இங்கிலந்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் உலக கோப்பையில் ஹர்திக் பாண்டியா மிகப்பெரிய வீரராக உருவெடுப்பார் என்றும் 2011 உலக கோப்பையில் இந்திய அணிக்கு யுவராஜ் சிங் செய்த பங்களிப்பை தற்போது ஹர்திக் பாண்டியா செய்வார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் மெக்ரத் கூறியுள்ளார். 2011 உலக கோப்பையில் தனது பேட்டிங் மற்றும் பவுலிங்கில் ஜொலித்த யுவராஜ் சிங், தனது ஆல்ரவுண்டர் திறமையால் இந்திய அணிக்கு உலக கோப்பை வாங்கி தந்ததோடு தொடர் நாயகன் விருதையும் வென்றது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
“யுவராஜ் இல்லாத குறையை நிச்சியம் ஹர்திக் பாண்டியா போக்குவார். தினேஷ் கார்த்திக்கும் நல்ல பினிஷர். இந்திய அணிக்கு இவர்கள் சிறந்த பங்களிப்பு வழங்குவார்கள் என நினைக்கிறேன். முக்கியமாக, இந்தியாவின் பந்துவீச்சு கூட்டணி அற்புதமாக உள்ளது. உலகின் சிறந்த வேகப் பந்துவீச்சாளரான பும்ரா இந்திய அணியில் தான் உள்ளார். இங்கிலாந்து பிட்ச்சில் இவர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை பார்க்க ஆவலாக உள்ளேன்” என்கிறார் மெக்ரத்.
மேலும் அவர் கூறுகையில், “இந்திய அணிக்கு மற்றொரு முக்கியமான வீரர் தோனி. எந்தவொரு பெரிய தொடருக்கு விளையாடச் சென்றாலும் இந்திய அணி மீது அதிக அழுத்தம் இருக்கும். ஆனால் இதற்கு முன் நடைபெற்ற பெரிய தொடர்களில் இந்திய அணி சிறப்பாகவே விளையாண்டுள்ளது. இந்த முறை இங்கிலாந்தில் விளையாடுவதால், இந்திய அணியின் வெற்றிக்கு தோனி முக்கிய பங்காற்றுவார் என நினைகிறேன். அவரிடம் இருக்கும் அணுபவமும், ஆட்டத்தை கொண்டு செல்லும் விதமும், எப்படி ஆடினால் வெற்றி பெறலாம் என்ற அவரது தொலைநோக்கும் இந்திய அணிக்கு உதவியாக இருக்கும். அதுவும் சமீபத்தில் நிறைவடைந்த ஆஸ்திரேலியா தொடரில் தோனியின் பேட்டிங் அருமையாக இருந்தது” என்கிறார் மெக்ரத்.
இந்த உலக கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளாக இந்தியா ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தை குறிப்பிட்டுள்ளார் மெக்ரத். “கடந்த இரண்டு வருடங்களாக இங்கிலந்து அணி ஒரு நாள் போட்டியில் பல உச்சங்களை தொட்டுள்ளது. என்னைப் பொருத்தவரை உலக கோப்பை வெல்ல இவர்களுக்கே அதிக வாய்ப்பு உள்ளது. இந்திய அணியும் இங்கிலாந்து போல் தான் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியா சரியான சமயத்தில் ஃபார்முக்கு வந்துள்ளது” என்றார்.
இந்த உலக கோப்பையில் மிட்செல் ஸ்டார்க், ரபாடா, பேட் கம்மிங்ஸ் மற்றும் பும்ராவின் பந்துவீச்சை காண ஆவலாக உள்ளேன் என கூறும் மெக்ரத், “கம்மிங்ஸ் மற்றும் ஸ்டார்க் மேட்ச் வின்னர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் பும்ரா பவுலிங் மீது நான் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளேன். நிச்சியம் இவர்கள் அனைவரும் இந்த உலக கோப்பையில் தங்கள் அணிக்கு வெற்றியை தேடி தருவார்கள்” என்றார்.
உலக கோப்பையில் 71 விக்கெட்டுகள் எடுத்து அதிக விக்கெட் எடுத்தோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் மெக்ரத். இந்த சாதனையை யாராவது தகர்ப்பார்களா என அவரிடம் கேட்டால், “எந்த காயமும் இன்றி நீண்ட காலம் விளையாடினால் நிச்சியம் தகர்க்க முடியும். நான்கு உலக் கோப்பை விளையாடியதால், நான் ஒரு அதிர்ஷடசாலி தான். தகர்ப்பதற்காக தான் சாதனைகள் படைக்கப்படுகிறது. ஆனால் என் சாதனையை முந்த வேண்டுமென்றால், நான்கு உலக கோப்பை தொடர் விளையாட வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்” என சிரிக்கிறார் மெக்ரத்.