நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றதையடுத்து பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு தகர்க்கப்பட்டது. இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து மோதிய போட்டியில் நியூசிலாந்து வெல்ல வேண்டும் என்று விரும்பியது பாகிஸ்தான் அணி. ஆனால் அதற்கு மாறாக மண்ணின் மைந்தர்கள் இங்கிலாந்து 119 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது. பாகிஸ்தான் வங்கதேசத்தை எதிர்கொள்ளும் போட்டியில் ஏதேனும் அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே அந்த அணியால் அரையிறுதிக்கு தகுதி பெற முடியும்.
நியூசிலாந்தின் நெட் ரன் ரேட் +0.75, மறுமுனையில் பாகிஸ்தானின் நெட் ரன் ரேட் -0.792. எனவே வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் மிகவும் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணியால் அரையிறுதி வாய்ப்பை எட்ட முடியும்.
நாம் இங்கு பாகிஸ்தான் எப்படி அரையிறுதிக்கு தகுதி பெற முடியும் என்பதைப் பற்றி காண்போம்.
பாகிஸ்தான் 308 ரன்கள் முதலில் பேட் செய்து குவித்தால் வங்கதேசத்தை 0 ரன்களில் ஆல்-அவுட் செய்ய வேண்டும்
பாகிஸ்தான் 350 ரன்கள் முதலில் பேட் செய்து குவித்தால் வங்கதேசத்தை 39 ரன்களுக்குள் ஆல் அவுட் செய்ய வேண்டும்.
பாகிஸ்தான் 400 ரன்கள் முதலில் பேட் செய்து குவித்தால் வங்கதேசத்தை 84 ரன்களில் ஆல்-அவுட் செய்ய வேண்டும்.
பாகிஸ்தான் 450 ரன்கள் முதலில் பேட் செய்து குவித்தால், வங்கதேசத்தை 129 ரன்களில் ஆல்-அவுட் செய்ய வேண்டும்.
பாகிஸ்தான் 500 ரன்கள் முதலில் பேட் செய்து குவித்தால், வங்கதேசத்தை 174 ரன்களில் ஆல்-அவுட் செய்ய வேண்டும்.
மற்றும் வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தால் பாகிஸ்தானால் அரையிறுதிக்கு தகுதி பெற இயலாது.
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி என்றால் அது லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 290 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுதான். அது சர்வதேச கிரிக்கெட்டில் சாத்தியமில்லை. எனவே பாகிஸ்தான் முதல் 4 இடங்களை பிடிக்க வாய்ப்பு மிக மிக குறைவு. இதன்மூலம் நியூசிலாந்து 4-வது இடத்தை தக்கவைத்துக் கொள்ளும்.
ஆஸ்திரேலியா vs தென்னாப்பிரிக்கா போட்டி மற்றும் இந்தியா vs இலங்கை போட்டியே புள்ளி பட்டியலில் முதல் இடத்தை தீர்மானிக்கும் போட்டியாக இருக்கும். ஆஸ்திரேலியா 14 புள்ளிகளுடனும், இந்தியா 13 புள்ளிகளுடனும் முதல் இரு இடங்களில் தற்போது உள்ளது.
மறுமுனையில் நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றதையடுத்து மூன்றாவது அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஏற்கனவே அரையிறுதிக்கு முதல் இரு அணிகளாக தகுதி பெற்று விட்டது.
இதற்கிடையில் நியூசிலாந்திற்கு எதிராக இங்கிலாந்து சிறந்த ஆட்டத்திறனை வெளிப்படுத்தியுள்ளது. ஜானி பேர்ஸ்டோ மற்றும் ஜேஸன் ராயின் சிறப்பான பார்டனர் ஷீப் 123 ரன்கள் பங்களிப்பால் இங்கிலாந்து 305 ரன்களை 50 ஓவர்களில் குவித்தது. ஜானி பேர்ஸ்டோ தனது அடுத்தடுத்த இரண்டாவது சதத்தை விளாசினார். ஜேஸன் ராய் தனது சிறப்பான அதிரடி ஆட்டத்தினை தொடர்ந்து அரைசதம் குவித்தார். பேர்ஸ்டோ ஆட்டநாயகன் விருதினை தட்டிச் சென்றார்.
மறுமுனையில் மார்க் வுட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நியூசிலாந்து சார்பில் டாம் லேதம் சிறப்பான ஆட்டத்தை மேற்கொண்டார். இப்போட்டியில் நியூசிலாந்து அணியில் இவர் மட்டுமே அரைசதம் விளாசினார்.