இப்போதைய இளம் கிரிக்கெட் வீரர்கள் யாரைக்கேட்டாலும் பௌலிங், பேட்டிங், ஃபீல்டிங் விட்டால் கீப்பிங்கையும் பார்ட் டைமாகச் செய்ய வல்லவர்களாகவே உள்ளே வருகிறார்கள். நவீன கிரிக்கெட்டின் தேவை அத்தகையதாக மாறி நிற்கிறது. ஆனால் 90 களின் இறுதி வரை. ஏன் சொல்லப் போனால் 2000 களின் பாதி வரையிலுமே கூட ஆல்ரவுண்டர்களின் மொத்த இருப்பை கை விரல்களின் எண்ணிக்கைக்குள் அடக்கி விடலாம். ஒவ்வொரு டீமிலும் தேர்ந்தெடுத்தால் ஒருவரோ, இருவரோ தேறுவதே அபூர்வம்.
அந்த லேட் எண்பதுகளிலிருந்து பிந்தைய தொன்னூறுகள் வரை கிரிக்கெட்டை ஆண்டவர்கள் முக்கியமான மூன்று ஆல்ரவுண்டர்கள் என்றால் மிகையாகாது. இந்த மூவருமே தனிப்பட்ட சாதனைகளிலும் சரி. தங்களது அணிகளுக்காக முக்கிய போட்டிகளில் முன்னின்று பங்காற்றிய வகையிலும் சரி, ஒருவருக்கொருவர் சற்றும் சளைத்தவர்கள் அல்ல.ஒருவர் நமது இந்தியாவிற்கு முதல் உலகக்கோப்பையை 1983ல் வென்று தந்த கபில்தேவ். மற்றொருவர் பாகிஸ்தானின் மிக வெற்றிகரமான கேப்டனும் தற்போதைய பிரதமருமான பச்சைக்கண் அரசன் இம்ரான்கான். மூன்றாவது நபரைப் பற்றித் தான் நாம் இந்தக்கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
நமது இந்திய - பாகிஸ்தான் போட்டிகளின் பரபர்பை போன்றே... சமயங்களில் அவற்றினும் மேலான பதட்டத்தைப் பற்ற வைக்கக்கூடிய போட்டிகள் இங்கிலாந்திற்கும் ஆஸ்திரேலியாவிற்குமிடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர்கள். 1976ல் நடந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் முதன்முதலாகக் களமிறங்கிய இயன் போத்தம் அவ்வளவாகச் சோபிக்கவில்லை. அவர் வந்தால் கதாநாயகனாகத்தான் வெளியுலகில் அறியப்பட வேண்டும் என்று விதி இருந்திருக்கையில் அதே போன்று நடப்பது இயற்கை தானே! அடுத்த வருடம் ட்ரெண்ட்ப்ரிட்ஜில் நடந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது மேட்சில் நிகழ்ந்தது அந்தத் தருணம்! இறங்கிய தனது அறிமுக டெஸ்டிலும் அடுத்த டெஸ்டிலும் தலா ஐந்து விக்கெட்டுகளைக்கைப் பற்றி இங்கிலாந்து ஆஷஸ்தொடரை வெல்ல முக்கியமானதொரு வீரராக அடையாளம் கொண்டார்.
அதற்குப் பின் போத்தமுக்கு ஏறுமுகம் தான். மீடியம் பேஸ் பவுலராக விக்கெட்டுகளைத் தொடர்ந்து வேட்டையாடிய படியே மறுபுறம் தனது மட்டைவீச்சிலும் ரன்களைக் குவித்து இங்கிலாந்தின் தவிர்க்கவே முடியாத வீரராகிப் போனார். போத்தம் தனது உச்சகட்ட ஃபார்மில் இருக்கையில் களமிறங்கிய ஒரு மேட்சில் 100 ரன்களைக் குவித்து பத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றிய சாதனை இன்றுவரை இரண்டு மூன்று பேர்களால் மட்டுமே செய்ய முடிந்திருப்பதாக விளங்குவது போத்தமின் திறமைக்கு ஒரு சான்று. அவரது ரெகார்டுகளை ஒரு பேட்ஸ்மேன் என்கிற கணக்கில் அவரது சக ஆட்டக்காரர்களுடன் வைத்து ஒப்பிட்டுப்பார்த்தால் சராசரியான ஒன்றாகத்தான் தெரியக்கூடும். ஆனால் புள்ளிவிவரங்களின் சாட்சி வேறு, உண்மை நிகழ்வு வேறு என்பது தானே வரலாறு சொல்லும் உண்மை.
ஆம். ஒரு மிகச் சிக்கனமான ஸ்ட்ரைக் பவுலராக 383 விக்கெட்டுகளை 102 டெஸ்டு மேட்ச்களில் கைப்பற்றி ஐயாயிரத்து சொச்சம் ரன்களையும் குவித்திருக்கும் ஒருவர் மகத்தான வீரர்களின் வரிசையில் வரத் தகுதியானவர் தானே! 14 சதங்களையும், 22 அரைச்சதங்களையும் தனது புள்ளிவிபரப்பட்டியலில் வைத்திருப்பவரைச் சாதாரணமானவராகக் கடந்திட இயலுமா என்ன? அதனால்தான் கவுரவமிகு ”சர்” பட்டத்தைக் கொடுத்து தனது தங்கமகனைக்கொண்டாடி மகிழ்ந்தது இங்கிலாந்து அரசு. ஒரு நாள் போட்டிகளிலும், அதிரடி ஆட்டக்காரராகத் தனது தனி முத்திரையைப் பதிக்கத் தவறவில்லை சர்.இயன் போத்தம்.
இவரது சமகால இரு முக்கிய எதிரிகளில் (மற்றொருவர் கபில்) இம்ரான்கானுக்கும் இவருக்கும் ஏகப்பட்ட ஒற்றுமைகள் உண்டு. இருவருமே பேரழகர்கள்! இருவருக்குமே ஏராளமான பெண் விசிறிகள்! இருவருமே காப்டனாகவும், ஆல்ரவுண்டராகவும் முத்திரை பதித்த ஆட்டக்காரர்கள். ஆனால் இம்ரானுக்கும் இவருக்கும் களத்தில் என்றுமே ஏழாம் பொருத்தம் தான். ஒரு முறை இருவருக்குள்ளும் நடந்த ஸ்லெட்ஜிங் (கள தூண்டுதல்) கோர்ட்டு கேஸ் வரை சென்று முடிந்த வரலாறு உண்டு.
இருந்தாலும் இருவருமே ஆல்ரவுண்டர்கள் தான் அழகர்கள் தான். இங்கிலாந்தின் இம்ரான் தான் போத்தம்... பாகிஸ்தானின் போத்தம் தான் இம்ரான்கான் எனலாம்