சர்வதேச கிரிக்கெட் போட்டிகளைப் பொறுத்தவரை, ஒவ்வொரு அணியிலும் முன்னணி நட்சத்திர பேட்ஸ்மேன்கள் இருப்பார்கள். அவர்கள் எப்போதும் சிறப்பாக விளையாடுவார்கள் என்று சொல்லிவிட முடியாது. ஒரு சில நேரங்களில் சொதப்புவார்கள். அதுபோன்ற சமயங்களில் மிடில் ஆர்டரில் விளையாடும் பேட்ஸ்மென்கள் சிறப்பாக விளையாடி, நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவில் இருந்து மீட்க வேண்டும். இவ்வாறு டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த வீரர்களைப் பற்றி இங்கு விரிவாக காண்போம்.
#1) குமார் சங்கக்காரா மற்றும் மஹேலா ஜெயவர்த்தனே (624 ரன்கள்)
இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர்கள் இலங்கை அணியில் முக்கிய பேட்ஸ்மேன்களாக திகழ்ந்த, குமார் சங்கக்காரா மற்றும் மஹேலா ஜெயவர்த்தனே. 2006 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணியும், இலங்கை அணியும், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடினர். இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. இலங்கை அணியின் முத்தையா முரளிதரனின் சுழலில், தென் ஆப்பிரிக்க அணி 169 ரன்களில் சுருண்டது. முத்தையா முரளிதரன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்பு முதல் இன்னிங்சை தொடங்கியது இலங்கை அணி.
இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான தரங்கா மற்றும் ஜெயசூர்யா ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். அதன் பின்பு சங்கக்காரா மற்றும் ஜெயவர்த்தனே ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினர். இருவரும் ஜோடி சேர்ந்து 624 ரன்கள் குவித்தனர். மிக சிறப்பாக விளையாடிய ஜெயவர்த்தனே 374 ரன்களையும், சங்கக்காரா 287 ரன்களையும் விளாசினார். இறுதியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 756 ரன்கள் குவித்தது. இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 153 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
#2) சனத் ஜெயசூரியா மற்றும் ரோஷன் மகானமா ( 576 ரன்கள் )

இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர்கள் இலங்கை அணியை சேர்ந்த ஜெயசூர்யா மற்றும் மகானமா. 1997 ஆம் ஆண்டு இந்திய அணி, இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. சிறப்பாக விளையாடிய சச்சின் டெண்டுல்கர் மற்றும் அசாருதீன், சதம் விளாசினர். இறுதியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 537 ரன்கள் குவித்தது. பின்பு முதல் இன்னிங்சை தொடங்கியது இலங்கை அணி. ஜெயசூர்யா மற்றும் மகானமா ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து மிக சிறப்பாக விளையாடினர்.

இவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து 577 ரன்கள் விளாசினார்கள். அதிரடியாக விளையாடிய ஜெயசூர்யா 340 ரன்களையும், மகானமா 225 ரன்களையும் விளாசினார். இறுதியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 952 ரன்கள் குவித்தது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 2 நாட்கள் பேட்டிங் செய்தது. பின்பு இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 3 நாட்கள் பேட்டிங் செய்தது. எனவே இந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.