இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியைக் களம்காண ஆஸ்திரேலிய அணி ஆயத்தமாகி வருகிறது. வரும் டிசம்பர் 26ம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இது கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் அடுத்த நாள் என்பதால் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால் அன்றைய நாள் தான் கிறிஸ்துமஸ் பரிசுகளை நண்பர்களுடனும் உறவினர்களுடனும் பகிர்ந்து கொள்வார்கள்.
பெர்த்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரரான ஆரோன் பின்ச், இரண்டாவது இன்னிங்சில் முகமது ஷமி வீசிய பதில் காயமடைந்தார். ஆள்காட்டி விரலில் ஏற்பட்ட காயத்தின் காரணத்தினால் போட்டியிலிருந்து தற்காலிகமாக விலகி மருத்துவமனைக்கு விரைந்தார் பின்ச்.
நடந்தது என்ன ?
இரண்டாவது டெஸ்ட் போட்டியில், அதிரடி தொடக்கம் பெற்றிருந்தனர் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்கள். மார்கஸ் ஹாரிஸ் மற்றும் ஆரோன் பின்ச் நிதானமாக ஆடவே 12ஆவது ஓவரை வீச வந்தார் முகமது ஷமி. ஷமி பௌன்சரை நேர்த்தியாக வீசவே, பின்சின் ஆள்காட்டி விரலுக்கு பந்து விரைந்தது. காயமடைந்த பின்ச் ரிடைர்ட் ஹர்ட் ஆகி மருத்துவமனைக்கு விரைந்தார்.
காயம் அபாயகரமாக மாறாத காரணத்தினால், இரண்டாவது இன்னிங்சில் களம் இறங்கிய பின்ச் முதல் பந்திலேயே அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.
இதனிடையே மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக பத்திரிகையாளர் சந்திப்பில் பின்ச் கூறியதாவது “பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி வர உள்ள நிலையில், விக்டோரியா மாகாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நான், இப்போட்டியில் களம் காணாமல் போயிருந்தால் அது விரல் துண்டிக்கப்பட்ட காரணத்தினாலயே அமைந்திருக்கும்” என்று இப்போட்டியின் சிறப்பினை பறைசாற்றும் வகையில் பின்ச் தெரிவித்திருந்தார்.
காயத்தைப் பற்றிக் கூறிய பின்ச் “ஷமி வீசிய பந்திற்கு முன்பாகவே, வலைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இருமுறை மிட்செல் ஸ்டார்கின் பந்து, அதே விரலில் பட்டுள்ளது” எனக் கூறினார்.
“இன்று நடக்கும் பயிற்சியில் அனேகமாகச் சிறிது பேட்டிங் செய்து, கேட்சிங் பயிற்சியில் ஈடுபட போகிறேன். போட்டிக்கு முன்பாக இது பெரிதும் உதவும். கடந்த இரு தினங்களாக 100% குணம் அடைந்துள்ளதாக உணர்கிறேன்” என தனது உடல் தகுதியைக் குறித்து கூறியுள்ளார் பின்ச்.
அடுத்தது என்ன ?
காயத்தை பொருத்தவரை ஆஸ்திரேலிய அணியைவிட இந்திய அணி தான் அவதிப்பட்டு வருகிறது. இந்தியாவின் முன்னிலை ஸ்பின்னர்களாக உள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா காயத்தால் அவதிப்பட்டு போட்டிகளை ஆட இன்னும் முழுமையாகத் தகுதி பெறவில்லை என்று இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
தொடக்க ஆட்டக்காரர்கள் சரிவர ஆடாமல் போவது, ஸ்பின்னர்கள் காயம் என பல இன்னல்களைச் சந்தித்து வருகிறது இந்திய அணி.
இந்திய அணியைப் பொறுத்தவரை கே.எல்.ராகுலுக்கு பதிலாக மாயங்க் அகர்வால் அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா அணியில் உமேஷ் யாதவிற்கு பதில் இடம்பெறுவார் எனவும் கூறப்படுகிறது.
ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை பெரும்பாலும் அதே அணியுடன் திரும்பும் நோக்கத்தில் உள்ளது. பீட்டர் ஹேண்ட்ஸ்கொமிற்கு பதில் ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷ் அணியில் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.