உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் சதம் அடிப்பது என்பது அனைத்து வீரர்களின் கனவாகும். அப்படி நிகழ்த்திவிட்டால், மிகவும் கவுரவமாக கருதப்படுவதுண்டு. ஒரு அணியின் வீரர் சதம் அடிப்பதால் அது வெற்றியில் தான் முடியும் என்று கூறமுடியாது. ஒரு அணியில் ஒரு வீரர் மட்டும் சிறப்பாக விளையாடி சதம் அடித்து பின்பு மற்ற வீரர்கள் சொதப்புவதால் இறுதியில் அந்த சதத்திற்கு மதப்பில்லாமல் போய்விடுகிறது. ஆனால் இப்போது நாம் பார்க்கவிருப்பது, சதம் அடிக்காமல் ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றி தேடி தந்துள்ள 5 மதிப்புமிக்க இன்னிங்கை பற்றியது.
#5 அசங்கா குருசின்ஹா
1996ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டது இலங்கை அணி. அப்போது இலங்கை அணி கோப்பை வெல்ல காரணமாக இருந்தவர் அசங்கா குருசின்ஹா. இந்த ஆட்டம் இவரது கிரிக்கெட் வாழ்வில் ஒரு மறக்க முடியாத போட்டியாக அமைந்தது. 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்ற இலங்கை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அடுத்து இறங்கிய அசங்கா, அர்விந்த டி சில்வாவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து 125 ரன்கள் எடுத்தனர். அர்விந்த டி சில்வா அபாரமாக விளையாடி சதமடித்தார். ஆனால் அசங்காவின் 65 ரன்கள் தான் டி சில்வாவின் சதத்திற்கு அடித்தளமாய் அமைந்தது.
#4 இம்ரான் கான்
இம்ரான் கான், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் அந்நாட்டின் தற்போதைய பிரதமர். 1992 ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மறக்கமுடியாது ஆண்டு என கூறலாம். முதல் 5 போட்டிகளில் 1ல் மற்றும் வெற்றியுடன் தொடரில் இருந்து ஆரம்பத்திலேயே வெளியாகும் தருணத்தில் இருந்தது பாகிஸ்தான். இங்கிலாந்துடன் நடைபெற்ற குரூப் ஆட்டத்தில் வெறும் 74 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட் ஆனது. இப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால் பாகிஸ்தான் அணி தப்பித்தது. அதன் பின் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகளை வென்றால் மட்டுமே கோப்பையை நெருங்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இறுதி போட்டிக்கு சென்ற பாகிஸ்தான், இங்கிலாந்து அணியை சந்தித்தது.
எப்போதும் 6வது வீரராக களமிறங்கும் இம்ரான் கான் இப்போட்டியில் 3வது வீரராக இறங்கினார். அதிரடியாய் விளையாடிய இம்ரான் கான், 72 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார். இவர் 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஸ்லிப் திசையில் நின்றிருந்த கூச் கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார். அப்போது அவர் தவறவிட்டது பந்துடன் சேர்த்து கோப்பையையும் என்பது அவருக்கு தெரியாது. 249 ரன்கள் இலக்காக கொடுக்கப்பட்டு, பின்பு பந்து வீச்சாளர்களின் அபாரத்தால் பாகிஸ்தான் அணி கோப்பையை தட்டிச்சென்றது.
#3 டேவிட் பூன்
ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான்களுள் ஒருவரான டேவிட் பூன், பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். ஆஸ்திரேலியாவிற்காக 100 ஒருநாள் மட்டும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கிரிக்கெட்டில் ஓய்வுக்கு பிறகு ஆஸ்திரேலியாவின் தேர்வுக்குழு தலைவராகவும் மற்றும் போட்டியின் நடுவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். 1987ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இவர் அடித்த 75 ரன்கள் ஆஸ்திரேலியா கோப்பை வெல்ல காரணமாக அமைந்தது. அப்போட்டியில் ஆட்டநாயகன் விருதும் வென்றார். டேவிட் பூன், ஆலன் பார்டர் மற்றும் டீன் ஜோன்ஸ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 253 ரன்களை எட்டியது.
இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி தொடக்க வீரரை ஆரம்பமே இழந்தாலும், பில் அதே மற்றும் லாம்ப் ஆகியோரின் ஆட்டத்தால் போட்டி விறுவிறுப்பாக சென்றது. ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது மைக் கட்டிங்கின் விக்கெட். இறுதி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஆஸ்திரேலியா 7 ரன்கள் வித்தியாசத்தில் கோப்பை வென்றது.
#2 & #1 கவுதம் கம்பிர் மற்றும் மகேந்திர சிங் தோனி (ஒரே போட்டியில்)
2011ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையை இந்தியா வெல்ல காரணமானவர் கவுதம் கம்பிர் மற்றும் மகேந்திர சிங் டோனி. இதே போல் முதன் முதலில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை வெல்லவும் முக்கிய பங்கு வகித்தவர் கம்பிர். அந்த இரண்டு தருணத்திலும் அணியை வழிநடத்திய பெருமை முன்னாள் கேப்டன் தோனிக்கு. டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 274 ரன்களை எட்டியது. அந்த அணியின் மகேலா ஜெயவர்தனே அபாரமாக ஆடி சதம் அடித்தார். மேலும் டில்ஷான் மற்றும் சங்கக்கரா அணியின் ஸ்கோர் உயர தங்கள் பங்கை அளித்தனர். சச்சினின் இறுதி உலகக்கோப்பை, சொந்த மண் என்று பல இக்கட்டான சூழ்நிலையில் இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.
விரேந்தர் சேவாக் மற்றும் சச்சின் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். துவண்டுவிடாத கம்பிர் கோஹ்லியுடன் ஜோடி சேர்ந்து அணிக்கு வலுவான முன்னேற்றம் அளித்தார். டில்ஷான் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார் கோஹ்லி. அடுத்து களமிறங்கிய தோனி கம்பிர் இணை, எதிரணியின் பந்துவீச்சை சுலபமாக சமாளித்தது. திசாரா பெரேரா வீசிய 42வது ஓவரில் ஆட்டமிழந்த கம்பிர், 122 பந்தில் 97 ரன்கள் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
பொறுப்புடன் ஆடிய கேப்டன் தோனி, பதட்டமான சூழ்நிலையிலும் தன்னம்பிக்கை இழக்காமல் ஆடினார். இதற்கு முந்தய போட்டிவரை வெறும் 34 ரன்களே உலகக்கோப்பையில் அதிகபட்சமாக எடுத்திருந்தார். அதனை முறியடிக்கும் விதமாக அமைந்தது இந்த ஆட்டம். சிக்ஸர் அடித்து வெற்றி தேடிதந்த தோனியின் ஆட்டம் ஆட்டநாயகன் விருதை வாங்கிக்கொடுத்து. 79 பந்தில் 91 ரன்கள் எடுத்த தோனி, இந்திய அணிக்கு இரண்டாவது முறையாக உலகக்கோப்பை பெற்று தந்தார்.