நம் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரான கவுதம் கம்பீர் கைது செய்யப்பட உள்ளார். அவரை கைது செய்ய டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. ஆனால், அவர் ரூ 10000 கட்டி ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அவரை டெல்லி நீதிமன்றம் ஏன் கைது செய்ய உத்தரவிட்டு உள்ளது என்பதற்கான காரணத்தை இங்கு விரிவாக காண்போம்.
கௌதம் கம்பீர் நம் இந்திய அணியின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர் ஆவார். கௌதம் கம்பீருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அவர் சில மாதங்களுக்கு முன்பாக அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். அந்த ஓய்வின் அதிர்ச்சியில் இருந்தே அவரது ரசிகர்கள் இன்னும் வெளிவரவில்லை. தற்போது கௌதம் கம்பீர் ரசிகர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கௌதம் கம்பீர் இந்திய அணியின் பல வெற்றிகளுக்கு உதவி இருக்கிறார்.
2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் இவர்தான். இந்திய அணி உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கையை எதிர்கொண்டது. அந்த போட்டியில் இலங்கை அணி அடித்த ரன்களை சேஸ் செய்யும் பொழுது இந்திய அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்தது.
நட்சத்திர வீரர்களான சச்சின் மற்றும் சேவாக் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். இந்தியா இந்த போட்டியில் வெற்றி பெறுவது கடினம் தான் என்ற பயம் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களிடம் உருவாக்கியது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் கௌதம் கம்பீர் தான் நிலைத்து நின்று விளையாடி 96 ரன்கள் விளாசினார். இறுதிப் போட்டியில் இவரது சிறப்பான ஆட்டம் தான் இந்திய அணி உலக கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
அதன் பின்பு 2018 ஆம் ஆண்டு வரை தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடர்ந்தார். கடந்த சில வருடங்களாக அவரால் சிறப்பாக விளையாட முடியவில்லை. அதுமட்டுமின்றி 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரிலும் அவரால் சிறப்பாக விளையாட முடியவில்லை. எனவே அவர் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை. அதன்பின்பு கடந்த 2018 ஆம் ஆண்டின் இறுதியில் தனது ஓய்வை அறிவித்து விட்டார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு டெல்லியின் காஜியாபாத் பகுதியில் உள்ள புதிதாக கட்டப்பட இருந்த அடுக்குமாடி குடியிருப்பின் 17 வீடுகளை வாங்க, 17 பேர் முன்பணமாக தலா ரூ1.98 கோடியை செலுத்தி இருந்தனர். இந்த கட்டுமானப் பணியின் இயக்குனராகவும் மற்றும் விளம்பர தூதராகவும் கவுதம் கம்பீர் இருந்துள்ளார். ஆனால் இந்த கட்டுமான பணி இன்னும் தொடங்கப்படவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட அந்த 17 பேரும் கவுதம் கம்பீருக்கு எதிராக டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம், கவுதம் கம்பீருக்கு நேரில் ஆஜராகும்படி பலமுறை சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால் அவர் நேரில் ஆஜராகவில்லை. எனவே கௌதம் கம்பீரை கைது செய்ய பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது டெல்லி நீதிமன்றம். மேலும் இந்த விசாரணை ஜனவரி 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. நேற்று நடைபெற்ற இந்த வழக்கில் மீண்டும் கௌதம் கம்பீர் நேரில் ஆஜராகவில்லை. தனது வக்கீல் மூலம் ரூபாய் 10,000 கட்டி ஜாமீனில் வெளிவந்துள்ளார். எனவே இந்த வழக்கை சில நாட்களுக்கு ஒத்திவைத்துள்ளது டெல்லி நீதிமன்றம்.