நடந்தது என்ன?
முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் கௌதம் காம்பீர் 2019 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா அணி கோப்பையை வெல்லும் என தெரிவித்துள்ளார். சமீபத்தில் அரசியலில் ஈடுபட்டு வரும் கௌதம் காம்பீர் இவ்வருட உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறும். எதிரணியாக இங்கிலாந்து அல்லது இந்திய அணி விளையாடும் என தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
உங்களுக்கு தெரியுமா...
2019 உலகக் கோப்பை தொடர் தொடங்க இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், அனைத்து உலகக் கோப்பை கிரிக்கெட் அணி ரசிகர்களும், கிரிக்கெட் வல்லுநர்களும் தங்களது விருப்ப அணியின் வலிமை, பலவீனம் மற்றும் கோப்பையை வெல்லக்கூடிய வாய்புகள் ஆகியனவை வகுத்து வருகின்றனர். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் உலகக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளது என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த இரு அணிகள் தான் பேட்டிங், பௌலிங் மற்றும் ஃபீல்டிங் என மூன்றிலும் தேர்ந்த அணியாக உள்ளது என்பது முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் கணிப்பாகும்.
இருப்பினும் ஷேன் வார்னே மற்றும் சில கிரிக்கெட் ஜாம்பவான்கள் ஆஸ்திரேலியா அணி உலகக் கோப்பையை வெல்லும் என தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் நடந்த இந்தியா மற்றும் பாகிஸ்தானிற்கு எதிரான தொடரில் ஆஸ்திரேலியா அணி மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது, உலகக் கோப்பையில் பங்கேற்க ஆஸ்திரேலிய அணிக்கு அதிக நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டிவன் ஸ்மித் மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பியதன் மூலம் அந்த அணி மேலும் வலிமையாக திகழ்கிறது.
கதைக்கரு
டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற பத்திரிகைக்கு கௌதம் காம்பீர் அளித்த நேர்காணலில் உலகக் கோப்பையில் உங்களது பிடித்தமான அணி எது என்று கேள்வி எழுப்பப்பட்டது. ஆஸ்திரேலியா அணி எனக்கு மிகவும் பிடித்த அணி, கண்டிப்பாக இவ்வருட உலகக் கோப்பையில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். என்னுடைய இரண்டாவது பிடித்தமான அணியாக திகழும் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளில் ஏதேனும் ஒரு அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடும் என தெரிவித்துள்ளார்.
இந்திய அணியினைப் பற்றி குறிப்பிட்டு பேசிய கௌதம் காம்பீர்:
இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்த வரையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்துவார்கள். ஜாஸ்பிரிட் பூம்ரா இந்திய அணியின் மிக முக்கியமான வீரர் ஆவார். இந்த உலகக்கோப்பை மிகவும் விருவிருப்பாக இருக்கப்போகிறது. கண்டிப்பாக குறைந்தது 6 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வருட உலகக் கோப்பை தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒரு போட்டியில் மோத வேண்டியுள்ளது. எனவே ஒரு அணிக்கு ஒவ்வொரு போட்டியும் மிக முக்கியமான போட்டியாகும். லீக் தொடரைப் போல் எந்த அணிக்கும் சிறிது கூட ஓய்வு கிடைக்க வாய்ப்பில்லை.
மேலும் மேற்கிந்தியத் தீவுகள் அணி அவ்வளவாக உலகக் கோப்பையில் மற்ற அணிகளுக்கு நெருக்கடியை அளிக்காது, ஏனேனில் அந்த அணியில் சிறப்பான சுழற்பந்து வீச்சாளர்கள் யாரும் இல்லை என முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் கௌதம் காம்பீர் கூறியுள்ளார்.
அடுத்தது என்ன?
ஆஸ்திரேலியா அணி உலகக் கோப்பை தொடரில் அதிக முறை கோப்பையை கைப்பற்றிய அணியாக திகழ்கிறது. 2019 உலகக் கோப்பையில் ஜீன் 1 அன்று தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்திய அணி தனது முதல் உலகக்கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்காவை ஜீன் 5 அன்று எதிர்கொள்கிறது.