நவீன கால கிரிக்கெட் போட்டிகளில் உலகின் தலை சிறந்த வீரராக திகழ்கிறார் இந்தியாவின் விராத் கோலி, இவர் இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் போட்டிகளில் 93 என்ற ஆரோக்கியமான ஸ்ட்ரைக் ரேட்டுடன் 11,286 ரன்கள் குவித்துள்ளார். மேலும், 41 சதங்களை விளாசி ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் விளாசிய வீரர்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கும் சச்சின் டெண்டுல்கருக்கு மிக நெருக்கத்தில் உள்ளார், விராட் கோலி. நடந்து முடிந்த 12வது உலக கோப்பை தொடரில் இந்திய அணியை வழிநடத்திய விராட் கோலி, லீக் போட்டிகளில் தொடர்ச்சியாக ஐந்து அரைச்சதங்களை கடந்த போதிலும் ஒரு சதத்தைக்கூட பதிவு செய்யாத நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் வெறும் ஒற்றை ரன்னில் ஆட்டம் இழந்து இந்திய ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சி அளித்தார். எனவே, இதுவரை இவர் பங்கேற்றுள்ள மூன்று உலகக் கோப்பை தொடர்களின் முதல் போட்டி ஒவ்வொன்றிலும் இவர் எவ்வாறு விளையாடினார் என்பதைப் பற்றிய விவரத்தினை இந்த தொகுப்பு எடுத்துரைக்கின்றது.
#1.2011 உலகக் கோப்பை - வங்கதேச அணிக்கு எதிராக 100* ரன்கள் :
தனது அறிமுக உலக கோப்பை தொடரிரான 2011ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் அற்புதமாக விளையாடி சதம் கண்டார், விராட் கோலி. அந்தப் போட்டியில் 175 ரன்களை குவித்து மலைக்க வைத்த விரேந்திர சேவாக் உடன் இணைந்த இவர் 83 பந்துகளில் தனது கன்னி உலகக் கோப்பை சதத்தை பதிவு செய்தார். இவர்களின் அதிரடி ஆட்டத்தால் 50 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 370 என்ற இமாலய ஸ்கோரை பதிவு செய்தது. இதன் பின்னர், களமிறங்கிய வங்கதேச அணி 283 ரன்களை மட்டுமே குறித்து 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. 8 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் உட்பட சதம் கண்ட விராத் கோலிக்கு இது ஐந்தாவது ஒருநாள் சதம் ஆகும். தனது அறிமுக போட்டியிலேயே சிறப்பாக விளையாடிய விராட் கோலி, அதன் பின்னர் நடைபெற்ற 8 போட்டிகளில் வெறும் 182 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#2.2015 உலகக் கோப்பை - பாகிஸ்தான் அணிக்கு எதிராக 107* ரன்கள்:
ஒவ்வொரு உலகக் கோப்பை தொடரிலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடையே நடைபெறும் ஆட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. அவ்வாறு, 2015ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்களின் முடிவில் விராட் கோலியின் அபார சதம், ஷிகர் தவான் மற்றும் சுரேஷ் ரெய்னாவின் அரைசதங்கள் உதவியுடன் 300 ரன்களை கடந்தது. இதன் பின்னர், களமிறங்கிய பாகிஸ்தான் அணி 224 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது இதன் மூலம் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த விராட் கோலி, ஆட்டநாயகன் விருதை வென்றார். அதுமட்டுமல்லாது, பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் சதமடித்த முதலாவது இந்தியர் என்ற சாதனையையும் படைத்தார், விராட் கோலி. கடந்த உலகக் கோப்பை தொடரை போலவே 2015 தொடர்களிலும் முதல் போட்டியில் ஜொலித்து மற்ற ஆட்டங்களில் தனது அபார பார்மை வெளிக்கொணர தவறினார், விராட் கோலி. பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்திற்கு பிறகு நடைபெற்ற 7 போட்டிகளில் வெறும் 198 ரன்களை மட்டுமே இவர் குவித்துள்ளார். அந்த தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்து வெளியேறியது, இந்திய அணி.
#3.2019 உலகக்கோப்பை - தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 18 ரன்கள்:
2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை சந்தித்தது. முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி, இந்திய பந்துவீச்சாளர்களில் துல்லிய பந்து வீச்சு தாக்குதல் 227 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் பின்ன,ர் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா 144 பந்துகளில் 122 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் விரைவிலேயே ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில், களம் புகுந்த விராட் கோலி 34 பந்துகளை சந்தித்து வெறும் 18 ரன்களை மட்டுமே குவித்தார். இருப்பினும், அதன் பின்னர் நடைபெற்ற அடுத்த ஐந்து போட்டிகளில் தொடர்ச்சியாக ஐந்து அரைச்சதங்களை கடந்து தனிப் பெரும் சாதனையை படைத்தார், விராட் கோலி. தொடரின் 10 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி, 443 ரன்களை குவித்தார். இதன் பின்னர் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியை தவிர தோல்வியை சந்திக்காத இந்திய அணி புள்ளிப் பட்டியலில் முன்னிலை பெற்றதால், அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. முதலாவது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை சந்தித்து தமது மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்திய காரணத்தால் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது தொடரில் இருந்து வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது, இந்திய அணி.