வேகப்பந்து வீச்சாளர்கள் என்றால் அனைவருக்கும் முதலில் நியாபகம் வருபவர் பாகிஸ்தான் அணியின் சோயிப் அக்தர். வேகப்பந்து வீச்சாளர்களின் அரசன் என்ற பெருமை இவருக்கு உலக கிரிக்கெட்டில் உள்ளது. இவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று 8 வருடங்களுக்கு மேல் ஆகிறது. ஆனால் இவரது பந்துவீச்சு வேக சாதனையை யாரும் முறியடிக்கவில்லை. 2003 உலககோப்பையில் இங்கிலாந்து அணிக்கு எரான ஒரு போட்டியில் சோயிப் அக்தர் 161.3 கி.மீ வேகத்தில் வீசினார். இந்த அளவிற்கு வேகத்தில் இன்று வரை எந்த பந்துவீச்சாளர்களும் பந்துவீசியது கிடையாது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த மிட்செல் ஸ்டார்க் இச்சாதனைக்கு அருகில் வரும் விதாமாக 160.04 கீ.மீ வேகத்தில் நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் வீசியுள்ளார்.
நிறைய வேகப்பந்து வீச்சாளர்கள் இந்த சாதனையை முறியடிக்க முயற்சி செய்து வருகின்றனர். பொதுவாக வேகப்பந்து வீச்சிற்கு கடின உழைப்பு மற்றும் சரியான உடற்தகுதி கண்டிப்பாக வேண்டும். தற்போதைய தலைமுறையில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு தனியாக உடற்பயிற்சி மையம் மற்றும் உடற்பயிற்சியாளர் என அனைத்து வசதிகளையும் கிரிக்கெட் வாரியம் செய்து தருகிறது. எனவே இதன்மூலம் வேகப்பந்து வீச்சாளர்களின் ஆட்டத்திறனை மேலும் மேம்படுத்த முடியும்.
அந்த வகையில் பார்க்கும்போது தற்போதைய தலைமுறையில் விளையாடும் கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர்களுள் சிறந்த 5 வேகப்பந்து வீச்சாளர்களை பற்றி காண்போம். ( இது தொடர்ந்து அணியில் விளையாடும் குறைந்தது 20 ஓடிஐ போட்டிகளிலாவது பங்கேற்றுள்ள வீரர்கள் மட்டுமே இந்த வரிசையில் இடம்பெற்றுள்ளனர். சில சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் சிவம் மாவி, உமேஷ் யாதவ் , பில்லி ஸ்டான்லெக் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை )
#5.ஓஸான் தாமஸ்
இந்திய தொடரில் அறிமுகமான இளம் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஓஸான் தமாஸ் சிறப்பான வேகத்தில் பந்தை வீசுகிறார். இந்திய தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்கார்களான ரோகித் மற்றும் தவான் ஆகியோரை ஆட்டம் ஆரம்பித்த விரைவிலே விக்கெட்டுகளை வீழ்த்தி சிறந்த எகனாமிகல் ரேட் வைத்துள்ளார். இவரது உயரம் 6 அடிக்கு மேல் என்பதால் எக்ஸ்ட்ரா பவுண்ஸ் சிறப்பாக வீசி முற்கால மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஜாம்பவான்களை நியாபகப்படுத்துகிறார்.
21 வயதுள்ள இவர் ஆட்டத்தை தனது உள்ளங்கையில் அடக்கும் விதமாக சிறப்பான முறையில் பந்துவீச்சை மேற்கொண்டு வருகிறார். இந்திய தொடரில் இவரது பௌலிங் சிறப்பான முறையில் இருந்ததால் 2019 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 1.1 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவரது பௌலிங் வேகத்திறன் இளம் வயதிலேயே சிறப்பான முறையில் இருப்பதால் வருங்காலத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் நட்சத்திர பௌலராக ஜொலிக்க அதிக வாய்ப்புள்ளது.
#4.லாக்கி பெர்குசன்
நியூசிலாந்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன் மிடில் ஓவரில் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் வல்லவர். இவரது அதிவேக வேகப்பந்து வீச்சு மற்றும் பௌலிங் நுணுக்கங்கள் எதிரணி பேட்ஸ்மேன்களை அதிக நேரம் பேட்டிங் செய்ய அனுமதிக்காது. இவர் 21 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 36 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். நியூசிலாந்து அணியில் சிறப்பாகவும் சீராகவும் பந்துவீச்சை வெளிப்படுத்தக்கூடியவர் லாக்கி பெர்குசன்.
இவரது குறைவான இந்த கிரிக்கெட் வாழ்க்கையில் உலகின் டாப் கிளாஸ் பேட்ஸ்மேன்களை தனது அதிவேக பந்துவீச்சாள் மிரட்டி வருகிறார். இவர் சராசரியாக 150கீமீ வேகத்தில் பந்து வீச்சை மேற்கொள்கிறார். அத்துடன் 150 கீமீ வேகத்திற்கு மேலாகவும் பந்துவீச்சை மேற்கொள்ளும் திறமை வாய்ந்தவராக உள்ளார். இவரது பௌலிங் அதிரடியாகவும் , இவரது பந்துவீச்சில் அதிக ரன்கள் போகதாவாறும் இருக்கும்.
இவரது முக்கியமான திறனே ஷார்ட் பிட்ச் பௌலிங் தான் . இதை சரியாக பயன்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்துகிறார். இவர் ஒரு இளம் பந்துவீச்சாளர் என்பதால் வருங்காலத்தில் இவரது பௌலிங் வேகதிறன் அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது.
#3.காகிஸோ ரபாடா
தற்போதைய வேகப்பந்து வீச்சாளர்களை பற்றி நாம் நினைத்தால் நமக்கு முதலில் நியாபகம் வருபவர் காகிஸோ ரபாடாதான் . 23 வயதான தென்னாப்பிரிக்கா பௌலர் பேட்ஸ்மேன்களை தனது அதிரடி பந்துவீச்சால் தினறடிக்கிறார். இவரது சராசரி பௌலிங் வேகம் 140 ற்கு மேலாக உள்ளது. தற்போதைய வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் அதிக வேக சராசரியை இவரே கொண்டுள்ளார்.
ரபாடா எந்த வகையான ஆடுகளாமாக இருப்பினும் சரி 150ற்கும் மேலான வேகத்தில் பந்துவீச்சை மேற்கொண்டு உள்ளார். பவுண்ஸ் மற்றும் யார்க்கர் என இவரது வெவ்வேறான பந்துவீச்சு ஸ்டைல் பேட்ஸ்மேன்களை திணறடிக்கிறது. இதன்மூலமே இவர் ஐசிசி டெஸ்ட் பௌலிங் தரவரிசையில் நீண்ட நாட்களாக முதலிடத்திலே உள்ளார்.இவரது அறிமுக போட்டியிலேயே வங்கதேசத்திற்கு எதிராக " ஹாட்ரிக் " விக்கெட்டுகளை வீழ்த்தினார். 36 டெஸ்டில் பங்கேற்றுள்ள இவர் 171 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 62 ஓடிஐ போட்டிகளில் பங்கேற்று 98 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
23 வயதான இளம் பந்துவீச்சாளரான இவர் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பான முறையில் அசத்தி வருகிறார். தென்னாப்பிரிக்கா அணியில் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் பந்துவீச்சில் அசத்தி வருகிறார் ரபாடா. வருங்காலத்தில் இவரது பௌலிங் சிறப்பான முறையில் மேம்படும் என்பது சந்தேகமில்லா உண்மையாகும். இவருக்கு காயம் ஏற்படாமல் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வந்தால் கண்டிப்பாக சோயிப் அக்தரின் சாதனையை முறியடிப்பார் .
#2.ஜாஸ்பிரிட் பூம்ரா
பூம்ரா இந்திய அணிக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய பொக்கிஷமாகும். வேகப்பந்துவீச்சில் மிகப்பெரிய ஆயுதமாக இந்திய அணியில் திகழ்கிறார் பூம்ரா. குறுகிய காலங்களில் தனது பந்துவீச்சை சிறப்பாக மேம்படுத்தி இன்-ஸ்விங் பௌலிங்கில் சிறப்பாக பந்துவீச்சை மேற்கொள்ள கூடியவர் ஆவார்.இதனை நாம் இங்கிலாந்து தொடரில் காண முடிந்தது.இங்கிலாந்து மண்ணில் இவரது பௌலிங் சிறப்பாக வேலைசெய்தது. இதன்மூலம் சர்வதேச அளவில் சிறந்த பௌலராக உயர்ந்தார் பூம்ரா. இவர் சர்வதேச கிரிக்கெட்டில் முதலில் விளைமாடிய போது 135 கீமீ வேகத்திற்கு மேலாக வீசிக்கொண்டிருந்தார். ஆனால் தற்போது நடந்து முடிந்த ஆஸ்திரேலிய தொடரில் 153 கீமீ வேகத்தில் சாதரணமாக வீசும் திறமை படைத்துள்ளார்.
இவரது சிறப்பான யார்க்கர் பௌலிங் பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிக்கும் வகையில் இருக்கிறது. அத்துடன் இந்திய அணியின் டெத் ஓவர் ஸ்பெஸலிஸ்ட் என்று அனைவராலும் புகழப்பட்டுவருகிறார்.சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய அணி முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. அந்த டெஸ்ட் இந்திய அணியில் பூம்ரா இடம்பெற்று எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு மிகுந்த நெருக்கடியை அளித்தார். பூம்ராவின் தனித்தன்மையான பந்துவீச்சு அவரை மேன்மேலும் சிறப்பான வீரராக மாற்றுகிறது.
பூம்ரா தனது பந்துவீச்சு வேகத்தை குறுகிய காலங்களில் உயர்த்தியுள்ளார். இவர் 150கீமீ வேகத்திற்கு தனது பந்துவீச்சு வேகத்தை அதிகரித்துள்ளார். இதனை சரியாக கடைபிடித்து வந்தால் சோயிப் அக்தரின் வேகத்தை எளிதாக முறியடிக்கலாம். பூம்ரா ஒருநாள் போட்டிகளில் 21 என்கிற சராசரியுடன் 78 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
#1.மிட்செல் ஸ்டார்க்
ஆஸ்திரேலிய அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மிகுந்த அதிவேக வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஆற்றல்மிக்க வேகப்பந்து வீச்சாளர் ஆவார். ஸ்டார்க் 2011ல் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமாகி தனது அற்புதமான வேகப்பந்து வீச்சால் பேட்ஸ்மேன்களை மிரட்டினார். ஸ்டார்கின் முதன்மை ஆயுதம் அவரது யார்க்கர் பௌலிங் தான். இவர் இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்பதால் பேட்ஸ்மேனால் கணிப்பது சற்று கடினமான ஒன்றாகும்.
ஸ்டார்கின் சராசரி பௌலிங் வேகம் 150ற்கும் மேலாக உள்ளது. 2015ல் நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 160.04 கீ.மீ வேகத்தில் வீசி சாதனை படைத்துள்ளார் ஸ்டார்க். ஆஸ்திரேலிய அணியில் பந்துவீச்சில் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார் மிட்செல் ஸ்டார்க். 2015 உலகக்கோப்பையை ஆஸ்திரேலிய அணி வெல்ல முழு காரணமாக இருந்தார் ஸ்டார்க். சமீபத்தில் ஆஸ்திரேலிய அணியின் சிறந்த பௌலராக ஸ்டார்க் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஸ்டார்க் 75 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 145 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரது எகானமி ரேட் ஒரு ஓவருக்கு 4.95 ஆக உள்ளது. இதுவரை நாம் பார்த்த பௌலர்களில் ஸ்டார்க் சிறந்த வேக யார்க்கர் மற்றும் டெத் ஓவரில் சிறப்பான முறையில் பந்து வீசக்கூடியவர் ஆவார். அத்துடன் தனது பௌலிங்கில் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களை விக்கெட் வீழ்த்தும் திறமை படைத்துள்ளார். இவரது பந்துவீச்சின் வேகம் ஆட்டத்திற்கு ஆட்டம் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. இன்றுவரை உலக கிரிக்கெட்டில் அதிவேக வேகப்பந்து வீச்சாளராக திகழ்கிறார் ஸ்டார்க்.