"விராட் கோஹ்லி சதம் அடித்தார்" என்ற செய்தி நாம் அனைவரும் அன்றாட வாழ்வில் கேட்கும் செய்தியாகிவிட்டது. விராட் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்பது உலகம் அறிந்த விஷயம். கடந்த ஆறு வருடங்களாக இந்தியாவின் பேட்டிங் வரிசைக்கு முதுகெலும்பாக திகழ்கிறார். அவரின் பேட்டிங் திறமைகளை பற்றி விவாதிக்கவேண்டியது ஏதும் இல்லை .ஆனால் கேப்டனாக விராட் பற்றி விவாதிக்கப் படவேண்டியது நிறைய இருக்கிறது. எதிர்மறை அர்த்தத்தில் ஏதும் இல்லை. கேப்டனாக அவர் பலசமயங்களில் சிறந்த முடிவுகளை எடுத்துள்ளார். அணிக்கும் பல வெற்றிகளை தேடித்தந்துள்ளார். பெரிதாக குறையேதும் கூற முடியாதவாறு வழிநடத்திச் செல்கிறார். இருப்பினும் அவர் கேப்டனாக மேம்படுத்திக்கொள்ள வேண்டிய விஷயங்களும் உள்ளன.
#1 செய்தியாளர் சந்திப்பு
விராட் கோஹ்லிக்கும் நிருபர்களுக்கும் இடையே ஒரு நட்பு-வெறுப்பு உறவே பலசமயங்களில் காணப்படுகிறது. ஒரு மாதத்திற்கு முன் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், விராட்டிற்கும் ஒரு நிருபருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. விராட் கோஹ்லியை பார்த்து அந்நிருபர் " இப்போது இருக்கும் இந்திய அணியை விட 15 வருடத்திற்கு முன் இருந்த இந்திய அணி சிறந்ததா' என்ற கேள்வியை முன்வைத்தார். உடனே அதற்கு விராட் அந்நிருபரை பார்த்து அதே கேள்வியை முன் வைத்தார். அதற்கு நிருபர் "தனக்கு அதை பற்றி சரியாக கூற முடியவில்லை'' என்றார். உடனே விராட் கூறியது "உங்களால் உறுதியாக கூற முடியவில்லையா? இது உங்களுடைய கருத்து. நன்றி" என பேட்டியை முடித்துக்கொண்டார்.
இது ஒன்றும் முதல் முறையல்ல.இதே போல் இந்திய அணி தென் ஆப்ரிக்கா சென்ற போதும் விராட் இது போன்று நடந்துக் கொண்டார்.ஒரு கேப்டன் எப்போதும் ஆக்கப்பூர்வமாக இருந்து அணிக்கு உறுதுணையாக நிற்க வேண்டும். பலநேரங்களில் பத்திரிக்கையாளர்களின் நூதன கேள்விகளுக்கு பொறுமையுடன் பதில் கூறவேண்டிய கட்டாயம் ஏற்படும். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இதை நேர்த்தியாக செய்யக்கூடிய வல்லவராக இருந்துள்ளார். இதே போல் விராட் கோஹ்லியும் சீர்செய்துக் கொள்ளவேண்டும்.
#2 அணி தேர்வு
இங்கிலாந்து சென்ற இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் இழந்தது. இதற்கு முக்கிய காரணமாக கருதப்பட்டது, அணியின் தேர்வு. டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்பவர் புஜாரா. இவர் இல்லாமல் முதல் டெஸ்டில் களமிறங்கிய இந்தியா தோல்வியை சந்திக்கநேர்ந்தது. இதே போன்று வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான களத்தில் இரண்டு சூழல் பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியதால் எதிரணி மிக விரைவாக ரன்களை குவித்தது. அது மட்டும் இல்லாமல் ஒரு பேட்ஸ்மேன் குறைவாக இருந்ததால், எதிரணி அடித்த ரன்களை நம்மால் நெருங்க கூட முடியாமல் போனது. இதற்கு முன் நடந்த தென் ஆப்ரிக்கா தொடரிலும் இதே போன்ற சரியான அணி தேர்வு இல்லாத காரணத்தால் தொடரை இழக்க வேண்டியதாயிற்று. பின் வரும் வெளிநாட்டு தொடர்களில் கேப்டன் விராட் கோஹ்லி சரியான XI வீரர்களை தேர்வு செய்து களமிறக்க வேண்டும்.