இந்திய தொடரின் போது நியூசிலாந்து அணியில் கவனிக்க வேண்டிய 5 வீரர்கள்

நியூசிலாந்து அணியின் தூணாக விளங்கும் கேன் வில்லியம்சன்
நியூசிலாந்து அணியின் தூணாக விளங்கும் கேன் வில்லியம்சன்

ஆஸ்திரேலிய அணியிடம் வெற்றி பெற்ற சந்தோஷத்தில் நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, அங்கு ஐந்து ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளை விளையாட உள்ளது. விராத் கோலி தலைமையில் சென்றுள்ள இந்திய அணி வருகின்ற புதன்கிழமை (ஜனவரி 23) முதலாவது ஒருநாள் போட்டியை விளையாடவுள்ளது. எந்த அணியையும் அதன் சொந்த மண்ணில் வெற்றி பெறுவது சவாலான விஷயமே. அதுவும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி சமீப வருடங்களாக மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது. ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடும் பல வீரர்கள் நியூசிலாந்து அணியில் உள்ளனர்.

இந்திய அணிக்கு எதிரான தொடரில் நாம் கவனிக்க வேண்டிய 5 நியூசிலாந்து வீரர்களை பற்றி தான் இப்போது பார்க்கப் போகிறோம்.

#1.கேன் வில்லியம்சன்:

நவீன காலத்தின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் இவரும் ஒருவர். தற்போது விளையாடி வரும் தலைமுறையினரில் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்ற பட்டியலை தயார் செய்தால் அதில் நிச்சியம் வில்லியம்சனின் பெயர் இருக்கும். விராத் கோலி போன்று நிறைய சதங்கள் அடிக்காமல் இருக்கலாம். ஆனால் அணிக்கு வெற்றி தேடித் தருவதில் கோலிக்கு சற்றும் சளைத்தவர் அல்ல வில்லியம்சன். நியூசிலாந்து மண்ணில் இந்திய அணிக்கு எதிராக 70-க்கும் மேல் சராசரி கொண்ட வில்லியம்சன், சஹால் மற்றும் குல்தீப் யாதவின் ஸ்பின் மாயாஜாலத்தை கட்டுப்படுத்தக்கூடிய ஒரே நபர் இவராகத் தான் இருக்க முடியும்.

#2. ராஸ் டெய்லர்:

சாதனையை தகர்க்க காத்திருக்கும் ராஸ் டெய்லர்
சாதனையை தகர்க்க காத்திருக்கும் ராஸ் டெய்லர்

ராஸ் டெய்லரின் கிரிக்கெட் வாழ்க்கையில் 2018-ம் ஆண்டைப் போல் எந்த வருடமும் இராது. கடந்த ஆண்டு 11 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய டெய்லர், 91.28 சராசரியை கொண்டு 639 ரன்கள் அடித்தார். சமீபத்தில் இலங்கைக்கு எதிரான தொடரின் மூன்று போட்டிகளிலும் அரை சதம் அடித்ததோடு தனது இருபதாவது சதத்தையும் பூர்த்தி செய்தார். கடந்த ஆறு போட்டிகளில் ஐம்பது ரன்களுகும் மேல் அடித்துள்ள டெய்லர், இன்னும் மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக அரை சதம் அடித்தால் தொடர்ந்து ஒன்பது போட்டிகளில் அரை சதம் அடித்த பாகிஸ்தானின் ஜாவித் மியாண்டத் சாதனையை சமன் செய்வார். முதலில் மெதுவாக விளையாடினாலும் இறுதி ஓவர்களில் அதிரடியாக விளையாடக் கூடியவர். வில்லியம்சன் போலவே டெய்லரும் தனி ஆளாக நின்று அணிக்கு வெற்றி தேடி தரக்கூடியவர்.

#3. மிச்செல் சாண்ட்னர்:

ஒன்பது மாதங்கள் கழித்து அணிக்கு திரும்பியுள்ள சாண்ட்னர்
ஒன்பது மாதங்கள் கழித்து அணிக்கு திரும்பியுள்ள சாண்ட்னர்

இடது கை சுழற்பந்து வீச்சாளரும் ஆல்-ரவுண்டருமான சாண்ட்னர் முழங்கால் அறுவை சிகிச்சை முடிந்து ஒன்பது மாதங்களுக்குப் பிறகு அணிக்கு திரும்பியுள்ளார். சமீபத்தில் இலங்கைக்கு எதிராக அவர் விளையாடிய ஒரே ஒரு டி20 போட்டியிலேயே தான் ஒரு நாள் போட்டிக்கு முழு தகுதியோடு இருக்கிறேன் என்பதை தேர்வாளர்களுக்கு நிரூபித்தார். ஆட்டத்தின் எந்த கட்டத்திலும் பந்துவீசும் திறமை பெற்றதோடு பேட்டிங்கிலும் ஃபீல்டிங்கிலும் அணிக்கு உதவிகரமாக இருப்பவர். இந்திய தொடரின் போது சாண்ட்னர் ஃபார்முக்கு வந்தால் அது அவருக்கும் சரி நியூசிலாந்து அணிக்கும் சரி, உலககோப்பைக்கு முன்பாக பெரும் பலமாக இருக்கும்.

#4.காலின் முன்ரோ:

இன்னும் அதிரடி காட்ட நான் ரெடி: காலின் முன்ரோ
இன்னும் அதிரடி காட்ட நான் ரெடி: காலின் முன்ரோ

இடதுகை அதிரடி ஆட்டக்காரரான முன்ரோவிற்கு கடந்த ஆண்டு அவ்வுளவு சிறப்பானதாக அமையவில்லை. 13 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வெறும் 254 ரன் மட்டுமே அடித்தார். ஆனால் இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே இலங்கைக்கு எதிரான போடியில் 87 ரன்கள் அடித்தார். இதுவரை 46 போட்டிகளில் விளையாடியுள்ள முன்ரோ இன்னும் ஒரு சதம் கூட அடிக்காததை நினைத்து அவரும் சரி நியுசிலாந்து அணியும் சரி, கவலைப்பட்டதாக தெரியவில்லை. குப்தில், வில்லியம்சன், டெய்லரோடு சேர்ந்து பேட்டிங் பிடிப்பதால், அவர்கள் இருக்கும் தைரியத்தில் மனம் போன போக்கில் அடித்து ஆடுகிறார் முன்ரோ. ஒரு நாள் போட்டியை விட டி20 போட்டியில் அதிக சராசரியை வைத்திருக்கும் அரிதான வீரர் இவர். முன்ரோ இப்படி தொடர்ந்து 70, 80 ரன்கள் அடித்துக்கொண்டிருந்தால், நியூசிலாந்து அணிக்கு நல்ல தொடக்கம் அமைவதோடு எதிரணிக்கு பயத்தையும் ஏற்படுத்தும்.

#5.லாக்கி ஃபெர்குஸன்:

நியயூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஃபெர்குஸன்
நியயூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஃபெர்குஸன்

நியூசிலாந்து வேகப் பந்துவீச்சின் துருப்புச் சீட்டாக ஃபெர்குஸன் இருப்பார். 150கிமீ-க்கு மேல் வேகம் வீசும் ஃபெர்குஸன், தனது வேகத்தால் எந்தவொரு பேட்ஸ்மேனையும் சிதறடிக்கக்கூடியவர். 27 வயதான இவர் இலங்கைக்கு எதிரான தொடரின் போது தனது வேகப் பந்துவீச்சால் அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் சிக்கலை கொடுத்தார். இவரின் பந்துவீச்சின் மீது இந்திய அணி கவனமாக இருக்க வேண்டும்.

Quick Links

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now