இந்திய அணியின் ஆல்-டைம் ஓடிஐ/டி20 கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங். 19 வருட தனது கிரிக்கெட் பயணத்தை தனது 37 வயதில் முடித்துள்ளார். பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான யுவராஜ் சிங் தற்போது அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றுள்ளார்.
இவர் இந்திய அணிக்காக கடைசியாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பங்கேற்றார். அதன்பின் தனது ஆட்டத்திறனை இழந்த காரணத்தால் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இவரை கண்டுகொள்ளவில்லை.
ஐபிஎல் தொடரிலும் தனது சிறப்பான ஆட்டத்திறனை வெளிபடுத்த இயலாமல் தவித்து, மும்பை இந்தியன்ஸ் அணியில் தன்னுடைய இடத்தை தக்க வைக்க தவறினார். இருப்பினும் கடந்த காலங்களில் இந்திய கிரிக்கெட் அணிக்காக ஒருநாள்/டி20 கிரிக்கெட்டில் தனது பங்களிப்பை சிறப்பான முறையில் அளித்துள்ளார்.
குறிப்பாக 2007 டி20 உலகக் கோப்பை தொடரிலும், 2011 உலகக் கோப்பை தொடரிலும் இந்திய அணிக்காக யுவராஜ் சிங்கின் பங்களிப்பை யாரும் மறந்திருக்க முடியாது. யுவராஜ் சிங் அவரது சிறப்பான கிரிக்கெட் வாழ்வில் இந்திய அணியை அதிக போட்டிகளில் வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அந்த சிறப்பான ஆட்டங்களை பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. நாம் இங்கு யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்வில் சிறந்த 5 இன்னிங்க்ஸ்களை பற்றி காண்போம்.
#5 ஐசிசி நாக்-அவுட் கோப்பை, 2000 காலிறுதி vs ஆஸ்திரேலியா - 84 ரன்கள்
இந்தப்போட்டி நடைபெறுவதற்கு முன்பாக யுவராஜ் சிங் ஒரு சில சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்தார். தனது அதிரடி ஆட்டத்தை சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகப்படுத்த வேண்டும் என எண்ணிணார். அந்தப் போட்டி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் நாக்-அவுட் கோப்பையின் காலிறுதிப் போட்டி, எதிரணி ஆஸ்திரேலியா, அப்போது இளம் வீரராக களமிறங்கிய யுவராஜ் சிங் ஒரு சிறு நெருக்கடி இல்லாமல் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்திய அணி 90 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி கொண்டிருந்தது. இந்திய நட்சத்திர வீரர்களான சச்சின் டெண்டுல்கர், சவ்ரவ் கங்குலி, ராகுல் டிராவிட் ஆகியோர் தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். ஆஸ்திரேலிய அணியின் மின்னல் வேக பந்துவீச்சாளர்களான க்ளன் மெக்ராத், பிரெட் லீ, ஜேஸன் கில்லஸ்பி ஆகியோரின் பந்துவீச்சை இந்திய டாப் ஆர்டர் சமாளிக்க தவறியது.
இருப்பினும் யுவராஜ் சிங் களமிறங்கி அதிரடியான மற்றும் சிறப்பான பேட்டிங்கை வெளிபடுத்தி 80 பந்துகளில் 84 ரன்களை குவித்தார். இவரது இந்த அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு 50 ஓவர் முடிவில் 265 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
#4 2011 ஐசிசி உலகக் கோப்பை குருப் ஸ்டேஜ் vs மேற்கிந்தியத் தீவுகள் - 113 ரன்கள்
இந்திய அணி 2011ல் சொந்த மண்ணில் நடந்த நடந்த உலகக் கோப்பை தொடரை கைப்பற்றியது. 28 ஆண்டுகளாக இந்திய ரசிகர்களின் காத்திருப்பு 2011ல் முடிவுக்கு வந்தது. இதனை இந்திய ரசிகர்கள் எப்பொழுதுமே மறக்க மாட்டார்கள்.
இந்த உலகக் கோப்பையை கைப்பற்ற பெரும் பங்களிப்பை அளித்தவர் யுவராஜ் சிங். இதற்கு சான்றாக அவ்வருட உலக கோப்பையின் தொடர் ஆட்டநாயகன் விருதினை யுவராஜ் சிங் வென்றார். இந்த தொடரில் யுவராஜ் சிங்கின் சிறப்பான ஆட்டம் சென்னையில் நடந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் வந்தது.
இந்த ஆட்டத்திறனை யுவராஜ் சிங்கால் எப்போதுமே மறக்க முடியாது. ஏனெனில் இந்தப் போட்டியில் தான் அவருக்கு புற்றுநோய் அறிகுறி தென்பட்டது. இருப்பினும் அதனை எதிர்த்து போராடி இப்போட்டியில் சதம் விளாசினார்.இந்திய அணி இப்போட்டியில் 268 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. யுவராஜ் சிங்கின் அதிரடி மற்றும் பொறுப்பான ஆட்டமே இதற்கு முக்கிய காரணம். இந்தப் போட்டியில் இவருக்கு மறுமுனையில் அவ்வளவாக சப்போர்ட் கிடைக்கவில்லை.
இந்திய அணி இப்போட்டியில் வெற்றி பெற்றது. யுவராஜ் சிங்கின் அதிரடி ஆட்டம் இப்போட்டியில் வெளிபடாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக இந்தப் போட்டியில் இந்திய வெற்றி பெறுவது கேள்விக் குறியாக இருந்திருக்கும்.
#3 இரு தரப்பு ஒருநாள் தொடர், 2017 vs இங்கிலாந்து - 150 ரன்கள்
ஜனவரி 19, 2017ல் கட்டாக்கில் நடந்த இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் யுவராஜ் சிங் 150 ரன்களை குவித்தார். இது அவரது சிறப்பான இன்னிங்ஸ் மட்டுமல்லாமல் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் அவரது சிறப்பான வருகையை உலகிற்கு அறிவிக்கும் படியாகும் இந்த இன்னிங்ஸ் இருந்தது.
இந்த சிறப்பான ஆட்டம் தற்போது வரை ஒரு ஸ்பெஷல் இன்னிங்ஸாக பார்க்கப் படுகிறது. எம்.எஸ். தோனியுடன் இப்போட்டியில் 256 ரன்கள் பார்ட்னர் ஷிப் செய்து விளையாடினார் யுவராஜ் சிங். அத்துடன் தோனி யுவராஜ் சிங்குடன் கை கோர்க்கும் போது இந்தியா 25 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. இரு ஓடிஐ/டி20 பேட்ஸ்மேன்களும் இணைந்து சிறப்பான பார்ட்னர் ஷிப்பை உருவாக்கினர்.
யுவராஜ் சிங்கின் சிறந்த ஆட்டத்தினால் 150 ரன்களும், எம். எஸ். தோனியின் 134 ரன்களின் மூலம் இந்திய அணி 381 ரன்களை இலக்காக இங்கிலாந்திற்கு எதிராக நிர்ணயித்தது. இறுதியாக இந்திய அணி இந்த போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, இதற்கு முழு காரணம் யுவராஜ் சிங் மற்றும் தோனியின் சிறப்பான ஆட்டமே.
இந்த இரு சிறந்த பேட்ஸ்மேன்களின் பார்டனர் ஷீப்பின் மூலம் அதிரடி ஆட்டத்தை கடைசியாக ஒருமுறை இந்திய ரசிகர்கள் கண்டனர். இது அவர்களது அதிர்ஷ்டம் என தற்போது வரை எண்ணுகின்றனர்.
#2 ஐசிசி டி20 உலகக் கோப்பை 2007, சூப்பர் 8 vs இங்கிலாந்து - 58 ரன்கள்
இந்தப் போட்டியில் தான் யுவராஜ் சிங் ஸ்டுவர்ட் பிராட் ஓவரின் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை விளாசி சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேக அரைசதத்தை விளாசினார். ஸ்டுவர்ட் பிராடின் பந்துவீச்சிற்கு எதிராக அதிரடி பேட்டிங் மற்றும் இங்கிலாந்திற்கு எதிரான 2007 டி20 உலகக் கோப்பையை எந்த இந்திய ரசிகர்களும் மறந்திருக்க மாட்டார்கள்.
அப்போதைய இங்கிலாந்து கேப்டன் ஆன்ரிவ் ஃபிளின்ட் ஆஃப் யுவராஜ் சிங்கை நகைப்பிற்கு உள்ளாக்கியுள்ளார். இந்த கோபத்தை ஸ்டுவர்ட் பிராட் வீசிய ஓவரில் வெளி கொண்டு வந்துவிட்டார். இதனை ஸ்டுவர்ட் பிராட் சற்றும் எதிர் பார்த்திருக்க மாட்டார். தென்னாப்பிரிக்காவில், டர்பன் நகரில் உள்ள கிங்ஸ்மேட் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் 19வது ஓவரில் யுவராஜ் சிங் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை விளாசி சிக்ஸர் மழையை பொழிய விட்டார்.
யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரைசதம் குவித்தார். இந்த போட்டியில் யுவராஜ் சிங் அடித்த 58 ரன்கள் இந்திய அணிக்கு மிகவும் உதவியாக இருந்தது. ஏனெனில் இந்திய அணி இப்போட்டியில் வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெறும். ஐசிசி நடத்திய முதல் டி20 உலகக் கோப்பையில் யுவராஜ் சிங் சிறப்பான ரன்களை குவித்து இந்திய அணிக்கு டி20 உலகக் கோப்பையை பெற்றுத் தந்தார். இந்த அணி முழுவதும் இளம் வீரர்களால் நிரம்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
#1 2007 ஐசிசி டி20 உலகக் கோப்பை, அரையிறுதி vs ஆஸ்திரேலியா - 70 ரன்கள்
யுவராஜ் சிங் சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்திற்கு எதிராக 58 ரன்களை சாதாரணமாக விளாசினார். ஆனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் அவரது அதிரடி ஆட்டம் அதை விட சிறப்பானதாக இருந்தது. தனது அதிரடி பேட்டிங் மூலம் ஆஸ்திரேலிய பந்துவீச்சை துவம்சம் செய்தார்.
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் யுவராஜ் சிங் காயம் காரணமாக இடம்பெறவில்லை. அதற்கு முந்தைய போட்டியில் தான் யுவராஜ் சிங் இங்கிலாந்திற்கு எதிராக அதிவேக 58 ரன்களை குவித்தார். இருப்பினும் காயம் காரணமாக அவர் எடுத்துக் கொண்ட சிறு இடைவெளி அவரது ஆட்டத்திறனை பாதிக்கவில்லை. இங்கிலாந்திற்கு எதிராக இருந்த ஆட்டத்திறனை விட அதிகம் மேம்பட்டுதான் இருந்தது.
அதிரடி மன்னன் யுவராஜ் சிங் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அந்த போட்டியில் 30 பந்துகளில் 70 ரன்களை விளாசி தன்னை ஆட்டத்தை மாற்றுபவராக நிரூபித்தார். இதன் மூலம் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்களை 20 ஓவர் முடிவில் குவித்தது. இறுதியாக ஆஸ்திரேலியா 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்திய முதல் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் பாகிஸ்தானிற்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்த டி20 உலகக் கோப்பையை கைப்பற்ற இந்திய அணிக்கு மிகுந்த பக்கபலமாக இருந்தவர் யுவராஜ் சிங்.