கிரிக்கெட் விளையாட்டைப் பொறுத்த வரை திறமை எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு உடல் ஆரோக்கியமும் முக்கியம். அதுவும் குறிப்பாக டி20 போட்டிகளில் விளையாடுவதற்கு உடலில் அதிக எனர்ஜி தேவை. ஏனெனில் பேட்டிங் செய்யும்போது அடித்து விளையாடவும், பீல்டிங் செய்யும் பொழுது வேகமாக ஓடி பந்துகளையும், எடுக்கவும் செய்ய வேண்டும்.
கிரிக்கெட் விளையாட்டைப் பொறுத்த வரை ஒரு குறிப்பிட்ட வயதை தாண்டிவிட்டால் டி20 போட்டிகளில் வேகமாக விளையாடும் அளவிற்கு உடல் ஒத்துழைக்காது. இவ்வாறு குறிப்பிட்ட வயதை தாண்டிவிட்டால் ஐபிஎல் தொடரில் ஓய்வு பெற வாய்ப்புள்ள வீரர்களைப் பற்றி இங்கு காண்போம்.
#1) கிறிஸ் கெயில்
இவர் மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஆவார். இவரை ஒரு காலகட்டத்தில் ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளும் அதிக தொகை கொடுத்து போட்டி போட்டு ஏலத்தில் எடுப்பர். ஆனால் இவர் குறிப்பிட்ட வயதை தாண்டி விட்டதால் 2017 ஆம் வருடத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை. எனவே 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் இவரை எந்த அணியும் முன் வந்து எடுக்கவில்லை. இறுதியாக பஞ்சாப் அணி இவரை குறைந்த தொகைக்கு எடுத்தது. கடந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடினார். ஆனால் தற்போது இவருக்கு 40 வயது ஆக போகிறது. எனவே இந்த ஆண்டுடன் ஐபிஎல் தொடரில் இருந்து தனது ஓய்வை அறிவித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#2) யுவராஜ் சிங்
சச்சின், சேவாக் இருந்த காலகட்டத்தில் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடக் கூடிய பேட்ஸ்மேன்களில் ஒருவர் யுவராஜ் சிங். அதுவும் குறிப்பாக டி20 போட்டிகளில் அதிக சிக்சர்களை அடிக்கக் கூடிய திறமை படைத்தவர். டி20 போட்டிகளில் 6 பந்துகளில் 6 சிக்சர்களை அடித்த ஒரே வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் இவர்தான். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக ஐபிஎல் தொடரில் இவரால் சிறப்பாக விளையாட முடியவில்லை. எனவே எந்த அணியும் இவரை முன்வந்து எடுக்கத் தயங்கினர். ஆனால் தற்போது இந்த வருடம் மும்பை அணிக்கு விளையாட இருக்கிறார். இவருக்கு தற்பொழுது 37 வயது தாண்டிவிட்டது. எனவே இவரும் இந்த ஆண்டுடன் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்று விடுவார் என்று எதிர்பார்க்கலாம்.
#3) வாட்சன்
வாட்சன் ஆஸ்திரேலிய அணியில் பல வருடங்களாக சிறந்த ஆல்ரவுண்டராக விளையாடியிருக்கிறார். இவரை கடந்த வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்து இருந்தது. இவருக்கு சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. வயதாகிவிட்டதே, இவர் எவ்வாறு விளையாடப் போகிறார் என்று ரசிகர்கள் நினைத்த நேரத்தில், மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் வாட்சன். தான் விளையாடிய அனைத்து போட்டிகளிலுமே சராசரியான தொடக்கத்தை கொடுத்து வந்தார்.
அதுவும் குறிப்பாக பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசினார். அதுமட்டுமின்றி இறுதிப்போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் இவர்தான். தற்போது இவருக்கு 38 வயது தாண்டிவிட்டது. எனவே இவர் இந்த ஆண்டுடன் ஐபிஎல் தொடரில் தனது ஓய்வை அறிவித்து விடுவார் என்று எதிர்பார்க்கலாம்.