T 20 ஆட்டத்தை பொறுத்தவரை வீரர்கள் அவர்களது திறமையை தாண்டி, இளமையுடன் மற்றும் துடிப்புடன் இருக்க வேண்டும் என்பது தேர்வுக்குழு மற்றும் ரசிகர்களின் விருப்பம். ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்பதால் ரன்களையும் வேகமாக சேர்க்கக்கூடிய வீரர்கள் அணியில் இருப்பது அவசியம். முன்னதாக சேவாக், யுவ்ராஜ், ரெய்னா போன்ற வீரர்கள் அதிக பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் வாய்ந்தவர்களாக இருந்தனர். தற்போதைய இந்திய அணியைப் பொறுத்தவரை நல்ல பார்மில் உள்ளது. தொடர்ந்து பல T 20 தொடரையும் கைப்பற்றி வருகிறது. இருப்பினும் ஒரு நல்ல மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கான இடம் காலியாக உள்ளது என்றே கூறலாம்.
இந்திய தேர்வுக்குழு பல வீரர்களை சோதனை செய்து அதில் தோல்வியை சந்தித்துள்ளது என்றே கூறலாம். காலியான இடத்தை நிரப்ப பலமுனை போட்டி வீரர்களுக்குள்ளே நடைபெற்று வருகிறது. அவ்வாறு இருக்கையில் தற்போதைய T 20 அணிக்கு பொருத்தமில்லாத நான்கு வீரர்களை கீழே காணலாம்.
#1 மனிஷ் பாண்டே
மனிஷ் பாண்டே, IPL T20 வரலாற்றில் முதல் சதத்தினை அடித்த இந்திய வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். ஆனால் அதன் பிறகு சொல்லிக்கொள்ளும் படி சிறப்பான ஆட்டத்தை T 20 போட்டியில் வெளிப்படுத்தவில்லை. நல்ல மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான இவர், அணியின் இக்கட்டான சூழ்நிலைக்கேற்ப தன் ஆட்ட ஸ்டைலில் மாற்றம் செய்ய கூடியவர். ஆனால் இது போன்ற ஆட்டம் பெரும்பாலும் 50 ஓவர் போட்டிக்கே சரியாக இருக்கும். ரன்கள் சேர்க்க நல்ல காலத்தை எடுத்துக்கொள்ள கூடியவர். இதுவே அடுத்து வரும் வீரர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்திவிடுகிறது.
2015ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக முதல் T 20 போட்டியில் பங்கேற்ற பாண்டே, அதன்பிறகு மொத்தம் 26 சர்வேதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இரண்டு அரை சதத்துடன் 538 ரன்களும், 41.38 என்ற நல்ல சராசரியும் வைத்துள்ளார். இருந்த போதிலும் இவரது ஸ்ட்ரைக் ரேட் 122.83 மட்டுமே. இது மற்ற நான்கு மற்றும் ஐந்தாம் இடம் இறங்கும் வீரர்களுடன் ஒப்பிடும் பொது மிகவும் குறைவு. மனிஷ் பாண்டே இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ நல்ல வாய்ப்புகள் உள்ளது. ஆனால் அது T 20 போட்டியில் நடக்குமா என்றால் பெரிய கேள்விக்குறி தான்.
#2 ஷ்ரேயஸ் ஐயர்
உள்ளூர் போட்டிகளில் தன் சிறப்பான ஆட்டத்தால் தேர்வுக்குழுவை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் ஷ்ரேயஸ் ஐயர். அதன் மூலம் T 20 மற்றும் 50 ஓவர் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார். இதுவரை 12 சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றே கூறலாம். 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த T 20 போட்டியில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக தன் முதல் போட்டியில் களமிறங்கிய ஐயர், அதன் பிறகு மொத்தம் 6 போட்டிகளில் தான் தனக்கான வாய்ப்பை பெற்றுள்ளார்.
சராசரியாக 16.60 ரன்களை வைத்துள்ள இவர், மொத்தம் 83 ரன்கள் எடுத்துள்ளார். வருங்கால இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் என்று பலரால் கூறப்பட்டு வரும் ஐயர், தனது ஆட்ட ஸ்டைலில் சில மாற்றம் கொண்டு வந்து மீண்டும் இந்திய அணியில் இடம் பெற முயற்சி செய்ய வேண்டும்.
#3 அக்ஸர் படேல்
இந்திய அணியின் வரலாற்றில் சுழற் பந்து வீச்சாளர்களுக்கு பஞ்சமே இல்லை. அணில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங், அதன் பிறகு அஸ்வின் மற்றும் ஜடேஜா தற்போது குல்தீப் யாதவ் மற்றும் சாஹல். இவர்களது ஆதிக்கம் எதிரணிக்கு பெரும் பின்னடைவே ஏற்படுத்துகிறது. இவர்களின் எழுச்சி மற்ற சுழற் பந்து வீச்சாளர்களுக்கு அணியில் இடம் பிடிக்க தடையாக இருந்தது. அவ்வாறு வாய்ப்பு கிடைக்காமல் அணியிலிருந்து மறைந்து போனவர் அக்ஸர் பட்டேல்.
இவரது T 20 பௌலிங் சராசரி வைத்து பார்த்தால், எதிரணி வீரர்கள் நல்ல ரன்களை குவித்துள்ளார்கள். இதுவரை T 20 சர்வேதேச போட்டிகளில் மொத்தம் 234 பந்துகளை வீசியுள்ள பட்டேல், வெறும் 9 விக்கெட்களை மற்றும் சாய்த்துள்ளார். பேட்டிங்கிலும் ரன்கள் சேர்க்க தவறிய இவர், தற்போதைய சூழ்நிலையில் அணிக்கு இவர் பொருத்தமாக இருக்கமாட்டார்.
#4 மகேந்திர சிங் தோனி
மகேந்திர சிங் தோனி, இவரது தலைமையின் கீழ் இந்திய அணி முதல் T 20 உலகக்கோப்பையை வென்றது. இவரது வழிகாட்டுதலின் பேரில் இந்திய மற்றும் சென்னை அணி பல T 20 தொடர்களை வென்றுள்ளது. ஆனால் இவர் தனியாக என்ன சாதித்தார் என்று பார்த்தால், பெரிதாக ஒன்றுமில்லை. இவரது வயது காரணமாக ஓய்வு பெற வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் வலுயுறுத்திவருகின்றனர். இவரது மோசமான பேட்டிங் காரணமாக தொடர்ந்து இரண்டு T 20 தொடரில் இருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளார்.
ரிஷாப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் நன்றாக ஆடிவரும் நிலையில் தோனி மீண்டு T20 அணிக்கு திரும்புவது சற்று கடினமான ஒன்று. மீண்டும் இவரது பழைய ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே அது சாத்தியம். இதுவரை மொத்தம் 93 சர்வதேச T 20 போட்டிகளில் பங்கேற்றுள்ள தோனி, அதிகபட்சமாக 56 ரன்களே எடுத்துள்ளார். இவரது ஸ்ட்ரைக் ரேட்டும் வெறும் 126 மட்டுமே.