உலக கோப்பை தொடர் துவங்குவதற்கு முன்பு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அசாத்திய தனமான ஷாட்களை அடித்து கிரிக்கெட் உலகின் மனம் கவர்ந்தார், ஹர்திக் பாண்டியா. ஐபிஎல் தொடரில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்களுக்கு இணையாக பல அற்புத சிக்சர்களை பறக்க விட்டு உள்ளார். பரோடாவை சேர்ந்தவரான இவர், இதுவரை இல்லாத அளவிற்கு செயல்பட்டு வருகிறார். "காஃபி வித் கரண்"எனும் நிகழ்ச்சியில் கே.எல்.ராகுல் உடன் பங்கேற்று சர்ச்சையில் சிக்கி பிசிசிஐ தடைக்கு உள்ளாக்கப்பட்டார். தடையில் இருந்து மீண்ட பின்னர், ஒரு சர்வதேச போட்டிகளில் கூட தவறாது இடம் பெற்று வருகிறார், இந்த ஆல்ரவுண்டர்.
கடந்த ஐபிஎல் சீசன்களில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தமது பேட்டிங்கை வெளிப்படுத்தி வேகப்பந்து வீச்சாளர்களின் பிடியில் சிக்கி தவித்து வந்தார், ஹர்திக் பாண்டியா. ஆனால், அவற்றையெல்லாம் தற்போது தவிடுபொடியாக்கி வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறார். அதுமட்டுமல்லாமல், தமது அணி நெருக்கடிக்கு உள்ளான நிலையில் தேவையான பங்களிப்பை கொடுத்து கட்டமைத்தும் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி வருகிறார். அதேபோல், நடப்பு உலக கோப்பை தொடரிலும் இவரின் பங்கு போற்றதக்கது.
இவரது மிகப்பெரிய பலவீனம் பந்துவீச்சு என்று பலரும் கருதி வந்தனர். பவுன்சர் வகை பந்துவீச்சில் ஈடுபட்டாலும் இவரது பந்துவீச்சில் எதிரணி பேட்ஸ்மென்கள் தாராளமாக ரன்களை குவித்து வந்துள்ளனர். ஒரு ஒருநாள் போட்டியில் 10 ஓவர்களையும் கட்டுக்கோப்பாக வீசுவாரா என்றும் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இதற்கெல்லாம் பதில் அளிக்கும் வகையில், சமீபகாலமாக தமது பந்துவீச்சிலும் அவ்வப்போது மாற்றங்களை நிகழ்த்தி வெற்றி கண்டு வருகிறார். தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் சற்று தடுமாறியிருந்தாலும் பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் முக்கியமான 2 விக்கெட்களை கைப்பற்றி ஆட்டத்தின் போக்கை மாற்றினார், ஹர்திக் பாண்டியா. நேற்று நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங்கில் ஏமாற்றம் அளித்த இவர், பந்துவீச்சில் திறம்பட செயல்பட்டு 3 விக்கெட்டுகளை அள்ளி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
தற்போது இவரின் பந்துவீச்சில் சற்றும் மாற்றம் காணப்பட்டு சராசரியாக மணிக்கு 140 மற்றும் அதற்கு மேலான வேகத்திலும் பந்து வீசி எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு குடைச்சலைக் கொடுக்கிறார். பவுலிங்கில் இவ்வாறு முன்னேற்றம் அடைந்ததால் நேற்று 10 ஓவர்கள் முழுமையாக வீசினார். இதனால் இந்திய அணிக்கு கூடுதலாக ஒரு பந்துவீச்சாளர் தேவைப்படும் அவசியம் வராது எனவும் கூறலாம். எனவே, இனிவரும் ஆட்டங்களில் அணியின் ஆடும் லெவனில் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை களமிறக்கி மிடில் ஆர்டர் குறையை போகக்கூடும். தொடர் ஏமாற்றங்களை கண்டாலும் தற்போது அவற்றை பாடமாக்கி இந்திய அணியின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக முன்னேற்றம் கண்டுள்ளார், ஹர்திக் பாண்டியா. எனவே, தொடர்ந்து தம்மை முன்னேற்றி வந்தால் நீண்ட காலத்திற்கு இந்திய அணியின் வெற்றியை எவராலும் தடுக்க முடியாது.