எல்லா விளையாட்டிலும் பெண்கள் பங்கேற்பு இருந்தாலும் பெரும்பாலும் ஆண்களே பெண்களுக்கான விளையாட்டிலும் நடுவர்களாக செயல்படுகின்றனர். இந்நிலையில் முதல்முறையாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய பெண் ஒருவர் நடுவராக தேர்வாகி இருக்கிறார். அவர் பெயர் ஜி.எஸ்.லட்சுமி.
கிரிக்கெட் வீராங்கனையாக லட்சுமி
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் பிறந்த இவர் ஆந்திரா, பீகார் மற்றும் ரயில்வே மகளிர் கிரிக்கெட் அணியில் சிறந்த பந்து வீச்சாளராக இருந்தார். படிப்பு பெரிய அளவில் லக்ஷ்மிக்கு கைகொடுக்காத போதும் கிரிக்கெட் லக்ஷ்மிக்கு வாழ்வில் உயர வழி அமைத்தது. பிற்போக்குத் தனங்கள் மிகுந்த சமூக சூழலில் பிறந்து வளர்ந்த லக்ஷ்மி திருமணத்திற்குப் பிறகும் கிரிக்கெட் மீதான ஈடுபாட்டால் பல்வேறு அணிகளில் சிறப்புடன் விளையாடி தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். கிரிக்கெட் விளையாட்டில் சிறந்து விளங்கினாலும் அவரால் பெரிய அளவில் ஜொலிக்க முடிய வில்லை.
பயிற்ச்சியாளராக லட்சுமி
ரயில்வே அணிக்காக ஆடிய லக்ஷ்மி தெற்கு ரயில்வே கிரிக்கெட் அணியின் பயிற்றுநராக 10 ஆண்டுகள் பணியாற்றினார். பயிற்ச்சியாளராக பல இளம் பெண்களை இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியில் சேர வழிகாட்டியாக இருந்தார். கிரிக்கெட் பயிற்சியாளராக இருந்த போது, இந்திய கிரிக்கெட் வாரியம் 2008 இல் அறிவித்த 5 பெண்கள் நடுவர்கள் அடங்கிய குழுவில் அங்கம் வகித்தார். இதன் மூலம் கிரிக்கெட்டில் தனது அடுத்த படியான நடுவர் பொறுப்பை செய்ய ஆரம்பித்தார்.
அதனைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டு நடுவர்களுக்கு என முதல்முறையாக பிசிசிஐ நடத்திய தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று உள்நாட்டு போட்டிகளுக்கு நடுவராக தேர்வானார். இதுவரை லக்ஷ்மி சர்வதேச அளவில் 3 சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும், 3 சர்வதேச டி 20 போட்டிகளையும் மேற்பார்வையிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச போட்டிகளுக்கு இப்படியாக தேர்வான லட்சுமி பெண்கள் உலக கோப்பை இறுதி போட்டியில் ரெப்ரீயாக பணியாற்ற வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். 1934 முதல் சர்வதேச பெண்கள் கிரிக்கெட் நடைபெற்று வந்தாலும் தடைகளை தாண்டி பெண்கள் கிரிக்கெட்டின் முக்கிய மைல் கல்லை அடைந்துள்ளார் லட்சுமி.
ஐசிசியின் முதல் பெண் போட்டி நடுவர்
51 வயதான ஜி.எஸ்.லட்சுமி முதல்தர போட்டிகளில் நடுவராக செயல்பட்டு வரும் நிலையில் அவரை போட்டி நடுவராக ஐசிசி அறிவித்திருக்கிறது. முதல் பெண் போட்டி நடுவராக அறிவிக்கப்பட்டது தனக்கு பெருமை அளிப்பதாகவும் தனக்கு கொடுத்த இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்துவேன் என்றும் ஜி.எஸ்.லெட்சுமி தெரிவித்து இருக்கிறார். லட்சுமி பல பெண்களுக்கு முன் உதாரணமாக இருப்பதாக ஐசிசி நடுவர் குழுவில் அங்கம் வகிக்கும் மூத்த அதிகாரியான அர்ஜூன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். லெட்சுமியின் இந்த சாதனையை இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் மற்றும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். வருகிற 27-ந்தேதி ஓமன் - நபிமியா ஆண்கள் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெறுகிறது. இதில் லட்சுமி போட்டி நடுவராக பணியாற்ற உள்ளார். இதனால் மூலம் ஐசிசியின் முதல் பெண் போட்டி நடுவர் என்ற பெருமையை பெற இருக்கிறார்.