உலகின் சிறந்த அணியை எதிர்கொள்ள வசதியாக, பல புதுமையான வழிகளை பயன்படுத்தப் போவதாகவும் வேகப் பந்துவீச்சை எளிதாக சந்திக்கும் வகையில் அவர்களின் பேட்டிங் மற்றும் மனநிலையை மாற்றுவதும் அதில் ஒரு திட்டம் என இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் W.V.ராமன் கூறியுள்ளார்.
ஜூன் மாதம் உடற்தகுதி மற்றும் பயிற்சி முகாம் (தேசிய கிரிக்கெட் அகாடமியில்) நடைபெற உள்ளது. பெண் கிரிக்கெட் வீரர்களுக்கு பிரத்யேகமாக உடற்தகுதிக்கென்று முதல்முறையாக இப்போது தான் முகாம் நடைபெறுகிறது. இதில் அனைத்து வீராங்கனைகளும் கலந்துகொள்ள உள்ளனர்.
பெண்கள் கிரிக்கெட் குறித்து சில விஷயங்களை பத்திரிக்கையாலரக்ளிடம் பகிர்ந்து கொண்டார் பயிற்சியாளர் W.V.ராமன்.
அவர் கூறுகையில், “19 வயதிற்குட்பட்டோருக்கான ஆண்கள் அணியின் வேகப் பந்துவீச்சாளர்களை இவர்கள் எதிர்கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். ஏனென்றால், நியூசிலாந்தைச் சேர்ந்த லியா தகுஹு 120கிமீ வேகத்தில் பந்து வீசுகிறார். அதை நம் பெண்கள் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் அல்லவா. இந்தியாவில் விளையாடும் போது அவர்களால் இந்தளவிற்கு வேகமான பந்துவீச்சை சந்திக்க வாய்ப்பில்லை. வெளிநாடுகளில் விளையாடும் போது, அங்குள்ள பிட்ச்சின் தன்மை, பவுன்ஸ் மற்றும் வேகத்தை கையாள்வதற்கான திறமையை நமது பெண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். உள்நாட்டு கிரிக்கெட்டில் தகுஹு போன்ற ஒரு பந்துவீச்சாளரை இவர்கள் சந்திக்க வாய்ப்பில்லை என்று தான் நினைகிறேன்”.
“இரண்டு வடிவங்களான கிரிக்கெட் விளையாடும் போது சில சமயம் ஏற்றத்தாழ்வு ஏற்படும். 50 ஓவர் ஆட்டங்களில் தாக்குதலை தொடுக்க நமக்கு நிறைய நேரம் கிடைக்கும். ஆனால் டி20 போட்டியில் இறங்கியவுடன் அடித்து ஆட வேண்டும். ஆகையால், பந்துவீச்சிற்கு சாதகமான மற்றும் சவாலான பிட்ச்களில் வேகப் பந்துவீச்சை எதிர்கொள்ளும் தைரியத்தை பெண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு கொஞ்ச காலம் ஆகலாம். ஆனால் நிச்சியம் ஒரு நாள் நடக்கும் என எனக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்கிறார் ராமன்.
சென்ற ஆண்டு இந்திய பெண்கள் அணிக்கு தற்காலிக பயிற்சியாளராக முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் ரமேஷ் பவார் நியமிக்கப்பட்டார். ஆனால், அணியில் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜுக்கும் இவருக்கும் இடையே ஏற்பட்ட பூசல்களால், பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின் பயிற்சியாளர் பதவிக்கு நேர்காணல் நடத்தப்பட்ட்து. இந்த பதவிக்கு பல வெளிநாட்டு வீரர்கள் விண்ணப்பம் அளித்திருந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் W.V.ராமன் தேர்வு செய்யப்பட்டார்.
“பெண்கள் கிரிக்கெட்டை நெருக்கமாக பின் தொடராவிட்டாலும், கொஞ்ச காலமாகவே நான் இவர்களின் ஆட்டத்தை பார்த்து வருகிறேன். இவர்களிடம் அளப்பரிய திறமை உள்ளது. இவர்களுக்கு உள்ள திறனுக்கு நிலையான பயிற்சி வழங்கினால் எதிர்காலத்தில் நிச்சியம் மிகப்பெரிய அணியாக உருவெடுப்பார்கள். ஒவ்வொருவரின் திறமை என்ன என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்துவதில் தான் நான் இப்போது கவனம் செலுத்துகிறேன். நிச்சியம் இவர்கள் உயர்ந்த இடத்திற்கு செல்வர்கள்” என நம்பிக்கையோடு தெரிவித்தார் ராமன்.
பலர் பெண்கள் கிரிக்கெட்டை மிகவும் குறைவாக எண்ணுகிறர்களே என கேட்டதற்கு, “ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம். என்னைப் பொருத்தவரை நம் பெண்கள் சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகிறார்கள். வெளிநாட்டு பெண் வீரர்களோடு இவர்களை ஒப்பீடு செய்யமாட்டேன். ஏனென்றால் அங்கு இள வயதிலிருந்தே பள்ளியில் விளையாட்டு ஒரு அங்கமாக உள்ளது. இதனால் அவர்களுக்கு பல அனுகூலங்கள் உள்ளன. பெண்கள் கிரிக்கெட்டை ஊக்குவிக்க பிசிசிஐ பல நடவடிக்கைகள் எடுத்து வருவதாக” கூறுகிறார் ராமன்.
ஆண்கள் கிரிக்கெட்டையும் பெண்கள் கிரிக்கெட்டையும் ஒப்பீடு செய்வதே தவறானது என்று கூறும் W.V.ராமன், "ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பார்வையாளர்கள் உள்ளார்கள். இரண்டு ஆட்டமும் ஒன்று தானே. இன்று அவர்கள் புகழ் பெறாமல் இருக்கலாம். அதற்காக பெண்கள் கிரிக்கெட்டை ஆதரிக்காமல் இருக்க முடியுமா” என நம்மிடம் கேள்வி எழுபுகிறார்.