சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் சதம் விளாசுவது என்பது கடினமான விஷயம்தான். அதுவும் டி20 போட்டிகளை போன்று, டெஸ்ட் போட்டிகளிலும் அதிரடியாக விளையாட முடியாது.
அடித்து விளையாட நினைத்தால் தங்களது விக்கெட்டை இழக்க நேரிடும். ஆனால் நமது இந்திய அணியில் பல திறமையான அதிரடி வீரர்கள் உள்ளனர். அதுவும் குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் எப்படி விளையாட வேண்டும், என்ற நுணுக்கங்களை முழுமையாகத் தெரிந்த கிரிக்கெட் வீரர்கள் சிலர் உள்ளனர். அவர்களால் மட்டும் தான் டி20 போட்டிகளை போன்று, டெஸ்ட் போட்டியிலும் அதிரடியாக விளையாட முடியும். இவ்வாறு டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடி குறைந்த பந்துகளில் சதம் விளாசிய இந்திய வீரர்களைப் பற்றி இங்கு காண்போம்.
#1) கபில் தேவ் ( 74 பந்துகளில் )
இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் நமது இந்திய அணியின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராகத் திகழ்ந்த கபில் தேவ். இவர் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தவர். இவர் மொத்தம் 131 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, அதில் 5248 ரன்களையும், 8 சதங்களையம், 27 அரை சதங்களையும் விளாசியுள்ளார். அதுமட்டுமின்றி பந்து வீச்சிலும் 434 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 1986 ஆம் ஆண்டில் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், வெறும் 74 பந்துகளில் சதம் விளாசியுள்ளார். இதன் மூலம் குறைந்த பந்துகளில் சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
#2) முகமது அசாருதீன் ( 74 பந்துகளில் )
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் நமது இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்ந்த முகமது அசாருதீன். இவர் மொத்தம் 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, அதில் 6215 ரன்களையும், 22 சதங்களையம் விளாசியுள்ளார். டெஸ்ட் போட்டியில் இவரது சராசரி 45.04 ஆகும். இவர் 1996 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், அதிரடியாக விளையாடி 74 பந்துகளில் சதம் விளாசியுள்ளார்.
#3) வீரேந்தர் சேவாக் ( 78 பந்துகளில் )
அதிரடி தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் வீரேந்தர் சேவாக். இவர் களத்தில் நிற்கும் வரை பவுண்டரிகளுக்கு பஞ்சம் இருக்காது. சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இரண்டு முறை முச்சதங்கள் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையையும் தன் வசம் வைத்துள்ளார். இவர் 2006 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், அதிரடியாக விளையாடி 78 பந்துகளில் சதம் விளாசியுள்ளார்.
#4) ஷிகர் தவான் ( 85 பந்துகளில் )
இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் இருப்பவர், தற்போது நமது இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான தவான். தற்போது அனைத்து சர்வதேச போட்டிகளிலும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்து வருகிறார். இவர் இதுவரை 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் 2315 ரன்களையும், 7 சதங்களையும் விளாசியுள்ளார். இவர் 2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில், சிறப்பாக விளையாடி 85 பந்துகளில் சதம் விளாசினார்.
Published 26 Mar 2019, 13:40 IST