நடந்தது என்ன?
கிரிக்கெட்டில் தற்போதைய தலைமுறையின் சிறந்த ஆல்-ரவுண்டராக வலம் வருபவர் பென் ஸ்டோக்ஸ். இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டிவன் ஸ்மித் ஆகியோரது பேட்டிங் ஸ்டைல் மற்றும் சீரான ஆட்டத்திறன் தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாக சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த பாகிஸ்தானிற்கு எதிரான ஒருநாள் தொடரை 4-0 என்று கைப்பற்றியது இங்கிலாந்து அணி. அத்துடன் உலகின் நம்பர் 1 ஓடிஐ அணியாகவும் திகழ்கிறது. கடைசி 3-4 வருடங்களில் மற்ற அணிகளுடன் ஒப்பிடும் போது இங்கிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது.
உங்களுக்கு தெரியுமா...
1975-லிருந்து நடைபெற்று வரும் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி ஒரு முறை கூட கோப்பையை கைப்பற்றியது கிடையாது. ஆனால் 3 முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. மூன்று முறையும் இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 1979 உலகக் கோப்பை தொடரில் தனது சொந்த மண்ணில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவியது.
தென்னாப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த இடதுகை பேட்ஸ்மேன் பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் தொடரில் அதிக தொகைக்கு ஏலம் போனார். 2018 ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ₹ 12.5( 1.4 £) கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டார்.
கதைக்கரு
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் இடம்பெற்றுள்ள அணிகளில் இங்கிலாந்து அணி பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என மூன்றிலும் மிகவும் வலிமை வாய்ந்ததாகவும், 50ஓவர் கிரிக்கெட்டில் உலகின் நம்பர்-1 அணியாகவும் திகழ்கிறது.
27 வயதான பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணி நம்பர்-1 அணியாக இருக்க முழு தகுதியும் உள்ளது எனத் தெரிவித்துள்ளார். அத்துடன் உலகின் நம்பர் 1 அணியாக இருக்கும் அணி கண்டிப்பாக உலகக் கோப்பை அணியை வெல்லும் என்றும் கூறியுள்ளார்.
தனியார் பத்திரிகை ஒன்றிற்கு பென் ஸ்டோக்ஸ் கூறியதாவது,
கடைசி 3-4 ஆண்டுகளில் இங்கிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது. இதனால் உலகக் கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு முழு பலம் உள்ளது. பொதுவாக தரவரிசையில் உலகின் நம்பர் 1 அணியாக இருக்கும் அணி உலகக் கோப்பையை கடந்த காலங்களில் வென்றுள்ளது. இந்தியா அல்லது ஆஸ்திரேலியா உலகின் நம்பர் 1 அணியாக திகழ்ந்திருந்தால் உலகக் கோப்பையை வெல்லும் அணியாக இருந்திருக்கலாம்.
அத்துடன் பென் ஸ்டோக்ஸ் இரு கிரிக்கெட் வீரர்களின் பேட்டிங் திறனை கண்டு வியந்து அவர்களிடமிருந்து அதிகம் கற்று கொண்டதாக தெரிவித்துள்ளார். அத்துடன் விராட் கோலி மற்றும் ஸ்டிவன் ஸ்மித்தின் மிகப்பெரிய ரசிகன் நான் எனவும் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.
ஸ்டிவன் ஸ்மித் மற்றும் விராட் கோலி மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்கள். இருவருக்கும் எதிராக பந்துவீச்சாளர்கள் பந்துவீச மிகவும் தடுமாறுவார்கள். இருவரின் பேட்டிங்கை நன்கு கவனித்து வந்தால் பல பேட்டிங் நுணுக்கங்களை நாம் கற்றுக் கொள்ளலாம். நான் கோலி மற்றும் ஸ்மித் ஆகியோரின் மிகப்பெரிய ரசிகன். இவர்கள் இருவரும் தங்களது தனி பேட்டிங் ஸ்டைலில் விளையாடி வருகின்றனர். அத்துடன் இருவரும் தங்களது சொந்த கிரிக்கெட் பாதையில் சென்று கொண்டுள்ளனர். மேலும் எதிரணிக்கு கடும் நெருக்கடியை அளிப்பவர்கள். இருவருமே அவரவர்களின் அணிகளின் மேட்ச் வின்னர்கள் ஆவார். ஸ்மித் மற்றும் கோலியின் சீரான ஆட்டத்திறனை காண எனக்கு மிகவும் பிடிக்கும். இவர்களினால் தான் கிரிக்கெட் மேலும் அதிக வளர்ச்சி பாதைக்கு சென்றுள்ளது.
அடுத்தது என்ன?
உலகக் கோப்பையின் தொடக்க விழா மே 29 அன்று பக்கிங்காம் பேலஸீல் நடைபெற உள்ளது. இதற்கு அடுத்த நாளான மே 30 அன்று லண்டன் ஓவலில் நடைபெறவுள்ள முதல் போட்டியில் இங்கிலாந்து அணி, தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள இருக்கிறது.