யுவராஜ் சிங் இந்திய அணியின் முன்னணி ஆல் ரவுண்டராக இருந்து வந்தவர். இவர் வலதுகை பேட்ஸ்மேன் மற்றும் வலதுகை சுழற்பந்து வீச்சாளரும் ஆவார். யுவராஜ் அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் இந்திய அணியில் விளையாடியுள்ளார். உள்ளுர் கிரிக்கெட்டில் பஞ்சாப் அணியில் விளையாடுவார்.கடந்த ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணியில் விளையாடினார். இவர் ஐபிஎல் இல் நிறைய அணிகளில் விளையாடியுள்ளார்.
இவர் முன்னாள் கிரிக்கெட் வீரரின் மகன். அதனால் கிரிக்கெட் விளையாட்டினை எளிதில் கற்றுக்கொண்டு தம் இளம் வயதிலேயே இந்திய அணியில் இடம்பிடித்தார். இவர் சில சமயங்களில் சீரான ஆட்டத்தை வெளிபடுத்த தவறியதால் அணியை விட்டு நீக்கப்பட்டு பிறகு உள்ளுர் கிரிக்கெட்டில் தன்னை நிறுபித்து மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பார்.
இவரது கிரிக்கெட் வாழ்க்கையை புரட்டிபோட்ட ஒரு நிகழ்வு என்றால் அது இவருக்கு வந்த கேன்சர் நோய் தான். ஆனால் அதையும் வென்று மீண்டும் கிரிக்கெட்டில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். இவரது கிரிக்கெட் வாழ்க்கையை " தி டெஸ்ட் ஆஃப் மை லைப் " என்ற சுயசரிதையில் யுவராஜ் பதிவிட்டுள்ளார். யுவராஜ் சிங் " யு வி கேன் " என்ற தொண்டு நிறுவனத்தை உருவாக்கி ஆண்டுதோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புற்றுநோய் பாதித்தவர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்து கொடுக்கிறார்.
ஆரம்ப வாழ்க்கை
யுவராஜ் சிங் டிசம்பர் 13, 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் சண்டிகர் மாநிலத்தில் யோக்ராஜ் சிங் மற்றும் ஷப்னாம் சிங் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். யோக்ராஜ் சிங் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர். இவர்களுக்கு விவாகரத்து ஆகும் போது யுவராஜ் சிங் தமது அம்மாவுடன் இருக்க வேண்டும் என முடிவு செய்தார்.
யுவராஜ் சிங் சண்டிகரில் உள்ள டிஏவி பப்ளிக் பள்ளியில் படித்தார். தனது தந்தையிடம் கிரிக்கெட் பயிற்ச்சியை பெற்றார். இவர் டென்னிஸ் மற்றும் ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டிலும் சிறந்து விளங்கினார். 14 வயதிற்குட்பட்ட தேசிய ரோலர் ஸ்கேட்டிங்கில் சேம்பியன் பட்டத்தையும் பெற்றுள்ளார். இப்பட்டத்தினை தூக்கி எறிந்த அவரது தந்தை, கிரிக்கெட்டில் கவணம் செலுத்துமாறு யுவராஜுக்கு அறிவுறுத்தினார்.
கிரிக்கெட் வாழ்க்கை :
யுவராஜ் சிங் 16 வயதிற்குட்பட்ட பஞ்சாப் அணியில் தனது 15வது வயதில் அறிமுகமானார். பிற்காலத்தில் இதுவே 19 வயதிற்குட்பட்ட தேசிய அணியில் இணைய உதவி புரிந்தது. இவர் 1997-98 ஆம் ஆண்டில் தனது முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமானார். 1999ஆம் ஆண்டு நடைபெற்ற "கூ பெகார் டிராபி " பிகார் முதல் இன்னிங்சில் அடித்த 357 ரன்களை இவர் தனிஒருவராக அடித்தார். யுவராஜ் அப்போட்டியில் 358 ரன்களை குவித்தார். 2000ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் தொடர் ஆட்ட நாயகன் விருதினை பெற்றார்.
19 வயதிற்குட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பையில் இவரது அற்புதமான ஆல்ரவுண்டர் ஆட்டத்திறனால் இந்திய அணிக்கு தகுதி பெற்றார். இவர் 2000ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐசிசி நாக்அவுட் கோப்பையில் கென்யாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். இவர் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 84 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருதினை பெற்றார். அத்துடன் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 41 ரன்கள் மற்றும் 1 விக்கெட் வீழ்த்தியதற்காக ஆட்ட நாயகன் விருதினை பெற்றார். பின்னர் நடந்த டிரை- சீரிஸில் மோசமான ஆட்டத்தால் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.
யுவராஜ் சிங் மறுபடியும் இந்திய அணிக்கு திரும்பிய போது 2001 கொக்கக் கோலா கோப்பையில் இலங்கைக்கு எதிராக 98 ரன்களையும் அந்த தொடரில் மொத்தமாக 8 விக்கெட்டுகளையும் வீழ்த்திருந்தார். பின்னர் மோசமான ஆட்டத்தால் சில மாதங்கள் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டார். 2002ல் நடைபெற்ற துலிப் கோப்பையில் 202 ரன்கள் அடித்து ஜிம்பாப்வே-விற்கு எதிராக தொடரில் மீண்டும் இந்திய அணியில் இடம்பெற்றார். அப்பொழுது இந்திய அணி 1-2 என தொடரை கைப்பற்றியது. இவர் இந்த தொடரில் 2வது போட்டியில் 80 ரன்களும் மூன்றாவது போட்டியில் 73 ரன்களை குவித்து வெற்றிக்கு வித்திட்டார்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மோசமான தொடருக்குப் பிறகு , 2002ல் நடைபெற்ற நாட்வெஸ்ட் தொடரில் தனது சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இத்தொடரில் பேட்டிங் மற்றும் பௌலிங்கில் சிறப்பாக செயல்பட்டார். முக்கியமாக இங்கிலாந்திற்கு எதிரான இறுதி போட்டியில் 69 ரன்களை யுவராஜ் சிங் அடித்தார். அது மட்டுமல்லாமல் முகமது கைஃப் உடன் 121 ரன்கள் பார்ட்னர் ஷிப்பை கடைபிடித்து இங்கிலாந்து அணியின் 326 என்ற இலக்கினை எட்டினர். இது இதுவரை இந்திய அணியின் மிகப்பெரிய ஒடிஐ வெற்றியாக பார்க்கப்படுகிறது.
2003 உலகக் கோப்பையில் இவர் அடித்த சில அற்புதமான அரை சதங்கள் இந்திய அணி அடுத்த லெவலிற்கு கொண்டு செல்ல பெரிதும் உதவியது. அத்துடன் ஏப்ரல் 13, 2003ல் உலகக் கோப்பை ஆட்டத்தில் வங்கதேசத்திற்கு எதிராக சிறப்பான சதத்தினை விளாசினார். மே 2003ல் யார்க்ஷீர் அணியில் விளையாடினார். இங்கிலாந்து கிளப் அணியில் சச்சினுக்கு பிறகு இவரே இரண்டாவது இந்தியராக விளையாடியுள்ளார்.
யுவராஜ் சிங் 2003ஆம் ஆண்டு அக்டோபர் 13ல் நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். ஆனால் அத்தொடர் அவருக்கு சரியாக அமைந்திடவில்லை. அத்துடன் டிவிஎஸ் ஒடிஐ கிரிக்கெட் தொடரிலும் இவரது ஆட்டத்திறன் மோசமாக இருந்தது. அதன்பின் ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே-விற்கு எதிராக டிரை சீரிஸில் மொத்தமாக 314 ரன்கள் குவித்து தனது ஆட்டத்திறனை நிறுபித்தார். அத்துடன் பாகிஸ்தானிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் சதம் மற்றும் அரை சதத்தை அடித்திருந்தார்.
2004லிருந்து யுவராஜ் சிங் தனது சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2005ல் இந்தியன் ஆயில் கோப்பையில் அதிக ரன்களை குவித்தோர் பட்டியலில் முதல் இடத்தை வகித்தார். அந்த ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் 7 சதங்கள் மற்றும் 2 டெஸ்ட் சதங்களுடன் சில அரை சதங்களையும் விளாசி சரிவிலிருந்த இந்திய அணியை மீட்டார்.
2007ல் டி20 உலகக் கோப்பையில் துணை கேப்டனாக செயல்பட்டார். 2007 டி20 உலகக் கோப்பையை யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. அப்போட்டியில் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் 6பந்துகளில் 6 சிக்சர்களை ஸ்டுவர்ட் பிராட் ஓவரில் விளாசினார். பின்னர் ஒடிஐ கிரிக்கெட்டிலும் துனை கேப்டனாக செயல்பட்டார். பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டில் 4 அரை சதங்கள் மற்றும் டெஸ்ட் தொடரில் இவரது அதிகபட்ச டெஸ்ட் ரன்களான 169 ரன்னை அடித்திருந்தார்.
2011 உலகக் கோப்பை இவருக்கு மிகச்சிறந்த தொடராக அமைந்தது. இந்த உலகக் கோப்பை தொடரில் 4 அரைசதங்கள் மற்றும் 1 சதம் உட்பட 362 ரன்களையும், அத்துடன் 15 விக்கெட்டுகளையும் வீழ்த்தி தொடர் ஆட்டநாயகன் விருதினை பெற்றார். அதன்பின் அவர் புற்றுநோய் பாதிப்பினால் சிகிச்சை பெற சென்றுவிட்டார். பின்னர் செப்டம்பர், 2012 டி20 உலகக் கோப்பையில் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பினார். இத்தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் பேட்டிங்கில் கவணம் செலுத்த தவறிவிட்டார். அதற்குப்பின் இவருக்கு அளிக்கப்பட்ட டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள தவறவிட்டார்.
2014 டி20 உலகக் கோப்பையில் மீண்டும் இந்திய அணியில் அழைக்கப்பட்டார். அப்போது சில பெரிய பார்ட்னர் ஷிப்பை உருவாக்கி அருமையாக ஆட்டத்திறனை வெளிபடுத்தினார்.
2015 உலகக் கோப்பையில் இவரை அணியில் எடுக்கவில்லை. பின்னர் விஜய் ஹசாரே கோப்பையில் அற்புதமாக விளையாடி ஆஸ்திரேலியாவிற்கெதிரான டி20 தொடரில் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்தார். அத்துடன் ரஞ்சிக்கோப்பையில் 5 போட்டிகளில் 672 ரன்களை குவித்தார். 2017 இங்கிலாந்திற்கு எதிரான தொடரில் ஓடிஐ அணியில் இடம்பெற்றார். அந்த தொடரில் ஒரு போட்டியில் 150 ரன்களை அடித்து ஆட்டநாயகன் விருதினை வென்றார்.
ஐபிஎல்
யுவராஜ் சிங் ஐபிஎல் தொடரில் கிங்ஸ்XI பஞ்சாப் அணியின் முன்னணி வீரராக திகழ்ந்தார். 2009ல் பெங்களூரு-விற்கு எதிரான போட்டியில் தனத முதல் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதே மாதத்தில் ஹதராபாத் அணிக்கு எதிராகவும் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர் பல்வேறு ஐபிஎல் அணிகளில் விளையாடி உள்ளார். ஆனால் இவருக்கு சரியாக அமைந்தது ஹதராபாத் அணி தான்.
சாதனைகள் மற்றும் விருதுகள்
2007 டி20 உலகக் கோப்பையில் பிராட் ஓவரில் வீசிய 6 பந்துகளில் 6 சிக்சர்களை விளாசினார்.அத்துடன் 12 பந்தில் அரை சதத்தை விளாசி உலக சாதனை படைத்துள்ளார்.
இந்திய அரசு யுவராஜ் சிங்- ற்கு 2012 ல் அர்ஜுனா விருது மற்றும் 2014ல் பத்ம ஸ்ரீ விருதினையும் வழங்கி கௌரவித்தது.