டெல்லியை சேர்ந்த முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரரான கவுதம் காம்பீர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தமது ஓய்வினை அறிவித்துள்ளார். 37 வயதான இவர் இதனை தமது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வடிவில் தெரிவித்துள்ளார்.
காம்பீர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் 18 வருட கிரிக்கெட் வாழ்வில் தனது இலக்கினை அடைய உதவியாக இருந்த அணைவருக்கும் தமது நன்றியினை தெரிவித்துள்ளார். இவர் 1999-2000 ஆம் ஆண்டில் டெல்லி அணியிலிருந்து தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார்.
காம்பீர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது : "நாம் எடுக்கும் சில முடிவுகள் , நமது மனது ஏற்றுக் கொள்ளாது. கனத்த இதயத்துடன் எனது கிரிக்கெட் வாழ்விலிருந்து நான் ஓய்வு பெருகிறேன் " என மனம் உருகி கூறியுள்ளார்.
அத்துடன் அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் " நான் 15 வருடமாக எனது தேசத்திற்காக கிரிக்கெட் விளையாடியுள்ளேன், இந்த அழகான விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன் " என்று பார்பவர்களின் கண்ணைக் கலங்க வைக்கும் வகையில் தெரிவித்துள்ளார்.
இடது கை பேட்ஸ்மேனான காம்பீர் , இந்திய அணி வென்ற 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 50 ஓவர் உலகக் கோப்பை என இரண்டிலும் இவரது பங்கு மகத்தானது ஆகும்.
2007 டி20 உலகக் கோப்பையில் காம்பீர் விளாசிய 75 ரன்கள் இந்திய அணி , பாகிஸ்தான் அணிக்கு எதிராக பெரும் இலக்கினை அடைய பெரும் உதவியாக இருந்தது. 2011-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையில் இவர் விளாசிய 97 ரன்கள் இலக்கை நிர்ணயித்த 275 இலக்கினை அடைய பெரும் உதவியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
2009ம் ஆண்டில் சர்வதேச டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் இடத்தில் வகித்தார். இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை காம்பீர் சர்வதேச டி20 பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முதலிடத்தை வகித்தார்.
2003ல் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய இவர் 58 டெஸ்ட் போட்டிகள் , 147 ஒருநாள் போட்டிகள் , 37 டி20 போட்டிகள் என பங்கேற்று மொத்தமாக 10,000ற்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு 2012 மற்றும் 2014 ஆகிய இரு வருடங்களிலும் சேம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார். ஐபிஎல் ஆரம்பித்த முதல் மூன்று சீசனில் டெல்லி அணிக்கு கேப்டனாக செயல்பட்டார். பின்னர் மீண்டும் 2018ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் டெல்லி அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் 6 போட்டிகளில் மட்டுமே கேப்டனாக செயல்பட்டார், தொடர் தோல்விகளின் காரணமாக இளம் வீரர் ஸ்ரேயஸ் ஐயரிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்து விட்டு கேப்டன் பதவியிலிருந்து விலகினார். 2019 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல்- இல் டெல்லி அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டுள்ளார்.
எதிர்பாராத விதமாக காம்பீர் தனது ஓய்வினை அறிவித்த சில மணி நேரங்களுக்கு முன்பு டெல்லி டேர்டெவில்ஸ் என இருந்த அந்த அணியின் பெயர் " டெல்லி கேபிடல்ஸ் " என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அத்துடன் அந்த அணியின் சின்னத்தையும் மாற்றியுள்ளது. இளம் வீரர் ஸ்ரேயஸ் ஐயர் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதுபெரும் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் தனது கடைசி கிரிக்கெட் போட்டியை ரஞ்சிக்கோப்பையில் ஆந்திரப்பிரதேசத்திற்கு எதிராக வரும் டிசம்பர் 6ல் விளையாட உள்ளார்.
எழுத்து : சர்மா
மொழியாக்கம் : சதீஸ்குமார்