க்ளோபல் கனடா டி20 தொடர்நது வெற்றிகரமாக இரண்டாவது சீசனானது நேற்றைய தினம் நிறைவடைந்தது. முதல் சீசனை காட்டிலும் இரண்டாவது சீசன் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. இதற்க்கு காரணம் இந்தியாவின் யுவராஜ் சிங், ரஸ்ஸல் என பல முன்னணி வீரர்கள் இந்த தொடரில் கலந்துகொண்டதே. இதன் இறுதி போட்டியானது உலகக்கோப்பை இறுதிப்போட்டி போன்றே ட்ரா-வில் முடிந்து பின் சூப்பர் ஓவருக்கு சென்று மிகவும் விறுவிறுப்பை ஏற்படுத்தியது. சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்ற பல முன்னாள் வீரர்களான யுவராஜ், மெக்கல்லம், டுமினி போன்ற வீரர்கள் இதில் கலந்து கொண்டனர். இந்த தொடரில் கலக்கிய டாப்-5 சிறந்த ஆட்டக்காரர்களை பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.
#5) கிறிஸ் லின் ( அதிக சிக்சர்கள் )
சர்வதேச போட்டிகளில் பல வீரர்கள் ஜொலிப்பது போல ஒருசில வீரர்கள் வெறும் இதுபோன்ற டி20 தொடர்களில் மட்டும் சிறப்பாக விளையாடி ரசிகர்களை கவருவார்கள். அப்படிப்பட்ட வீரர்களில் ஒருவர் தான் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிறிஸ் லின். இவர் ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச போட்டிகளில் அவ்வளவாக விளையாடா விட்டாலும் இதுபோன்ற டி20 போட்டிகளில் கலக்கி வருகிறார். டி20 போட்டிகளை பொறுத்தவரையில் அதிகமாகவே சிக்சர்களை பறக்கவிடுவார்கள். அதில் இவர் கைதேர்ந்தவர். இந்த தொடரில் 7 போட்டிகளில் விளையாடிய இவர் 29 சிக்சர்கள் விளாசியுள்ளார். மொத்தம் 295 ரன்களும் குவித்துள்ளார்.
#4) சோஹிப் மாலிக் ( சிறந்த பேட்டிங் சராசரி மற்றும் சிறந்த எகானமி )
சோஹிப் மாலிக் சமீபத்தில் நடந்து முடிந்த உலககோப்பை தொடருடன் ஓய்வினை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தார். அதுமட்டுமல்லாமல் கடைசியாக அவர் பங்கேற்ற சர்வதேச போட்டிகளிலும் இவரின் ஆட்டம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. இந்நிலையில் இவர் இந்த கனடா டி20 தொடரில் வான்கூவர் நைட் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த அணி இந்த தொடரில் கோப்பையை நூலிழையில் தவறவிட்டு இரண்டாம் இடத்தினை பிடித்தது. இந்த தொடர் இவருக்கு மிக சிறப்பானதாகவே அமைந்தது. 6 போட்டிகளில் விளையாடிய இவரின் பேட்டிங் சராசரி 213. அதே போல இம்முறை அவ்வளவாக இவர் ஓவர்களை வீச விட்டாலும் அதிலும் ஒரு சாதனையை படைத்துள்ளார். 3 ஓவர்கள் பந்துவீசியுள்ள இவரின் பௌலிங் எகானமி வெறும் 6 தான். இதுவே இந்த தொடரில் சிறந்தது.
#3) இஸ் சோதி ( அதிக விக்கெட்டுகள் )
சமீப காலமாக சர்வதேச போட்டிகளில் தலை காட்டாத இஸ் சோதிக்கு இந்த தொடர் மிகவும் திருப்பு முனையாக அமைந்துள்ளது. இதில் ப்ராம்ப்டன் ஒல்வேஸ் அணிக்காக இவர் விளையாடினார். அந்த அணி அரையிறுதியிலேயே வெளியேறினாலும் இவரின் பந்துவீச்சு ரசிகர்கள் அனைவரையும் பெருமளவில் கவர்ந்தது. இதில் 6 போட்டிகளில் பங்கேற்ற சோதி 12 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்தார். இவரின் பௌலிங் சராசரி வெறும் 14.58 தான்.
#2) கிறிஸ் கெயில் ( தனி நபர் அதிகபட்ச ஸ்கோர் )
"யூனிவேர்சல் பாஸ்" கெயிலை பற்றி நம் அனைவருக்கும் தெரியும். டி20 போட்டி என்று வந்துவிட்டால் வெளுத்து வாங்கும் ஆட்டக்காரர். அணைத்து டி20 தொடர்களிலும் பங்கேற்கும் இவர் அதில் அனைத்திலும் தனது பெயரை பதித்து விட்டு தான் வருவார். அந்த வகையில் இந்த கனடா டி20 லீக் தொடரில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் இந்த முறை வான்கூவர் நைட் கேப்டனாக செயல்பட்டு வந்தார். ஆனால் இந்த அணியியல் இரண்டாம் இடத்தையே பிடிக்க முடிந்தது. டி20 போட்டிகளில் சதமடிப்பது என்பது இவருக்கு சாதாரணம். அந்த வகையில் இந்த தொடரில் மொன்டெரால் டைகர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 54 பந்துகளில் 122 ரன்கள் குவித்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 225.93. இதுவே இந்த தொடரில் அதிகபட்சமாகும்.
#1) ஜேபி டுமினி ( அதிக ரன்கள் குவித்த வீரர் )
இந்த கனடா டி20 லீக் தொடரின் இறுதிப் போட்டியானது ரசிகர்கள் மத்தியில் அதிகம் கவர்ந்த போட்டியாக கருதப்படுகிறது. இந்த போட்டியில் சோஹிப் மாலிக் மற்றும் டுமினி இருவரும் இறுதிப்போட்டியில் பங்கேற்ற அணிகளுக்கு கேப்டனாக விளங்கினர். அதுவும் அந்த போட்டியின் கடைசி ஓவர் அனைவரின் மனதையும் கொள்ளையடித்து விட்டது. இறுதியில் டுமினி-ன் அணியானது வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இந்தாண்டு இவர் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றாலும் இவரின் கிரிக்கெட் திறன் இன்னும் துளியளவும் குறைய வில்லை என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு. இந்த தொடரில் 8 போட்டிகளில் விளையாடிய இவர் 338 ரன்கள் குவித்து இந்த தொடரில் அதிக மதிப்புமிக்க வீரர் என்ற விருதினையும் பெற்றார்.