"இந்திய கிரிக்கெட்டை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்" - கொதித்தெழுந்த கங்குலி.

Saurav Ganguly.
Saurav Ganguly.

'இந்திய கிரிக்கெட் வாரியம்' (பிசிசிஐ) சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி கோப்பையை வெல்ல முடியாமல் அரையிறுதியோடு வெளியேறியதற்கு ஏகப்பட்ட விமர்சனங்களையும் கேள்விகளையும் இந்திய கிரிக்கெட் வாரியம் எதிர்கொண்டது.

இந்நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் 'ராகுல் டிராவிட்'-க்கு நோட்டீஸ் அனுப்பியதன் மூலமாக புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது பிசிசிஐ. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி, "இந்திய கிரிக்கெட்டை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்" என கோபத்தோடு கூறியிருக்கிறார்.

இரட்டை ஆதாயம் தொடர்பாக ராகுல் டிராவிட்-க்கு எதிராக மத்தியபிரதேச கிரிக்கெட் அமைப்பின் உறுப்பினர் 'சஞ்சய் குப்தா' அளித்த புகாரின்படி, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்குநெறி அதிகாரியான டி.கே.ஜெயின் இந்த நோட்டீசை டிராவிடுக்கு அளித்துள்ளார்.

Rahul Dravid.
Rahul Dravid.

சஞ்சய் குப்தா தன்னுடைய புகாரில் கூறியுள்ளது என்னவென்றால்,

"இரட்டை ஆதாயம் தரும் பதவிகளில் பல்வேறு வீரர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக ராகுல் டிராவிட், தேசிய கிரிக்கெட் அகாடமி இயக்குனராகவும் பதவி வகிக்கிறார். மேலும் ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) அணியை நடத்தும் 'இந்தியா சிமெண்ட்ஸ்' இன் துணை தலைவராகவும் பதவியில் இருக்கிறார். ஆனால் பிசிசிஐ விதிமுறைப்படி யாரும் ஆதாயம் தரும் இரட்டை பதவிகளில் இருக்கக் கூடாது என்பது விதியாகும்".

இந்த புகாரை ஏற்றுக் கொண்டிருக்கும் பிசிசிஐ ஒழுங்கினை அதிகாரி டி.கே.ஜெயின் கூறுகையில், "டிராவிட்டுக்கு கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள இந்த புகாருக்கு அவர் இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும்" என்றார்.

இந்நிலையில் ராகுல் டிராவிட்-க்கு எதிரான இந்த புகாருக்கு தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார் முன்னாள் வீரர் 'சவுரவ் கங்குலி'. சமூக வலைதளமான டுவிட்டரில் அவர் தெரிவித்துள்ளது என்னவென்றால்,

"இந்திய கிரிக்கெட்டில் தற்போது வந்துள்ள ஒரு புதிய பேஷன் தான் இது. அடிக்கடி செய்திகளில் இடம் பெறவும், புகழ் பெறவும் இந்த இரட்டை ஆதாய விஷயத்தை கையில் எடுக்கிறார்கள். இந்திய கிரிக்கெட் இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்".

கங்குலியும் இதுபோன்ற 'இரட்டை ஆதாய' பிரச்சினையை இதற்கு முன் எதிர்கொண்டுள்ளார். இவர் இதற்கு முன் பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் பதவி மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி அணியின் ஆலோசகர் பதவி என இரட்டை பதவியில் இருப்பதாக சர்ச்சை எழுந்தது அதற்கு அப்பொழுது கங்குலி விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதில் சுவாரஸ்யமான ஒரு விஷயம் என்னவென்றால் தற்போது டிராவிடுக்கு எதிராக புகார் அளித்துள்ள 'சஞ்சய் குப்தா' இதற்கு முன்பு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீ.வீ.எஸ்.லட்சுமண் ஆகியோருக்கு எதிராகவும் இதே புகாரை அளித்திருந்தார். அதற்கு அப்போது அவர்கள் இருவரும் தனித்தனியாக விளக்கம் அளித்ததன் மூலமாக அந்த சர்ச்சை அப்பொழுது முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் ராகுல் டிராவிட் வருகிற 16-ஆம் தேதி தன்னுடைய விளக்கத்தை பிசிசிஐக்கு அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது விளக்கத்திற்கு பிறகே அவர் மீது ஏதேனும் நடவடிக்கை பாயுமா என்பது தெரியவரும்.

Quick Links

Edited by Fambeat Tamil