இந்த உலகக் கோப்பையில் வெற்றிகரமான அணியாக வலம் வந்து கொண்டிருந்த இந்திய அணியின் வெற்றி பயணத்தை நேற்றைய ஆட்டத்தில் முடித்து வைத்தது இங்கிலாந்து. இதில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 338 ரன்கள் இலக்கை 5 விக்கெட்டுகள் கைவசம் இருந்தும் எட்ட முடியாமல் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்த உலக கோப்பையின் முதல் தோல்வியைச் சந்தித்தது இந்திய அணி.
'ஜானி பேர்ஸ்டோ'வின் அற்புத சதம் மற்றும் ஜேசன் ராய் & பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் சிறப்பான அரை சதங்களின் உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 337 ரன்கள் குவித்தது இங்கிலாந்து அணி. இந்த உலக கோப்பையில் தோல்வியை சந்திக்காமல் 6 ஆட்டங்களில் வெற்றி கொண்டிருந்த இந்திய அணிக்கு இந்த சேஸிங் கடும் சவாலாக அமைந்தது.
லோகேஷ் ராகுலின் விக்கெட்டை ஆரம்பத்திலேயே இழந்து பவர் பிளேயில் வெறும் 28 ரன்கள் மட்டுமே சேர்த்தது இந்தியா. அதன் பின்னர் கேப்டன் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் சிறப்பான ஆட்டத்தில் வெற்றியை நோக்கி சீராக பயணிக்க ஆரம்பித்தது இந்திய அணி.
விராட் கோலி இந்த உலக கோப்பையில் தொடர்ச்சியாக 5-வது அரை சதத்தை அடித்து அதை சதமாக மாற்றும் முயற்சியில் மீண்டும் தோல்வி அடைந்து வெளியேறினார். மறுமுனையில் ரோகித் சர்மா இந்த உலக கோப்பையில் தனது 3-வது சதத்தை எட்டி ஆட்டமிழந்தார். இவர்களுக்கு பின்னர் களம் கண்ட ரிஷாப் பாண்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் அதிரடியாக விளையாடியதால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு தொடர்ந்து உயிர்ப்புடனே இருந்தது.
ஆனால் இவர்களின் ஆட்டம் இழந்த பிறகு களம் கண்ட முன்னாள் கேப்டன் 'எம்.எஸ்.தோனி' மற்றும் 'கேதர் ஜாதவ்' கடைசி 5 ஓவர்களில் வெற்றிக்காக போராடாமல் ஏனோதானோவென விளையாடியது ரசிகர்களை கடுப்பாக்கியது. ரசிகர்கள் பலர் இவர்களின் மந்தமான ஆட்டத்தில் வெறுப்பாகி போட்டி முடியும் முன்பே மைதானத்தில் இருந்து வெளியேறத் தொடங்கினர்.
இதனைக் கண்ட அப்பொழுது தொலைக்காட்சி வர்ணனையில் இருந்த இங்கிலாந்து முன்னாள் வீரர் 'நசீர் ஹூசைன்' இது குறித்து அப்பொழுது சக வர்ணனையாளராக இருந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் 'சவுரவ் கங்குலி'யிடம் கேட்ட பொழுது அவர் கூறுகையில்,
"இதற்கு என்னிடம் இப்பொழுது எந்த விளக்கமும் இல்லை. நீங்கள் என்னிடம் கேள்வி கேட்டு உள்ளீர்கள் ஆனால் அதற்கு பதில் கூறுவதற்கு என்னிடம் விளக்கம் இல்லை. கையில் 5 விக்கெட்டுகளை வைத்துக் கொண்டு இந்த இலக்கை கடைசியில் எட்டும்போது தெளிவான மனநிலையில் இருக்க வேண்டும்".
"ஒரு விஷயம் மட்டும் கூறுகிறேன் : இது போன்ற நேரங்களில் பந்து எப்படி வந்தாலும், எந்த இடத்தில் பிட்ச் ஆனாலும் அதனை எல்லைக்கோட்டுக்கு விரட்ட வேண்டும் என்ற மனநிலையில் தான் விளையாட வேண்டும். பந்துகளை வீணாக்குவதில் எந்தவித பிரயோசனமும் இல்லை".
இவ்வாறு நசீர் ஹுசைனுக்கு பதில் அளிக்கும் விதமாக தொலைக்காட்சி வர்ணனையில் கங்குலி இதனைத் தெரிவித்திருந்தார். மேலும் போட்டி முடிவுற்ற பின் கங்குலி கூறுகையில்,
"இந்திய அணி இன்னிங்சில் முதல் 10 ஓவர்கள் மற்றும் கடைசி 6 ஓவர்களில் தான் பிரச்சினை இருந்தது. இதை அவர்கள் விரைவில் திருத்திக் கொள்வார்கள் என நம்புகிறேன் ஏனெனில் தற்போது இந்திய அணி இந்த உலகக் கோப்பையில் மிகச்சிறந்த ஃபார்மில் உள்ளது. இது போன்ற எண்ணங்கள் வெற்றியைத் தேடித் தராது. இந்திய அணி 300 ரன்களில் ஆல் அவுட் ஆகி இருந்தால் கூட நான் சந்தோஷப்பட்டிருப்பேன். ஆரம்ப மற்றும் இறுதிக் கட்ட ஓவர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த புதிய வழிகளை இந்திய அணியினர் கண்டுபிடிப்பார்கள்". - இவ்வாறு கங்குலி கூறினார்.
மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்புடன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வங்காளதேச அணியை நாளை எதிர்கொள்கிறது.