நியூஸிலாந்து மற்றும் இந்தியா இடையே நடைபெற்ற மறக்கமுடியாத 5 ஒருநாள் போட்டிகள்

இது சச்சின் டெண்டுல்கரின் மூன்றாவது ஒருநாள் போட்டியாகும்
இது சச்சின் டெண்டுல்கரின் மூன்றாவது ஒருநாள் போட்டியாகும்

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா விடம் மோதும் எதிர்பார்ப்பை காட்டிலும் நியூஸிலாந்து மற்றும் இந்தியாவிற்கு இடையே நடக்கும் போட்டிக்கு பெரிதாக ஒன்றும் எதிர்பார்ப்பு இருக்காது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் இந்தியா, இங்கிலாந்து அணிக்கு பிறகு பலம் வாய்ந்த அணியாக கருதப்படுவது நியூஸிலாந்து அணி தான். அதனாலேயே இத்தொடர் அதிக எதிர்பார்ப்பை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 101 முறை இவ்விரு அணிகளுக்கும் இடையே ஒரு நாள் போட்டி நடைபெற்றுள்ளது. இந்தியா 51 போட்டிகளிலும் நியூஸிலாந்து 44 போட்டிகளிலும் வெற்றி கண்டுள்ளது. ஏறத்தாழ இருவருமே சமநிலையில் தான் உள்ளனர். வரவிருக்கும் தொடர் 5 ஒருநாள் போட்டி மற்றும் 3 T20 போட்டிகள் கொண்டதாய் அமையவுள்ளது.

உலகக்கோப்பை 2015க்கு பிறகு நியூஸிலாந்து அணி சொந்த மண்ணில் அசைக்க முடியாத அணியாக வளர்ந்துள்ளது. இந்தியாவோ ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய உற்சாகத்துடன் இத்தொடரில் பங்கேற்க உள்ளது. ஆனால் ஆஸ்திரேலியாவை போல் நியூஸிலாந்து அணியை குறைத்து மதிப்பிட முடியாது. அதனால் கிரிக்கெட் ரசிகர்களின் கண்களுக்கு இத்தொடர் விருந்தாய் அமையக்கூடும். இதுவரை நியூஸிலாந்து மற்றும் இந்தியா இடையே நடைபெற்ற போட்டிகளில் மறக்க முடியாத 5 போட்டியை பற்றிய தொகுப்பை காணலாம்.

#5 ரோத்மான்ஸ் கோப்பை 1990

இப்போது நாம் காணவிருக்கும் ஆட்டம் 1990ம் ஆண்டு இந்திய அணி நியூஸிலாந்து சென்ற பொழுது நடைபெற்றது. முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி வென்றது. பிறகு மூன்று நாடுகள் பங்குபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா அணியுடன் இவ்விரு அணிகளும் பங்குகொண்டது. தொடரின் 4வது ஒருநாள் போட்டி வெல்லிங்டன் மைதானத்தில் நியூஸிலாந்து இந்தியா இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் அசாருதீன் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் ஆடிய இந்தியா 221 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கபில் தேவ் 46 ரன்கள் எடுத்தார். மனோஜ் பிரபாகர், மஞ்சரேக்கர்,சச்சின் ஆகியோர் தலா 36 ரன்கள் எடுத்தனர்.

222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கணக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து வீரர்கள் பொறுப்புடன் ஆடி, 3 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தனர். அதன் பிறகு தான் கபில் தேவ், மனோஜ் பிரபாகர், அதுல் வாசன் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சால் ஆட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. கடைசி ஓவரில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற 11 ரன்கள் எடுத்தால் போதும் என்று இருந்த பொது கபில்தேவ் பந்துவீசினார். முதல் மூன்று பந்துகளில் நியூஸிலாந்து வீரர்கள் 8 ரன்கள் சேர்த்தனர். 3 பந்தில் 3 ரன் என இருந்த போது 4வது பந்தில் இரண்டு ரன்கள் எடுக்க முயற்சித்து நியூஸிலாந்து அணியின் 9வது விக்கெட் ரன்அவுட் முறையில் விழுந்தது. கடைசி இரு பந்தையும் திறமையாக வீசிய கபில்தேவ் ரன்கள் எதுவும் வழங்காமல் இந்திய அணிக்கு வெற்றி தேடி தந்தார். இந்தியா 1 ரன் வித்தியாசத்தில் இப்போட்டியை வென்றது.

#4 நியூஸிலாந்து vs இந்தியா 2002-03

ஜவகல் ஸ்ரீநாத்தும், ஆஷிஷ் நெஹ்ராவும் ஒரு பந்து மீதமிருந்த நிலையில் வெற்றி தேடி தந்தனர்
ஜவகல் ஸ்ரீநாத்தும், ஆஷிஷ் நெஹ்ராவும் ஒரு பந்து மீதமிருந்த நிலையில் வெற்றி தேடி தந்தனர்

2002-03ம் ஆண்டில் நியூஸிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 7 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்றது. டெஸ்ட் தொடரை 0-2 என்று இழந்த இந்தியா, ஒருநாள் தொடரில் 5 போட்டிகள் முடிவில் 1-4 என்று பின்னிலையில் இருந்தது. இதுதொடரின் 6வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் பந்துவீசை தேர்வு செய்தார். 50 ஓவர் முடிவில் 199 ரன்கள் எடுத்தது நியூஸிலாந்து அணி. அந்த அணியின் ஸ்டைரிஸ் 42, ஷான் பாண்ட் 31 மற்றும் வின்சென்ட் 53 ரன்கள் முறையே சேர்த்தனர். இந்தியாவை பொறுத்தமட்டில் பந்துவீச்சில் ஜவகல் ஸ்ரீநாத் 10 ஓவர் வீசி 2 மெய்டன் உட்பட 13 ரன்கள் வழங்கி 3 விக்கெட் கைப்பற்றினார்.

200 ரன்கள் இலக்கை விரட்டிய இந்தியா, 142/1 என்ற வலுவான நிலையில் இருந்தது. தனது அதிரடி ஆட்டத்தால் அணியின் ஸ்கோரை உயர்த்திய விரேந்தர் சேவாக் 112 எடுத்த பொழுது ஆட்டமிழந்தார். 7 ஓவர் மீதம் இருந்த நிலையில் இந்தியா வெற்றி பெற 18 ரன்கள் தேவைபட்டது. கைவசம் 6 விக்கெட்டும் இருந்தது. அடுத்த 6 ஓவரில் 3 விக்கெட்டை இழந்த இந்தியா, 6 பந்தில் 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது. முதல் பந்தில் சஹீர் கான் ஒரு ரன்னும், இரண்டாவது பந்தில் ரன் ஏதும் எடுக்கப்படவில்லை, மூன்றாவது பந்தில் கைப் தன் விக்கட்டை இழந்தார். நான்காவது பந்து வைட் வீசப்பட்டும் சஹீர் கான் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

3 பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை வந்தது. மீண்டும் வீசப்பட்ட நான்காவது பந்தில் ஸ்ரீநாத் அவர்கள் 2 ரன்கள் ஓடி எடுக்க, முடிவில் இந்தியா 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி அடைந்தது.

#3 இந்தியா vs நியூஸிலாந்து 2016-17

விராட் கோஹ்லி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் ஒருநாள் சர்வதேச டெஸ்ட் போட்டியில் 5 இரட்டை சதத்தை இணைத்துள்ளனர்
விராட் கோஹ்லி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் ஒருநாள் சர்வதேச டெஸ்ட் போட்டியில் 5 இரட்டை சதத்தை இணைத்துள்ளனர்

2016-17 ஆம் ஆண்டு இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்ட நியூஸிலாந்து அணி 3 ஒருநாள் மற்றும் 3 T20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. 1-1 என்ற சமநிலையில் இருந்த தொடரின் 3வது ஒருநாள் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 337 ரன்கள் என்ற வலுவான நிலை அடைந்தது. ரோஹித் சர்மா 147 ரன்னும், விராட் கோஹ்லி 113 ரன்னும் எடுத்து அணியின் ஸ்கோர் உயர காரணமாக இருந்தனர். கடின இலக்கை விரட்டிய நியூஸிலாந்து அணி முதல் விக்கெட்டை உடனே இழந்தது. பின் மன்ரோவுடன் ஜோடி சேர்ந்த வில்லியம்சன் இரண்டாவது விக்கெட்டுக்கு 109 ரன்கள் சேர்த்தனர். அடுத்து வந்த வீரர்களும் ஓரளவுக்கு ரன்கள் சேர்த்ததால் 24 பந்தில் 35 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை வந்தது.

கடைசி நான்கு ஓவரை பும்ராஹ் மற்றும் புவனேஸ்வர் குமார் இடையே பங்கிட்டு கொண்டு சிறப்பாக பந்து வீசி நியூஸிலாந்து அணியின் வெற்றியை தடுத்தனர். இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது.

#2 ஐசிசி நாக்அவுட் கோப்பை இறுதி ஆட்டம் 2000

கிறிஸ் கெய்ன்ஸ் இந்தியாவுக்கு எதிராக 4 ஒருநாள் போட்டிகளில் 3 சதங்களை அடித்தார்
கிறிஸ் கெய்ன்ஸ் இந்தியாவுக்கு எதிராக 4 ஒருநாள் போட்டிகளில் 3 சதங்களை அடித்தார்

ஐசிசி நாக்அவுட் கோப்பை 2000ம் ஆண்டில் கென்யாவில் நடைபெற்றது. இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்தியா, நியூஸிலாந்து அணியை எதிர்கொண்டது. முதலில் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான சச்சின் மற்றும் கங்குலி 141 ரன்கள் சேர்த்தனர். சச்சின் 69 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தன் விக்கெட்டை இழந்தவுடன் இந்தியா சரிவை சந்தித்தது. இறுதியில் 6 விக்கெட்டுக்கு 264 ரன்கள் சேர்த்தது இந்தியா. அதிகபட்சமாக கங்குலி 117 ரன்கள் எடுத்தார். இலக்கை சேஸ் செய்த நியூஸிலாந்து 5 விக்கெட்களை இழந்து 132 ரன்கள் எடுத்து திரணிக்கொண்டிந்தது. அப்போது கிறிஸ் கிரைன்ஸ் மற்றும் கிறிஸ் ஹாரிஸ் 6வது

விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்து ஒரு வலுவான நிலைக்கு நியூஸிலாந்தை அழைத்து சென்றனர். அபாரமாக ஆடிய கிரைன்ஸ் 102 எடுத்ததோடு இந்திய அணியின் வெற்றியையும் பறித்தார்.

#1 நியூஸிலாந்து vs இந்தியா 2014

ரவீந்திர ஜடேஜா 66 பந்துகளில் 5 பவுண்டரி, 4 சிக்சர் அடித்தார்
ரவீந்திர ஜடேஜா 66 பந்துகளில் 5 பவுண்டரி, 4 சிக்சர் அடித்தார்

2014ம் ஆண்டு நியூஸிலாந்து சுற்று பயணம் மேற்கொண்ட இந்தியா, 2 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டியில் பங்கேற்றது. இரண்டு போட்டிகள் முடிவில் 0-2 என்ற நிலையில் இந்தியா பின்தங்கி இருந்தது. மூன்றாவது ஒருநாள் ஆக்லாந்து மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். 50 ஓவர் முடிவில் 314 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது நியூஸிலாந்து. அந்த அணி சார்பில் கப்டில் 111 ரன்னும், வில்லியம்சன் 65 ரன்னும் எடுத்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய அணியின் தொடக்க வீரர்கள் முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்தனர். ஆனால் அடுத்து வந்த வீரர்கள் சொதப்பியதால் 184/6 என்ற மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.

அப்போது ஜோடி சேர்ந்த ஜடேஜா மற்றும் அஸ்வின் 7வது விக்கெட்டுக்கு 85 ரன்கள் எடுத்தனர். இறுதி ஓவரில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான கட்டத்துக்கு இந்தியா தள்ளப்பட்டது. ஆண்டர்சன் வீசிய ஓவரின் முதல் 5 பந்தில் 16 ரன்கள் எடுக்கப்பட்டது. இறுதி பந்தில் 2 ரன் தேவைப்பட்ட நிலையில், ஜடேஜா ஒரே ஒரு ரன் மட்டுமே எடுத்ததால், போட்டி "டை" ஆனது.

Quick Links

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now