ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டி-20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டி-20 போட்டி வருகிற 24-ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது காயத்தால் இந்தியாவின் முன்னணி ஆல்-ரவுண்டரான ‘ஹர்திக் பாண்டியா’ விலகியுள்ளார்.
இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஹர்திக் பாண்டியா முதுகு வலி பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற உள்ள 2 டி-20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பாண்டியா பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயத்தால் விலகி உள்ள 'ஹர்திக் பாண்டியா’வுக்கு பதில் இந்திய அணியின் இடக்கை சுழற்பந்து வீச்சாளரும், ஆல்-ரவுண்டருமான ‘ரவீந்திர ஜடேஜா’ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஹர்திக் பாண்டியா பெங்களூரில் உள்ள ‘நேஷனல் கிரிக்கெட் அகாடமி’ (என்.சி.ஏ) யில் இணைந்து தனது காயத்தின் தன்மையை பரிசோதித்து விரைவில் தனது உடல் தகுதியை மேம்படுத்திக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹர்திக் பாண்டியா இது போன்ற முக்கியமான தொடர்களின் போது ஏதோ ஒரு காரணத்தால் அந்தத் தொடரிலிருந்து விலகுவது இது ஒன்றும் புதிதல்ல. கடந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது ஒரு டிவி நிகழ்ச்சியில் பெண்களை இழிவுபடுத்தும் கருத்துக்களை கூறியதால் அந்தத் தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியாவையும், கே.எல் ராகுலையும் இந்திய கிரிக்கெட் வாரியம் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியது நினைவிருக்கலாம்.
அடுத்து நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டித்தொடரில் ஹர்திக் பாண்டியா திரும்ப அழைக்கப்பட்டார். அந்தத் தொடரில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என ஒரு முழுமையான ஆல்-ரவுண்டராக தன்னை மீண்டும் ஹர்திக் பாண்டியா நிரூபித்தார்.
இங்கிலாந்தில் வருகிற ஜூன் மாதம் நடைபெறவுள்ள ‘உலகக் கோப்பை’யில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்த போகும் ஒரு வீரராக ஹர்திக் பாண்டியா எதிர்பார்க்கப்படுகிறார். இந்திய அணி உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் அதில் ‘ஹர்திக் பாண்டியா’வின் பங்களிப்பு மிக அவசியமாகும். இது போன்ற நேரத்தில் இவர் காயத்தால் அவதிப்படுவது இந்திய அணிக்கு நிச்சயம் ஒரு மிகப்பெரிய இழப்பாகும்.
ஆஸ்திரேலிய அணியின் இந்திய சுற்றுப்பயண போட்டி விபரம்.
முதல் டி-20 - பிப்ரவரி 24 (விசாகப்பட்டினம்)
இரண்டாவது டி-20 - பிப்ரவரி 27 (பெங்களூர்)
முதல் ஒருநாள் போட்டி - மார்ச் 2 (ஹைதராபாத்)
இரண்டாவது ஒருநாள் போட்டி - மார்ச் 5 (நாக்பூர்)
மூன்றாவது ஒருநாள் போட்டி - மார்ச் 8 (ராஞ்சி)
நான்காவது ஒரு நாள் போட்டி - மார்ச் 10 (மொஹாலி)
ஐந்தாவது ஒருநாள் போட்டி - மார்ச் 13 (டெல்லி)
‘ஹர்திக் பாண்டியா’வின் இடத்தை ‘ரவீந்திர ஜடேஜா’ நிரப்புவாரா?. ‘ஹர்திக் பாண்டியா’ இல்லாமல் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
செய்தி : விவேக் இராமச்சந்திரன்.
