ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தற்போதைய ஒருநாள் மற்றும் T-20 அணியின் கேப்டனாக திகழும் ‘ஆரோன் ஃபின்ச்’, இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ‘விராட் கோலி’ மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ‘எம்.எஸ்.தோனி’ ஆகியோருக்கு தனது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்து உள்ளார்.
‘ஆரோன் ஃபின்ச்’ எதற்காக விராட் கோலிக்கும், தோனிக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும் என கேட்பவர்கள் தொடர்ந்து கீழே படியுங்கள்.
கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 T-20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இந்த தொடருக்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக செயல்பட்டவர் ஆரோன் பின்ச். அதுவரை தொடர்ந்து தோல்விகளையே கண்டிருந்த ஆஸ்திரேலிய அணி வலுவான இந்திய அணிக்கு எதிராகவும் மோசமான தோல்வி அடையும் என்பதே ரசிகர்களின் எண்ணமாக இருந்தது.
ஆனால் அந்த எண்ணத்தை எல்லாம் சுக்கு நூறாக உடைத்தது இளம் வீரர்களைக் கொண்ட ஆஸி அணி. T-20 தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றியதோடு, ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து பின்னர் மீண்டெழுந்து அடுத்த மூன்று போட்டிகளையும் வரிசையாக வென்று 3-2 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் வென்று சரித்திர சாதனை படைத்தது ஆஸ்திரேலிய அணி.
இந்த தொடர் முடிந்து ஆஸ்திரேலிய அணி தங்களது சொந்த நாட்டுக்கு செல்வதற்கு முன்பாக, ஆஸ்திரேலியா அணி கேப்டன் ‘ஃபின்ச்’ஐ பாராட்டிய இந்திய அணி கேப்டன் விராட் கோலி மற்றும் தோனி ஆகியோர் மேலும் தங்களது அன்பு பரிசாக தங்களுடைய ஜெர்சிகளை ‘ஃபின்ச்’க்கு கொடுத்தனுப்பினர்.
இந்நிலையில் தற்போது ஃபின்ச் அந்த இரு ஜெர்சிகளையும் தனது இரு கைகளால் பிடித்தபடி உள்ள தனது புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ ‘இன்ஸ்டாகிராம்’ மற்றும் ‘டிவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் இந்த புகைப்படத்துக்கு கீழே அவர் கூறுகையில், “எல்லாக் காலத்திலும் மிகச் சிறந்த வீரர்களாக அறியப்படும் ‘மகேந்திர சிங் தோனி’ மற்றும் ‘விராட் கோலி’ ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். உங்களது இந்த ஜெர்சிகள் கிடைக்க நான் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான். இந்த இரு வீரர்களுக்கு எதிராக நான் விளையாடிய தருணங்கள் மிகச் சிறப்பானவை. இதற்காக நான் உண்மையிலேயே பெருமை கொள்கிறேன்”. இவ்வாறு ஃபின்ச் கூறியுள்ளார்.
‘ஆரோன் ஃபின்ச்’ விரைவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை போட்டித் தொடரில் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்த உள்ளார். இதற்கான பயிற்சியில் தற்போது அவர் ஈடுபட்டு வருகிறார். மேலும் இந்த உலகக் கோப்பைக்காக அவர் தற்போது நடைபெற்று வரும் ‘ஐபிஎல்’ தொடரில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி உலகக் கோப்பையில் தனது முதல் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை சந்திக்கிறது. அதற்கு அடுத்ததாக தனது இரண்டாவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து மோதுகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா மோதல்கள் எப்பொழுதும் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்துள்ளது.
மேலும் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு வருட தடைக்காலம் முடிந்து மீண்டும் அணியில் இணைய உள்ள ‘ஸ்மித்-வார்னர்’ வருகையால் ஆஸ்திரேலிய அணி புதிய பலம் பெற்றுள்ளது. எனவே இந்தப் போட்டி எதிர்பார்ப்புக்குரிய ஒரு போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.