இவ்வாண்டில் ஐபிஎல் போட்டியானது இந்தியாவில் நடைபெறுமா? இல்லையா? என்ற சந்தேகத்திலே இந்திய ரசிகர்கள் இருந்தனர். ஏனெனில் உலக கோப்பை மற்றும் இந்தியாவில் தேர்தல் நடைபெற இருக்கிறது என்பதால் ஐபிஎல் போட்டி இந்தியாவில் நடைபெறுவது சந்தேகமாகவே இருந்தது. தற்போது பிசிசிஐ 2019ன் ஐபிஎல் போட்டிகள் இந்தியாவிலேயே நடைபெறும் என அறிவித்துள்ளது. வருடாவருடம் வருவாய் அதிகரித்து வருவது ஒருபுறம் இருந்தாலும் ஐபிஎல் போட்டி இந்திய அணிக்காக சிறந்த இளம் வீரர்களை கண்டெடுத்துள்ளது. இதற்கு மிகசிறந்த உதாரணம் தற்போது உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களை தனது சிறப்பான பந்துவீச்சால் திணரடித்துவரும் இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளரான ஜஸ்ப்ரிட் பும்ரா. சில வருடங்களுக்கு முன்னர் ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட துவங்கிய இவர் தனது முழுதிறமையால் தற்போது இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளராக உயர்ந்து இருக்கிறார்.
உலகக்கோப்பை போட்டிகளை அருகில் வைத்துக்கொண்டு ஐபிஎல் போட்டிகளை நடத்துவது கடினம் தான். விறுவிறுப்பான ஐபிஎல் போட்டிகளில் வீரர்களுக்கு காயம் ஏற்பட கூடிய வாய்ப்புகள் அதிகம். இதனால் அவர்களால் முக்கியத்துவம் வாய்ந்த உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்காமல் போக நேரிடலாம். இது ஒருபுறம் இருந்தாலும் இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரானது இந்திய அணிக்கு உலகக்கோப்பையை பெற்றுத்தர சற்று உதவிகரமாக இருக்கவும் வாய்ப்புள்ளது. இந்திய அணி தன்னிடம் உள்ள சில நிறைக்குறைகளை ஐபிஎல் தொடரின் மூலம் சரி செய்யும் வாய்புள்ளது. இந்திய அணி விராட் கோலி தலைமையில் உலககோப்பையில் பங்கேற்க இங்கிலாந்து செல்ல இருப்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. உலகக்கோப்பையை நடத்தவிருக்கும் இங்கிலாந்து அணிக்கு உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்பு அதிகளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கோப்பையை வெல்ல இந்தியாவும் இங்கிலாந்து அணிக்கு சரிசமமாக போட்டியிடும் என்பதில் சந்தேகமில்லை. இப்போது இந்திய அணி ஐபிஎல் பன்னிரெண்டாம் சீசன் போட்டிகள் மூலம் தீர்க்ககூடிய நிறைக்குறைகளை காண்போம்
#1 நான்காம் இடத்தில் யார்?
இந்திய அணி பாரம்பரியமாக தனது பேட்டிங்கிள் சிறந்து விளங்கிவருகிறது. ஒரு தலைசிறந்த பேட்ஸ்மேன் ஓய்வு பெற்றால் அவ்விடத்தை நிரப்ப ஓர் சிறந்த இளம் வீரர் வந்துவிடுவர். துவக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஜோடி டெண்டுல்கர்-கங்குலி அல்லது டெண்டுல்கர்-ஷேவாக் அளவிற்கு வரவேற்பை பெறாவிட்டாலும் தற்போது இந்த ஜோடி தான் உலகில் தலைசிறந்த ஓப்பனிங் ஜோடியாக திகழ்ந்து வருகிறது. இவர்களது தற்போதைய ஆட்டத்திரமைகளை வைத்து பார்த்தால்
இந்தியாவின் ஜாம்பவான் துவக்க ஜோடிக்கு சற்றும் சளைத்தவர்களாக இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை தொடர்ந்து மூன்றாம் இடத்தில் தற்போது உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக இருந்து வரும் விராட் கோலி இருப்பது இந்தியாவிற்கு பெரிய பலத்தை அளிக்கின்றது. ஆனால் இதற்கு அடுத்த இடத்தில் யார்? என்ற கேள்விக்கு இந்திய அணியிடத்தில் பதில் இல்லை. கடந்த 7-8 வருடங்களாக இந்திய அணி நான்காம் இடத்தில் சிறந்த வீரரின்றி தவித்துவருகிறது. கடைசியாக நான்காம் இடத்தில் யுவராஜ் சிங் இருந்தவரையில் இந்திய அணி அசைக்கமுடியாத அணியாக இருந்துவந்தது.
2011-ற்கு பிறகு யுவராஜ் சிங் புற்றுநோய் காரணமாக அணியில் தொடர இயலவில்லை. அதிலிருந்து இந்திய அணி ரஹானே, மனிஷ் பாண்டே, கே.எல் ராகுல் உள்ளிட்ட பல்வேறு வீரர்களை முயற்சித்து பார்த்தது. ஆனால் யாரும் நான்காம் இடத்தில் தனது பெயரை பதிவு செய்யும் வகையில் விளையாட வில்லை. கடைசியாக இந்தியா கடந்த வருடம் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டிகளில் அம்பத்தி ராயுடுவை கண்டெடுத்தது. ஆசிய கோப்பையில் சிறந்து விளையாடிய ராயுடு தொடர்ந்து சிறந்து விளையாடுவாரா? உலகக்கோப்பையில் இடம்பெறுவாரா? என்பதை பொறுத்து தான் பார்க்கவேண்டும்.
இந்தியாவின் வலிமை வாய்ந்த மூன்று மேல்வரிசை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாட கட்டாயத்தில் இருந்து வருகின்றனர். இவர்கள் சற்று தடுமாறினால் அடுத்தபடியாக அணியின் ஸ்கோரை உயர்த்த ஒரு சிறந்த வீரராக ராயுடு உதவுவார் என இவர் கடந்த ஐபிஎல் 11-ஆம் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடியதை வைத்து நம்பலாம். சென்னை அணியில் இவர் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு விளையாடினால் இந்திய அணிக்கு நிச்சியமாக பெருமளவில் உதவும்.