று கூறப்படுகிறது. அதையே துணை கேப்டன் ரோஹித் ஷர்மாவும் வலியுறுத்தியுள்ளார்.
தொடக்க ஆட்டக்காரர்களை பொருத்தவரை கடந்த ஆறு வருடங்களாக இந்திய அணிக்கு பங்களித்து வரும் ஷிகர் தவான் மற்றும் ரோகித் சர்மாவும் நடு வரிசை வீரர்களாக விராட் கோலி, அம்பதி ராயுடு, எம்.எஸ் தோனி, கேதர் ஜாதவும் ஆல் ரவுண்டர்கள் பட்டியலில் விஜய் சங்கர் , ஹார்திக் பாண்டியா, ஜடேஜாவும் மற்றும் பந்து வீச்சாளர்களில் முகமது சமி, புவனேஷ்வர் குமார், பும்ரா, குல்தீப் யாதவ், சஹாலும் இடம் பெறுவர் என எதிர்பார்க்கப்டுகிறது.
நான்காவது வீரர் ரேசில் வெல்லப்போவது யார்?
இந்திய அணியின் மிக முக்கிய பிரச்சனையாக இருப்பது 4-வது வீரர் வரிசை, 2-வது விக்கெட் கீப்பர் போன்ற இடங்களை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. விக்கெட் கீப்பரை பொருத்தவரை அனுபவம் வாய்ந்த தினேஷ் கார்த்திக் மற்றும் அச்சமின்றி அடித்து ஆடும் குணம் கொண்ட இளம் ரிஷாப் பான்ட் ஆகியோருக்கிடையே பலத்த போட்டி நிலவுகிறது. மாற்று தொடக்க ஆட்டக்காரர் வரிசையில் கடந்த வருடம் இங்கிலாந்து தொடரில் தனது திறமையை வெளிப்படுத்திய லோகேஷ் ராகுல் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
எதிர் பார்க்கப்படும் உத்தேச இந்திய அணி 15 வீரர்கள்:
ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி, அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், விஜய் சங்கர், எம்.எஸ் தோனி, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, முகமது சமி, புவனேஷ்வர் குமார், பும்ரா, குல்தீப் யாதவ், சஹால், லோகேஷ் ராகுல் / ரவீந்திர ஜடேஜா.
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஜூன் 5-ந்தேதி தென்ஆப்பிரிக்காவை சவுத்தாம்ப்டனில் சந்திக்கிறது.