கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய தொடரான உலககோப்பை இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ளது. 2019 ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை இங்கிலாந்தில் மே மாத இறுதியில் ஆரம்பமாகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு அணியும் உலக கோப்பைக்கான அணியை தேர்வு செய்வதில் ஆயத்தமாகி உள்ளனர்.
இந்தியாவின் நெடுநாள் தலைவலியாக இருந்து வருகிற சிறந்த நடுநிலை ஆட்டக்காரர்களை தேர்வு செய்ய சில மாதங்களே உள்ளன. இந்திய அணியில் முதல் மூன்று பேட்டிங் வரிசையில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. தவான், ரோகித் சர்மா மற்றும் கோலி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதனைப் பற்றி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஒரு இணையதளத்திற்கு பேட்டி அளிக்கும் போது கூறியிருந்தார்.
"கோலி எந்த இடத்தில் ஆடினாலும் அணியை சரியான பாதைக்கு அழைத்து செல்வார். எனவே இந்த உலக கோப்பை தொடரில் மட்டும் கோலி நான்காம் இடத்தில் களம் இறங்குவார். இதனால் நடுவரிசை பலப்படும் மேலும் அனைத்து வீரர்களும் அவர்களது பங்களிப்பை அளிப்பதற்கு சரியான வாய்ப்பாக அமையும் என்று கூறினார்".
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் இதனை மறுத்தார். விராட் கோலி மூன்றாம் வரிசையில் பல சாதனைகளை புரிந்துள்ளார் எனவே இந்திய அணி அவரை மூன்றாம் இடத்தில் மட்டும் வைத்து தான் விளையாட வேண்டும், அதுவே அணிக்கு நல்லது மற்றும் உலக கோப்பையை வெல்ல அதுவே உதவி புரியும் எனக் கூறினார்.
தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி!
"உலக கோப்பையில் இந்திய அணிக்காக விராட் கோலி நான்காம் வரிசையில் ஆட வேண்டும் என தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியதை நான் ஒரு இணைய தளத்தில் படித்தேன். கோலி நான்காமிடத்தில் ஆடினால் யார் மூன்றாமிடத்தில் ஆடுவார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. கோலியை தவிர அந்த இடத்தில் வேறு யார் ஆடினாலும் அணிக்கு ஒரு நல்ல விஷியமாக அமையாது. இந்திய அணி கேப்டன் மூன்றாமிடத்தில் ஆடினால் மட்டுமே இந்திய அணிக்கு அது மேலும் வலு சேர்க்கும் "
முன்னாள் கேப்டனின் இந்த கூற்றை பலரும் வரவேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருநாள் கிரிக்கெட்டை பொறுத்த வரை சிறந்த பேட்ஸ்மென்கள் மட்டுமே முடிந்தவரை அனைத்து ஓவர்களையும் களத்தில் நின்று ஆட வேண்டும். எனவே கோலி மூன்றாம் வரிசையில் ஆடுவதே இந்திய அணிக்கு வலிமை சேர்க்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. உலக கோப்பைக்கு முன்பு இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. உலகக் கோப்பை கான சிறந்த 11 வீரர்களை தேர்வு செய்ய இந்த தொடர் மிகவும் முக்கியமான தொடராகும். ஆஸ்திரேலியா அணி வருகிற 24ம் தேதியில் இருந்து இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டி20 போட்டி மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. உலக கோப்பைக்கு முன்பு இந்திய அணி ஆடும் கடைசி தொடர் இதுவாகும்.