ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் 5 இந்திய வீரர்கள்

கிறிஸ் கெயில்
கிறிஸ் கெயில்

உலகில் அதிக மக்களால் பார்க்கப்படும் டி 20 லீக் தொடர் ஐபிஎல். இது 2008 ஆம் ஆண்டு தொடங்கி 11 வருடங்களாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் போட்டிகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி வீரர்களும் இந்தியாவை சேர்ந்த உள்ளூர் வீரர்களும் விளையாடி வருகின்றனர். சர்வதேச வீரர்களுக்கு இணையாக இந்திய உள்ளூர் வீரர்களும் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

எட்டு அணிகள் பங்குபெறும் ஐபிஎல் தொடரை அதிகபட்சமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று முறை வென்றுள்ளது. அதே போல் தில்லியை சேர்ந்த அணியான டெல்லி கேப்பிடல்ஸ் ஒரு முறை கூட இறுதி சுற்றுக்கு முன்னேறாத ஒரே அணி ஆகும். ஐபிஎல் போட்டிகளில் பல்வேறு உலக சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று கிறிஸ் கெயில் ஒரே இன்னிங்சில் அடித்த 175 ரன்கள். விராட் கோலி 2016ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி தொடரில் 4 அடித்த சதங்கள்.

பவுலிங்கிலும் வீரர்கள் சிலர் சாதனை புரிந்துள்ளனர் பாகிஸ்தான் நாட்டு வீரர் சோஹைல் தன்வீர் 14 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்கள் கைப்பற்றினார். இதுவே இன்றளவும் ஐபிஎல் தொடரில் சிறந்த பந்துவீச்சு ஆகும்.

ஐபிஎல் தொடரில் பந்துவீச்சாளர்கள் 17 முறை ஹாட்ரிக் விக்கெட் எடுத்துள்ளனர். இவற்றில் 12 ஹாட்ரிக் இந்திய வீரர்களால் எடுக்கப்பட்டது ஆகும். 2015, 2018 ஐபிஎல் தவிர எஞ்சிய அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் பந்துவீச்சாளர்கள் ஹாட்ரிக் விக்கெட் எடுத்துள்ளனர்.

சோஹைல் தன்வீர்
சோஹைல் தன்வீர்

ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் 5 இந்திய வீரர்களை பற்றி இந்த தொகுப்பில் காண்போம்

#5. லட்சுமிபதி பாலாஜி

2003-04 ஆம் ஆண்டு கிரிக்கெட் பார்க்க துவங்கிய ரசிகர்கள் மறக்க முடியாத வீரர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்த லட்சுமிபதி பாலாஜி. வேக பந்துவீச்சாளரான பாலாஜி 2003/04 ஆம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டில் இந்திய அணி ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டி தொடர் வெல்ல முக்கியமான காரணமாக இருந்தார். முதுகின் பின்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை வெகு விரைவில் முற்றுப்பெற்றது.

லட்சுமிபதி பாலாஜி
லட்சுமிபதி பாலாஜி

ஐபிஎல்-லை பொறுத்தவரை பாலாஜி 7 ஆண்டுகளில் 73 போட்டிகள் விளையாடி 76 விக்கெட்கள் கைப்பற்றினார். அவர் சென்னை அணிக்காக முதல் சீசனில் விளையாடிய பொழுது ஐபிஎல் வரலாற்றின் முதல் ஹாட்ரிகை எடுத்தார். பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டத்தின் கடைசி ஓவரில் இர்பான் பதான், பியுஷ் சாவ்லா, விக்ரம் சிங் விக்கெட்டுகளை கைப்பற்றி சென்னை அணி 18 ரன்களில் போட்டியை வெல்ல உதவினார். அந்த போட்டியில் 24 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்கள் கைப்பற்றினார். இதுவே ஐபிஎல் போட்டிகளில் அவரது சிறப்பான பந்துவீச்சாகும். கடைசியாக 2014 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடினார்.

ஐபிஎல் போட்டிகளில் சென்னை, கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் சார்பில் 7 சீசன்கள் விளையாடி 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள பாலாஜி, 2016 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

சிறிது காலம் கொல்கத்தா அணியின் பந்துவீச்சு ஆலோசகராக பணியாற்றிய பாலாஜி தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக உள்ளார்.

#4. பிரவீன் குமார்

சமீப காலமாக இந்திய ரசிகர்களால் மறக்கபட்ட வீரர்களில் ஒருவர் பிரவீன் குமார். 2007 ஆம் ஆண்டு துவங்கி 5 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடினார் பிரவீன் குமார். 2008-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் இந்திய அணி வெற்றி பெற உதவினார் பிரவீன் குமார். 2011-ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்காண அணியில் தேர்வு செய்யப்பட்டார். காயம் காரணமாகப் பின்னர் அணியிலிருந்து விலகினார்.2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணிக்காக அவர் விளையாடத் தேர்வு செய்யப்படவில்லை.

ஐபிஎல் போட்டிகளில் 5 அணிகளுக்காக பிரவீன் குமார் விளையாடியுள்ளார். 111 போட்டிகளில் 90 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

பிரவீன் குமார்
பிரவீன் குமார்

2010 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணிக்காக அவர் ஹாட்ரிக் எடுத்தார். டேமியன் மார்ட்டின், பாராஸ் டொக்ரா, சுமித் நர்வால் ஆகியோரை மூன்று பந்துகளில் ஆட்டமிழக்க செய்து தனது ஹாட்ரிக்கை எடுத்தார். பிரவீன் குமாரின் அதிரடி பந்துவீச்சில் 92 ரன்களுக்கு ராஜஸ்தான் அணி சுருண்டது. பின்னர் ஆடிய பெங்களூரு 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆட்டத்தை வென்றது.

அந்த வருடம் ஐபிஎல் போட்டிக்கு பிறகு பெங்களூரு அணியில் இருந்து பிரவீன் குமார் விடுவிக்கபட்டார். பின்னர் ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப்,மும்பை,ஹைதராபாத்,குஜராத் அணியில் இடம் பெற்ற போதிலும் அவரால் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. இதனால் 2018-ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் அவரை எந்த அணியும் வாங்கவில்லை.

2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் பிரவீன் குமார்.

#3. அமித் மிஸ்ரா

அமித் மிஸ்ரா 
அமித் மிஸ்ரா

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் திறமை இருந்தும் அதிகம் வாய்ப்பு கிடைக்காத வீரர்களில் ஒருவர் அமித் மிஸ்ரா. 2003 ஆம் ஆண்டு தனது 21 வயதில் இந்திய அணிக்காக களமிறங்கிய மிஸ்ரா, 2008 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் இந்திய அணியில் ஒரு நிரந்தர இடம் பெற்றார். அஸ்வின், ஜடேஜா போன்ற ஸ்பின்னர்கள் வருகையால் தற்பொழுது அவர் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டுளார்.

இருந்தபோதும் ஐபிஎல் தொடரில் மிக முக்கியமான வீரர்களில் ஒருவராக அமித் மிஸ்ரா உள்ளார்.11 ஐபிஎல் சீன்களில் 136 போட்டிகள் விளையாடிய மிஸ்ரா 146 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் லசித் மலிங்காவுக்கு பின் உள்ளார் மிஸ்ரா. மிஸ்ரா ஐபிஎல் போட்டிகளில் டெல்லி, டெக்கான் சார்ஜ்ர்ஸ்,சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை ஹாட்ரிக் எடுத்த வீரர் என்ற சாதனைக்கு சொந்தகாரர் அமித் மிஸ்ரா. 2008 ஐபிஎல் தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணிக்காக தனது முதல் ஐபிஎல் ஹாட்ரிக் எடுத்தார். ஆட்டத்தின் கடைசி ஓவரில் ரவி தேஜா, ஆர் பி சிங், பிராகியான் ஓஜாவை வீழ்த்தி டெல்லி அணி 12 ரன்களில் வெற்றி பெற செய்தார்.

2011 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி தொடரில் கிங்ஸ் 11 பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெக்கான் சார்ஜ்ர்ஸ் அணிக்காக இரண்டாவது ஹாட்ரிக் எடுத்தார் மிஸ்ரா. பஞ்சாப் அணியின் ரயன் மேக்லர்ன், அபிஷேக் நாயர், மந்தீப் சிங்கை ஆட்டம் இழக்க செய்து ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்தார்.

2013ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹாட்ட்ரிக் அணிக்காக விளையாடிய போது புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தனது மூன்றாவது ஹாட்ரிக் எடுத்தார் மிஸ்ரா. ஆட்டத்தின் கடைசி ஓவரில் புவனேஸ்வர் குமார், ராகுல் சர்மா, அசோக் திண்டா ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி சன் ரைசர்ஸ் அணி 11 ரன்களில் வெற்றி பெற உதவி செய்தார்.

தற்போது ஐபிஎல் தொடரில் மிஸ்ரா டெல்லி காப்பிடல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

#2. யுவராஜ் சிங்

யுவராஜ் சிங்
யுவராஜ் சிங்

இந்திய அணியின் சிங்கம் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் யுவராஜ் சிங். 19 வயதுக்கு உற்பட்டோர்க்கான உலக கோப்பையை வென்ற இந்திய அணியின் முக்கிய வீரரான யுவராஜ் சிங் தனது 19ஆம் வயதில் இந்திய அணியில் இடம் பெற்றார். 2007 ஆம் ஆண்டு இந்திய அணி டி20 உலக கோப்பை வெல்லவும், 2011 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலக கோப்பை வெல்லவும் முக்கிய காரணமானவர்களில் ஒருவர் யுவராஜ் சிங். 2007 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 உலக கோப்பை போட்டி ஒன்றில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஓவரின் அனைத்து பந்துகளிலும் சிக்ஸர் அடித்தார் யுவராஜ். அந்தப் போட்டியில் 12 பந்துகளில் அரை சதம் அடுத்து உலக சாதனை புரிந்தார் யுவராஜ் சிங். சமீப காலமாகச் சரியாக விளையாடாத காரணதால் யுவராஜ் சிங் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை 5 அணிகளுக்கு விளையாடி உள்ளார் யுவராஜ் சிங்.128 போட்டிகளில் 2652 ரன்கள் குவித்து 36 விக்கெட்கள் கைப்பற்றியுள்ளார். பேட்டிங்கில் மட்டுமின்றி பந்துவீச்சிலும் யுவராஜ் சில சாதனைகள் செய்துள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் ஒரே சீனில் இரண்டு முறை ஹாட்ரிக் எடுத்த ஒரே வீரர் யுவராஜ் சிங். 2009ஆம் ஆண்டு பஞ்சாப் அணியின் கேப்டனாக யுவராஜ் சிங் இருந்தபோது பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜாக் காலிஸ், ராபின் உத்தப்பா, மார்க் பவுச்சர் ஆகியோர் விக்கெட்டைக் கைப்பற்றித் தனது முதல் ஹாட்ரிக்கை எடுத்தார்.

அதே ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹெர்ஷல் கிப்ஸ், சைமண்ட்ஸ், வேணு கோபால் ராவ் ஆகியோரை அடுத்தடுத்து ஆட்டமிழக்க செய்து தனது இரண்டாம் ஹாட்ரிக்கை பதிவு செய்தார்.

டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகளைப் புரிந்த யுவராஜ் சிங் 2016 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை வென்ற சன் ரைசர்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தார்.

#1. ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா

உலக கிரிக்கெட்டில் மிகவும் முக்கியமான துவக்க ஆட்டக்காரர்களில் ஒருவர் ரோஹித் சர்மா. 2007 ஆம் ஆண்டு இந்திய அணியில் இடம் பெற்ற அவர் 2013 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ஆக உள்ளார். ஒரு நாள் போட்டியில் மூன்று 200 ரன்களை அடித்த முதல் வீரர், சர்வதேச டி20 போட்டிகளில் 4 சதம் அடித்த முதல் வீரர் போன்ற பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் ரோஹித் சர்மா. ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியின் துணை கேப்டனாக உள்ளார் ரோஹித் சர்மா.

முதல் 3 ஐபிஎல் தொடர்களில் டெக்கான் சார்ஜ்ர்ஸ் அணிக்காக விளையாடினார் ரோஹித். 2009 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி தொடரில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் அபிஷேக் நாயர், ஹர்பஜன் சிங், டுமினி ஆகியோரை ஆட்டமிழக்க செய்து ஹாட்ரிக் எடுத்தார் ரோஹித் சர்மா. அந்த ஆண்டு டெக்கான் சார்ஜ்ர்ஸ் அணி ஐபிஎல் தொடரை வென்றது.

பின்னர் 2011 ஆம் ஐபிஎல் ஏலத்தில் ஆண்டு மும்பை அணிக்காக விளையாட வாங்கபட்டர். ஐபிஎல் தொடரில் 173 போட்டிகள் விளையாடி 4493 ரன்கள் குவித்து15 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் ரோஹித் சர்மா.

2013 ஐபிஎல் தொடரின் நடுவில் மும்பை அணியின் கேப்டன் பதவி ஏற்றார். அதன் பின் அவர் தலைமையில் மும்பை அணி 3 முறை ஐபிஎல் பட்டத்தை வென்றுள்ளது.மேலும் 2013 ஆம் ஆண்டு் அவர் தலைமையில் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரை வென்றது

ரோஹித் சர்மா தோனி மற்றும் கவுதம் கம்பீரை காட்டிலும் கேப்டனாக சிறந்த வெற்றி விகிதம் வைத்துள்ளார்.

Quick Links

App download animated image Get the free App now