இந்தியாவில் மிகவும் பிரமாண்டமாக நடைபெறும் கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்). இது இந்தியாவில் 2008 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 11 சீசன்கள் நடைபெற்றுள்ள நிலையில் தற்போழுது 12வது சீசன் தொடங்க உள்ளது. இந்த நிலையில் வரும் மார்ச் 23ம் தேதியிலிருந்து இந்தியாவில் எட்டு நகரங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் சற்று முன்பே தொடங்குகிறது. ஐபிஎல் வரலாற்றில் முக்கியமான அணியாக மும்பை அணி இருக்கிறது. இந்த அணி இதுவரை மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. மூன்று முறையும் ரோஹித் சர்மா தலைமையில் தான் சாம்பியன் பட்டத்தை வென்றது என்பது குறிபிடத்தக்கது. அதே போல் ரோஷித் சர்மா தலைமையில் தான் மும்பை அணி அதிக போட்டிகளை வென்றுள்ளது. மும்பை அணிக்காக பல சாதனைகளை படைத்துள்ள ரோஹித் சர்மா ஒரு மோசமான சாதனையையும் படைத்துள்ளார் அது என்ன என்பதை காண்போம்.
ரோஹித் சர்மா மும்பை அணிக்கு 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளின் நடுவில் இருந்து கேப்டன் பொருப்பில் இருந்து வருகிறார். அதே போல் 2013 ஆம் ஆண்டு முதன் முதலில் சாம்பியன் பட்டத்தை மும்பை அணி வென்றது. அதன் பிறகு நடைபெற்ற அனைத்து சீசன்களிலும் ரோஹித் சர்மா தலைமையில் விளையாடிய மும்பை அணி தனது லீக்கின் முதல் போட்டியில் தோல்வி தான் அடைந்து வந்துள்ளது. அவை ஒவ்வொன்றாக பின்வருமாறு:
2014(MI vs KKR)
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 165 ரன்களை எடுத்தது. பின்னர் விளையாடிய மும்பை அணி 122 ரன்களை மட்டுமே அடித்து தோல்வி அடைந்தது.
2015(MI vs KKR)
2015 ஆம் ஆண்டு நடப்பு சாம்பியன் ஆன கொல்கத்தா அணியுடன் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை அணி மோதியது. இந்த போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய மும்பை அணி 168 ரன்களை அடித்தது. அதன் பின்னர் விளையாடிய கொல்கத்தா அணி 170 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.
2016(MI vs RPS)
2016 ஆம் ஆண்டு நடப்பு சாம்பியன் ஆன மும்பை அணியுடன் அந்த தொடரில் புதியதாக வந்த புனே அணி மோதியது. இந்த போட்டி மும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடி மும்பை அணி 121 ரன்களை அடித்தது. அதன் பின்னர் விளையாடிய புனே அணி 126 ரன்களை அடித்து வெற்றி பெற்றது.
2017(MI vs RPS)
2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் இரண்டாவது லீக் போட்டியில் மும்பை மற்றும் புனே அணிகள் மோதின. இந்த போட்டி புனேவில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய மும்பை அணி 184 ரன்களை அடித்தது. அதன் பின்னர் விளையாடிய புனே அணி 187 ரன்களை அடித்தது. இந்த போட்டியில் புனே அணி வெற்றி பெற்றது.
2018(MI vs CSK)
2018 ஆம் ஆண்டு இரண்டு ஆண்டுகள் தடைக்கு பிறகு களம் இறங்கிய சென்னை அணியுடன் மும்பை அணி மோதியது. இந்த போட்டி மும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய மும்பை அணி 165 ரன்கள் அடித்தது. அதனை கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்றது சென்னை அணி.
இந்த ஆண்டு 2019ல் முதல் போட்டியில் டெல்லி அணியை எதிர்கொள்கிறது மும்பை அணி இந்த வருடமாவது ரோஹித் தலைமையில் மும்பை அணி முதல் போட்டியை வெற்றி பெறுமா?