சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் மத்தியில், மிக முக்கியமான தொடர் என்றால் அது உலக கோப்பை தொடர் தான். இந்த உலக கோப்பை தொடர் ஆனது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு உலக கோப்பை தொடர் ஆனது இங்கிலாந்து நாட்டில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு உலக கோப்பை தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் மிகச் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
அதுவும் குறிப்பாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் ஏற்கனவே அரை இறுதிக்கு தகுதி பெற்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வரும் இந்த உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த வீரர்களை பற்றி இங்கு காண்போம்.
#1) டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ( 260 ரன்கள் )
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரின் 26 ஆவது லீக் போட்டியில், ஆஸ்திரேலிய அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆரோன் பின்ச் மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். தொடக்கத்திலேயே ஆரோன் பின்ச் ஒற்றை இலக்கத்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பின்பு டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து மிகச் சிறப்பாக விளையாடினர். தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னர், 133 பந்துகளில் 178 ரன்கள் விளாசினார். இதில் 19 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும். இவருடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடிய ஸ்டீவன் ஸ்மித், 95 ரன்கள் விளாசினார்.
இதன் மூலம் உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஆஸ்திரேலிய வீரர்கள் என்ற சாதனையை படைத்தனர். இவர்களது சிறப்பான விளையாட்டால் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களின் முடிவில் 417 ரன்கள் குவித்தது. இந்த கடினமான இலக்கை சேஸ் செய்ய முடியாமல் ஆப்கானிஸ்தான் அணி வெறும் 142 ரன்களுக்கு சுருண்டு விட்டது. எனவே ஆஸ்திரேலிய அணி இந்த போட்டியில் 275 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
#2) டேவிட் மில்லர் மற்றும் ஜான் பால் டுமினி ( 256 ரன்கள் )
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரின் 3 ஆவது லீக் போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணியும், ஜிம்பாப்வே அணியும் மோதியது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர்களான டு பிளசிஸ், ஹாஷிம் அம்லா, மற்றும் டி காக் ஆகிய வீரர்கள் தொடக்கத்திலேயே சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் டேவிட் மில்லர் மற்றும் டுமினி ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து தென் ஆப்பிரிக்கா அணியை சரிவில் இருந்து மீட்டனர். அதிரடியாக விளையாடிய டேவிட் மில்லர், 92 பந்துகளில் 138 ரன்கள் விளாசினார். இதில் 7 பவுண்டரிகளும், 9 சிக்சர்களும் அடங்கும். இவருடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடிய டுமினி, 100 பந்துகளில் 115 ரன்கள் விளாசினார். இவர்களது சிறப்பான ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்களின் முடிவில் 339 ரன்கள் அடித்தது. இந்த கடினமான இலக்கை சேஸ் செய்ய முடியாமல் ஜிம்பாப்வே அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.