தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் இந்திய அதிரடி தொடக்க ஆட்டக்காரர் வி.பி சந்திரசேகர் தனது 57வது வயதில் இயற்கை ஏய்தியுள்ளார். வி பி என்று கிரிக்கெட் வட்டாரங்களில் அழைக்கப்படும் சந்திரசேகர் 1988 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் இவரது பங்களிப்பு மகத்தானதாகும். 1980ன் இறுதி முதல் 1990ன் தொடக்கம் வரை கிரிக்கெட்டில் கொடி கட்டி பறந்தவர்.
1987-88ல் நடந்த ரஞ்சிக்கோப்பையில் தமிழ்நாடு கோப்பையை கைப்பற்றியதற்கான முக்கிய காரணமாக வி பி சந்திரசேகர் திகழ்ந்தார். உத்திரப் பிரதேசத்திற்கு எதிரான காலிறுதியில் 160 ரன்களும், ரயில்வேஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 89 ரன்களும் குவித்து அசத்தினார். இதைத்தொடர்ந்து இராணி கோப்பையில் "ரெஸ்ட் ஆஃப் இந்தியா" அணிக்கு எதிரான போட்டியின் 4ஆம் நாள் ஆட்டத்தில் 56 பந்துகளில் சதம் விளாசினார். இதுவே தற்போது வரை முதல் தர கிரிக்கெட்டில் இந்தியர் ஒருவரது அதிவேக சதமாகும்.
உள்ளூர் கிரிக்கெட்டில் வி பி சந்திரசேகரின் தொடர்ச்சியான ரன் குவிப்பால் சர்வதேச அணியில் இடம்பிடித்தார். இவரது குறைவான சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த தவறிவிட்டார். 7 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 12.7 சராசரியுடன் ஒரு அரைசதம் மட்டுமே அடித்தார். நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் 77 பந்துகளை எதிர்கொண்டு 55 ரன்களை மட்டுமே அடித்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இவரது ஆட்டத்திறன் மோசமாக இருந்தாலும் உள்ளூர் கிரிக்கெட்டில் வி பி சந்திரசேகருக்கு எப்பொழுதுமே ஒரு பெரிய மரியாதை உண்டு. 1991-92 ரஞ்சிக் கோப்பையில் தமிழ்நாடு அணியின் கேப்டனாக செயல்பட்டு 572 ரன்களை விளாசினார். அதன்பின் தனது கடைசி முதல் தர போட்டியில் கோவா அணிக்காக விளையாடினார். இவர் ஒரு போட்டியில் தனது அதிகபட்ச ரன்களாக கேரளாவிற்கு எதிராக 237* ரன்களை விளாசியுள்ளார். ஒட்டுமொத்தமாக 81 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள வி பி சந்திரசேகர் 43 சராசரியுடன் 4999 ரன்களை விளாசியுள்ளார். இதில் 10 சதங்கள் 23 அரைசதங்கள் அடங்கும்.
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின் இந்திய அணியின் தேர்வுக்குழுவிலும், 2012-13 ரஞ்சிக்கோப்பை சீசனில் தமிழ்நாடு அணியின் பயிற்சியாளராகவும் பணியாற்றினார். மேலும் 2008 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இயக்காநராக பணியாற்றினார். முதல் ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விரேந்தர் சேவாக்கை எடுக்க N. ஶ்ரீ நிவாசன் முயற்சித்தார். ஆனால் விபி சந்திர சேகர் தான் மகேந்திர சிங் தோனி சரியான வீரர் அவரை தேர்வு செய்யுங்கள் என அறிவுறுத்தினார்.
இவரது மறைவிற்கு கிரிக்கெட் வீரர்கள் தங்களது அனுதாபங்களை வெளிபடுத்தி வருகின்றனர்.
வி பி சந்திரசேகர் மறைவு குறித்து அவரது நண்பர் கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீ காந்த் கூறியதாவது:
என்னுடைய நண்பர் மற்றும் தொடக்க பேட்டிங் பார்ட்னர் மறைவிற்கு மிகுந்த வருத்தம் தெரிவிக்கிறேன். எனக்கு இது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரவித்து கொள்கிறேன்.