சென்னை அணியை விட்டு வெளியேறிய பின்னர் சொதப்பிய ஐந்து வீரர்கள்

Michael Hussey
Michael Hussey

உலகின் மிகப்பெரிய டி20 தொடரான இந்தியன் பிரீமியர் லீக்கின் வெற்றிகரமான அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் தான். ஏனெனில் இந்த அணி மூன்று முறை கோப்பையை வென்றுள்ளது. மேலும் நான்கு முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. குறிப்பாக, இந்த அணி பங்கேற்றுள்ள 9 தொடர்களிலும் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. வேறு எந்த ஐபிஎல் அணியும் இதுபோன்ற சாதனையை படைத்தது இல்லை. இந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

ஐபிஎல் தொடர் தொடங்கிய 2008ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பல இந்திய வீரர்களும் பல வெளிநாட்டு வீரர்களும் விளையாடி உள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்க வீரர்களான வெஸ்ட் இண்டீஸ்-இன் பிராவோ, இந்திய ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா போன்றோர் கிரிக்கெட் உலகில் தடம் பதிக்க காரணமாய் அமைந்ததும் இந்த அணிதான். ஆனால் வெகு சில வீரர்கள் சென்னை அணியில் நன்கு விளையாடியும் பின்னாளில் அணி நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்டு மற்ற அணிகளில் இடம்பெற்று ஜொலிக்க தவறினர். அவ்வாறு, சென்னை அணியில் இருந்து வெளியேறிய பின்னர் ஜொலிக்க தவறிய 5 வீரர்களைப் பற்றி இங்கு பட்டியலிட்டுள்ளேன்.

5. அல்பி மோர்கல்

Albie Morkel
Albie Morkel

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஆல்ரவுண்டரான அல்பி மோர்கல், ஐபிஎல் தொடர் ஆரம்பம் ஆண்டு முதலே சென்னை அணியின் வெற்றிக்கு பாடுபட்டுள்ளார். முதலாவது ஐபிஎல் தொடரில் $ 675,000 என்ற தொகைக்கு சென்னை அணிக்காக ஒப்பந்தம் ஆனார். 2013ம் ஆண்டு வரை மஞ்சள் வர்ண ஜெர்சியை தொடர்ந்து ஆறு ஆண்டுகள் அணிந்தார். அந்த காலகட்டத்தில், இந்த அணி இரண்டு ஐபிஎல் பட்டங்களையும் மூன்று இறுதி போட்டிகளுக்கும் தகுதி பெற்று ஒரு சிறந்த அணியாக வலம் வந்தது. அதில் இவரது பங்கும் போற்றத்தக்கது. ஏனென்றால், இவர் பேட்டிங்கில் 827 ரன்களும் பவுலிங்கில் 86 விக்கெட்டுகளும் எடுத்து தன்னை ஒரு ஆல்ரவுண்டராக நிலைநிறுத்தினார். 2014ம் ஆண்டில் சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட இவர் பெங்களூர் அணிக்காக 2.4 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தமானார். அந்த தொடரில் வெறும் 45 ரன்களையும் 4 விக்கெட்களையும் மட்டுமே இவரால் கைப்பற்ற முடிந்தது. பின்னர், அடுத்த ஆண்டு டெல்லி அணிக்காக 30 லட்ச ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு 86 ரன்களும் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினார். அதற்கடுத்த 2016ஆம் ஆண்டில் ஐபிஎல் தொடரின் புதிய அணியாக இடம்பெற்ற புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இடம் பெற்று மொத்தம் இரண்டு போட்டிகளில் விளையாடி 16 ரன்களும் 2 விக்கெட்களையும் மட்டுமே கைப்பற்றினார். அதுவே அவரின் கடைசி ஐபிஎல் தொடராகவும் அமைந்தது.

4.சதாப் ஜகாதி

Jakati
Jakati

கோவாவை சேர்ந்த இடது கை சுழற்பந்துவீச்சாளரான சதாப் ஜகாதி, சென்னை அணிக்காக 2008 இல் இடம்பெற்றார். தொடர் முழுவதுமே இவருக்கு வாய்ப்பளிக்கப்படாமல் இருந்தாலும் அடுத்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த ஐபிஎல் தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டது. வேகப்பந்துவீச்சுக்கு உகந்த தென்னாப்பிரிக்க ஆடுகளங்களிலும் இவரது பந்துவீச்சு எடுபட்டது. அந்த தொடரின் 9 ஆட்டங்களில் விளையாடி 113 விக்கெட்களை கைப்பற்றினார். அந்த தொடரின் இவரது சிறந்த பந்துவீச்சாக 22 ரன்களுக்கு 4 விக்கெட்களை எடுத்ததே ஆகும். மேலும், தொடர்ந்து 2010 மற்றும் 2011-ஆண்டுகளின் ஐபிஎல் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நீங்கா இடம் பெற்றார். சென்னை அணிக்காக மொத்தம் 45 போட்டியில் விளையாடி 50 விக்கெட்களை கைப்பற்றி ஒரு நிரந்தர பந்துவீச்சாளராக இருந்தார். பின்னர் அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட இவர், 2014இல் பெங்களூர் அணிக்காக ஏலம் போனார். அந்த அணிக்காக ஒரே ஒரு போட்டியில் மட்டும் களமிறங்கி விக்கெட் எதுவும் எடுக்காமல் வெறுங்கையோடு திரும்பினார். அடுத்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் எந்த ஒரு அணியும் இவரை எடுக்க முன்வரவில்லை. பின்னர், 2016- இல் குஜராத் அணியில் இடம்பெற்று 6 விக்கெட்களை மட்டுமே கைப்பற்றினார். கடந்த ஆண்டும் கூட இவரை எந்த ஒரு அணியும் ஏலத்தில் தேர்ந்தெடுக்கவில்லை.

3.சுப்பிரமணியம் பத்ரிநாத்

Badrinath
Badrinath

ஐபிஎல் முதல் சீசனில் சென்னை அணிக்காக $50,000 என்ற விலைக்கு ஒப்பந்தமானார், பத்ரிநாத். அந்த ஆண்டு முதல் 2013 வரை சென்னை அணியின் பேட்டிங்கில் ஒரு பங்காக விளங்கினார். 2010 மற்றும் 2011 ஆண்டுகளில் சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. அந்த ஆண்டுகளில் முறையே 356 மற்றும் 396 ரன்களைக் குவித்தார். இதுவரை சென்னை அணிக்காக 95 ஆட்டங்களில் விளையாடியுள்ள பத்ரிநாத், 1441 ரன்களையும் அதிகபட்சமாக 71* குவித்துள்ளார். பின்னர், அந்த அணியால் விடுவிக்கப்பட்ட இவர், 2014- இல் எந்த ஒரு அணியிலும் இடம் பெறவில்லை. 2015- இல் பெங்களூர் அணிக்காக ஒப்பந்தமாகி எந்த ஒரு போட்டியிலும் களமிறக்கப்படவில்லை. துரதிஷ்டவசமாக, அந்த ஆண்டே இவரது ஐபிஎல் வாழ்க்கை முடிவுற்றது.

2. முத்தையா முரளிதரன்

Muralidaran
Muralidaran

சுழற்பந்து வீச்சு ஜாம்பவனான இலங்கை அணியை சேர்ந்த முரளிதரன், சென்னை அணியில் 2008- ஆம் ஆண்டு முதலே இடம் பெற்று வந்தார். 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் இவர், 15 விக்கெட்டுகளை அள்ளினார் . மும்பை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 4 ஓவர்கள் பந்துவீசி 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். அந்தப் போட்டியில் மும்பை அணியை தோற்கடித்து கோப்பையை வெல்ல இதுவும் ஒருகாரணமாக அமைந்தது.அந்த மூன்று ஆண்டுகால சென்னை அணி வாழ்க்கையில் மொத்தம் 40 விக்கெட்களை கைப்பற்றினார், முரளிதரன் . 2011- ஆம் ஆண்டு கொச்சி அணிக்காக ஒப்பந்தமாகி வெறும் 2 விக்கெட்களை மட்டுமே கைப்பற்றினார்.அதற்கடுத்த ஆண்டு பெங்களூர் அணியில் இடம்பெற்றார். தொடர்ந்து மூன்றாண்டுகள் அதே அணியில் விளையாடி 21 விக்கெட்களை மட்டுமே கைப்பற்றி ஏமாற்றம் அளித்தார்.

1. மைக் ஹசி

Mic Hussey
Mic Hussey

சென்னை அணி ரசிகர்களால் மறக்கமுடியாத வீரர்களில் ஒருவர், “ மிஸ்டர் கிரிக்கெட்” என்றழைக்கப்படும் மைக் ஹசி.ஏனென்றால், இவர் சென்னை அணிக்காக செய்த சாதனைகள் ஏராளம். சென்னை அணிக்கான தனது முதல் ஆட்டத்திலேயே 54 பந்துகளில் 116* குவித்து அனைவரையும் மிரட்டினார். தொடர்ந்து 2013 வரை தோனி படையில் விளையாடி அணிக்கு பெரும் பங்காற்றினார். ஆறாண்டு கால சென்னை அணியின் ஐபிஎல் வாழ்க்கையில் 46 போட்டிகளில் விளையாடி 1691 ரன்களை குவித்துள்ளார்.2013 - இல் 733 ரன்கள் குவித்து அந்த தொடரின் ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றி சாதனை படைத்தார்.2010 மற்றும் 2011 சென்னை அணி கோப்பையை வெல்ல காரணமாய் வீரர்களில் இவரும் ஒருவர். பின்னர், 2014- ஆம் ஆண்டு மும்பை அணிக்காக 5 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்த ஏழாவது ஐபிஎல் சீசனில் வெறும் 209 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பிய இவர், வெறும் நான்கு போட்டிகளில் விளையாடி 56 மட்டுமே குவிக்க முடிந்தது. அந்த ஆண்டு முதலே இவரால் ஐபிஎல் தொடர்களில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.

எழுத்து :

அஷ்வன் ராவ்

மொழியாக்கம் :

சே.கலைவாணன்

Edited by Fambeat Tamil