ரோஹித் சர்மா 2007 ஆம் ஆண்டே இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் அறிமுகமாகி விட்டார். இருந்தாலும் அப்போதைய அணியில் அவர் மிடில் ஆர்டர் மற்றும் பினிஷெராகவே களமிறக்கப்பட்டார். அதன் பின் 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் ட்ராபி தொடரின் மூலம் துவக்க வீரராக அறிமுகமான இவர் அணியில் நிரந்தர துவக்க வீரராகவே மாறிவிட்டார். இருந்தாலும் அப்போதைய காலகட்டங்களில் டி20 போட்டிகளில் இவரால் பெரிதாக ஜொலிக்க முடியவில்லை. அதன் பின் 2015 உலகக்கோப்பை தொடருக்கு பின் இவரின் ஆட்டம் வேறு நிலையை தொட்டது. டி20 மற்றும் ஒருநாள் என இரண்டு வகை போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி பல சாதனைகளுக்கு சொந்தக்காரரானார். கடைசி 4 ஆண்டுகளில் மட்டும் சர்வதேச டி20 போட்டிகளில் இவர் 1,555 ரன்கள் குவித்துள்ளார். இது விராட் கோலியை விட அதிகம். இந்நிலையில் டி20 போட்டிகளில் இவரால் படைக்கப்பட்ட சில சாதனை தொகுப்புகளை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#5) அதிகமுறை 50+ ரன்கள் குவித்த வீரர்
தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கெதிரான டி20 தொடரில் ரோஹித் சர்மா அரைசதம் அடித்ததன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிகமுறை 50க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்க்கு முன்னர் விராட் கோலியே ( 20 முறை ) இந்த சாதனைக்கு சொந்தக்காராக இருந்தார். இதை முறியடித்து ரோஹித் சர்மா தற்போது 21 முறை 50க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து புதிய சாதனையை படைத்துவிட்டார். அதுமட்டுமல்லாமல் ரோஹித் சர்மா தனது ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக பல போட்டிகள் விளையாடியுள்ளதும் கவனிக்க வேண்டியது.
#4) அதிவேகமாக சதமடித்த வீரர் - 35 பந்துகள்
ரோஹித் சர்மா போல அதிரடி வீரரை தற்போது இந்திய அணியில் காண்பது அரிது. களமிறங்கி நல்ல அடித்தளம் மட்டும் இவருக்கு கிடைத்து விட்டால் போதும் அதன் பின் எந்த பந்துவீச்சாளராலும் இவரின் விக்கெட்டினை வீழ்த்துவது என்பது மிகவும் கடினம். ஒருநாள் போட்டிகளில் 3 முறை இரட்டை சதம் அடித்ததிலிருந்தே இவரின் நிலையான அதிரடி ஆட்டத்தினை பற்றி நமக்கு தெரியும். இலங்கை அணிக்கெதிரான போட்டியில் இவர் 35 பந்துகளில் சதமடித்து இந்த சாதனையை படைத்தார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் குறைந்த பந்துகளில் சதமடித்த வீரர் என்ற மில்லரின் சாதனையை சமன் செய்ததார். அதுமட்டுமல்லாமல் அன்றைய போட்டியில் இவர் இரட்டை சதமடிப்பார் என்றே ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் துர்த்தஷ்டவசமாக 118 ரன்களில் இருந்த போது தனது விக்கெட்டினை இழந்துவிட்டார். அந்த போட்டியில் இந்திய அணி 260 ரன்கள் குவித்தது.
#3) அதிகமுறை சதமடித்த வீரர்
சர்வதேச டி20 போட்டிகளில் அதிகமுறை சதமடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார் ரோஹித் சர்மா. இந்த பட்டியலில் இவருக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில மேக்ஸ்வெல் மற்றும் முன்ரோ-வும் உள்ளனர். இவர் தனது முதலாவது சத்தினை தென்னாபிரிக்க அணிக்கெதிரான பதிவு செய்தார். அதும் 66 பந்துகளில் இதன் மூலம் சர்வேதேச டி20 போட்டிகளில் சதமடித்த இரண்டாவது இந்திய வீரரானார். அதன் பின்னர் இங்கிலாந்து, இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக சதம் விளாசி இந்த சாதனையை படைத்தார். இது முடிவு அல்ல இன்னும் பல சதங்களை இந்த பட்டியலில் இவர் படைப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.