கிரிக்கெட் வீரருக்கு அவரது ஓய்வை அறிவிப்பது என்பது மிகவருத்தமான காரியம். இது கிரிக்கெட்டுக்கு மட்டும் அல்ல அனைத்து விதமான விளையாட்டுகளுக்கும் பொருந்தும். தனது வாழ்நாளில் பாதி விளையாடிவிட்டு பின்பு அதை விட்டு விலகுவது என்பது சாதாரண காரியமில்லை. அண்மையில் இந்தியாவின் முன்னாள் தொடக்க வீரரான கவுதம் கம்பிர் தனது ஓய்வை அறிவித்தார்.அந்த தருணத்தில் அவர் கூறுகையில் - "என் வாழ்நாளில் நான் எடுத்த முடிவுகளில் மிக கடினமான முடிவு இது. என் இதயத்தில் அவ்வளவு கனத்துடன் இதை கூறுகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
உலகத்தில் எந்த விளையாட்டாக இருந்தாலும் அதில் பங்கேற்கும் வீரர்கள் தனது முழு பங்கையும் அளிப்பர். சிலர் அந்த விளையாட்டின் மீதுள்ள ஈடுபட்டால் தங்களையும் வருத்திக்கொண்டு பங்களிப்பர். ஆனால் சில வயதுடன் மட்டும் தான் அதை செய்ய முடியும். அதற்கு மேல் மனதில் வீரமாக இருந்தாலும் உடல் ஒத்துழைப்பு தராது. அதனால் வயதான உடன் ஓய்வு அறிவிப்பு என்பது ஒரு விளையாட்டில் சகஜம். இப்பதிவில் நாம் காணவிருப்பது வேறு சிலகாரணங்களால் சிறு வயதிலேயே ஓய்வை அறிவித்த 5 வீரர்களை பற்றி.
#1 டடன்டா டைபு (ஜிம்பாப்வே)
உலக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக குறைந்த வயதில் கேப்டன் பொறுப்பை பெற்ற வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். இவருக்கு அப்பொறுப்பு வழங்கிய பொழுது 21 வயது. இவரது தலைமையில் ஜிம்பாப்வே அணி நல்ல வளர்ச்சி பாதையில் சென்றது. ஆனால் குறிகிய காலத்திலேயே இவர் தனது ஓய்வை அறிவித்தார். 29வது வயதில் மதக்காரணங்களை மேற்கோள்காட்டி ஓய்வு பெறுவதாக கூறினார். அதற்கு ஒரு நாள் முன்பு தான் ஜிம்பாப்வே கிரிக்கெட் நிர்வாகம் உலகக்கோப்பை டி20 போட்டிக்கான 30 பேர் கொண்ட அணியில் இவரை அறிவித்து இருந்தது. இவரது திடீர் அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
28 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 150 ஒருநாள் போட்டிகளில் ஜிம்பாப்வே அணிக்காக விளையாடியுள்ள டைபு, ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக பங்கு பெற்றுள்ளார். இவரது 11 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் ஆண்டி ப்பிளவரருக்கு பிறகு விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக செயல்பட்ட வீரர் என்ற பெருமையும் பெற்றார். தற்போது ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவில் ஒரு முக்கிய பொறுப்பு வகிக்கிறார்.
#2 ஜேம்ஸ் டெய்லர் (இங்கிலாந்து)
இங்கிலாந்து அணி வீரரான இவர் விளையாடிய குறுகிய காலத்திலேயே தனது திறமையை நிரூபித்தார். இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வளம் வருவார் என நம்பப்பட்ட நிலையில், 26 வயதில் தனது ஓய்வை அறிவிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். இருதய நோய் இருப்பதை உணர்ந்த டெய்லர் மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் இம்முடிவை எடுத்தார். இவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாத போட்டியாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அமைந்தது. மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 98 எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதே போல் 2015ம் ஆண்டு ஐயர்லாந்து சென்ற பொழுது இங்கிலாந்து அணி கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். இதுவரை 7 டெஸ்ட் மற்றும் 27 ஒருநாள் போட்டிகளில் பங்குபெற்றுள்ள டெய்லர், 2018ம் ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்து தேர்வு குழுவில் இடம் பெற்றார்.