சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிக முக்கியமான தொடர் என்றால், அது உலக கோப்பை தொடர் தான். இந்த உலக கோப்பை தொடர் ஆனது, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த உலக கோப்பை தொடரில் பல வீரர்கள், பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளனர். அதில் ஒரு சில பேட்ஸ்மேன்கள், அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சாதனை படைத்துள்ளனர். அந்த வீரர்களைப் பற்றி இங்கு காண்போம்.
#1) கிறிஸ் கெயில் மற்றும் மார்லன் சாமுவேல்ஸ் ( 372 ரன்கள் )
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில், 15 ஆவது லீக் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணியும், ஜிம்பாப்வே அணியும் மோதியது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய டுவைன் ஸ்மித் டக் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்பு கிறிஸ் கெயில் மற்றும் சாமுவேல்ஸ் ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து மிகச் சிறப்பாக விளையாடி உலக சாதனை படைத்தனர்.
போட்டியின் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடிய கிறிஸ் கெயில், 147 பந்துகளில் 215 ரன்கள் விளாசினார். இதில் 16 சிக்ஸர்களும், 10 பவுண்டரிகளும் அடங்கும். இதன் மூலம் உலக கோப்பை தொடரில் இரட்டை சதம் விளாசிய முதல் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் என்ற சாதனையை கிறிஸ் கெயில் படைத்தார். இவருடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடிய சாமுவேல்ஸ், 133 ரன்கள் விளாசினார். இவர்கள் இருவரின் அதிரடியால் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களின் முடிவில் 372 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
#2) உபுல் தரங்கா மற்றும் திலகரத்னே தில்ஷன் ( 282 ரன்கள் )
2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில், 26 ஆவது லீக் போட்டியில், இலங்கை அணியும், ஜிம்பாப்வே அணியும் மோதியது. இந்த போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. உபுல் தரங்கா மற்றும் திலகரத்னே தில்ஷன் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடி 282 ரன்கள் குவித்தனர். இதன்மூலம் உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த தொடக்க ஆட்டக்காரர்கள் என்ற சாதனையை படைத்தனர்.
அதிரடியாக விளையாடிய திலகரத்னே தில்ஷன், 131 பந்துகளில் 144 ரன்கள் விளாசினார். இதில் 16 பவுண்டரிகளும், 1 சிக்சரும் அடங்கும். இவருடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடிய உபுல் தரங்கா, 133 ரன்கள் விளாசினார். இதில் மொத்தம் 17 பவுண்டரிகள் அடங்கும். இவர்களது சிறப்பான விளையாட்டால் இலங்கை அணி 50 ஓவர்களின் முடிவில் 327 ரன்கள் குவித்தது. இந்த கடினமான இலக்கை சேஸ் செய்ய முடியாமல் ஜிம்பாப்வே அணி, வெறும் 188 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து விட்டது. எனவே இலங்கை அணி 139 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.