என்ன நடந்தது ?
சமீபத்தில் இந்திய ஜாம்பவானான விவிஎஸ் லட்சுமண் “281 அன்ட் பியோன்ட்” என்னும் சுயசரிதையை வெளியிட்டார். நட்சத்திர வீரர்களான சௌரவ் கங்குலி மற்றும் ஜாகீர் கான் வெளியீட்டு விழாவில் பங்கேற்றிருந்தனர்.
விழாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லட்சுமணின் 281-ஐப் பற்றி கங்குலி சில அறியப்படாத விஷயங்களை பகிர்ந்து கொண்டார். கங்குலி லக்ஷ்மணிடம் எதார்த்தமாக சுயசரிதையின் தலைப்பை '281 and Beyond, and that saved Sourav Ganguly's Career' என்று மாற்றிக்கொள்ளும்படி விளையாட்டாக கூறினார்.
பின்னணி ?
சௌரவ் கங்குலி இந்தியாவின் தலை சிறந்த கேப்டன்களில் ஒருவராகப் போற்றப்படுபவர். 2000 ஆம் ஆண்டு இந்திய அணி சூதாட்ட சர்ச்சையில் சிக்கி தவித்து வந்த நிலையில், சௌரவ் கங்குலி கேப்டனாக பொறுப்பேற்றார். இந்திய அணியை நல்வழிப்படுத்தி முன்னேற்றத்திற்கு கொண்டு சென்றார் கங்குலி. கடின காலகட்டத்தில் சௌரவ் கங்குலி பெரும்பங்காற்றினார்.
இந்த முன்னாள் இந்திய கேப்டன் பல்வேறு சாதனைகளை செய்து இருந்தாலும் 2001-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றிருந்தது, சவுரவ் கங்குலி இன்றளவும் நினைவில் வைத்துள்ளார்.
அந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்தியா 0-1 என்று பின்னடைவில் இருந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் போல்லோ ஆனை பெற்றிருந்த இந்தியா அணி லட்சுமணின் அபார 281 ரன்களும், டிராவிடின் 180 ரன்களும் இந்தியாவை வெற்றி பெற செய்தது.
அந்தப் போட்டியின் நிகழ்வே இப்புத்தகத்திற்கு தலைப்பாக இருக்கிறது
“281 and beyond”
மையக்கருத்து
லட்சுமணின் 281 ரன்களின் முக்கியத்துவத்தை பற்றி கூறிய கங்குலி “கடந்த மாதம் லட்சுமணுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தேன், ஆனால் அதற்கு அவர் பதிலளிக்கவில்லை. நான் கூறியது என்னவென்றால் இந்த சுயசரிதைக்கு நீங்கள் வைத்திருக்கின்ற தலைப்பு சரியானதாக இல்லை. “281 and Beyond and that Saved Sourav Ganguly’s Career” என்பதுதான் சரியான தலைப்பு” என்று கூறியிருந்தார்
மேலும் அவர் கூறியதாவது “நான் இந்த தலைப்பை எதிர்பார்க்கிறேன், ஏனென்றால் லட்சுமண் 281 ரன்களை அடிக்காமல் இருந்திருந்தால் அந்த டெஸ்ட் தொடரை இழந்திருப்போம், நான் மறுபடியும் கேப்டனாக செயல்பட வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கும்” என்று கூறினார்.
சூதாட்ட சர்ச்சையால் தவித்துக்கொண்டிருந்த இந்திய அணி, இந்த டெஸ்ட் தொடரில் தோல்வியை தழுவி இருந்தால், பெரும் சிக்கலுக்கு ஆளாகியிருக்கும். லட்சுமணின் 281 ரன்கள் இந்திய அணிக்கு ஒரு புதுப் பாதையை உருவாக்கியது என்றே கூறலாம்.
அடுத்தது என்ன ?
லட்சுமண் மற்றும் கங்குலி ஒருவருக்கொருவர் மரியாதையுடன் நட்பு பறைசாற்றுவர். கிரிக்கெட் வாழ்வில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் தங்களுக்குள் இருக்கும் மரியாதையை நிகழ்ச்சிகளில் வெளிப்படுத்துவது இவர்கள் எந்தளவிற்கு ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் இருக்கின்றனர் என்பதை காட்டுகிறது.
கங்குலி வர்ணனையாளராகவும், கிரிக்கெட் நிர்வாக சங்கங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். லட்சுமண் வர்ணனையாளராக பல போட்டிகளில் வலம் வருகிறார்.
ரசிகர்கள், இவர்களின் பாதை வெவ்வேறாக இருந்தாலும் சிறந்த நட்புடன் இவர்களை நெடுநாள் காண வேண்டும் என்று எண்ணிக் கொண்டுள்ளனர்.
எழுத்து : வைபவ் ஜோஷி
மொழியாக்கம் : பாஹாமித் அஹமத்