தற்போதைய கிரிக்கெட் உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக கருதப்படுபவர் தான் இந்தியாவின் விராட் கோலி. சர்வதேச அளவில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள இவர் மேலும் பல சாதனைகளை முறியடிக்கும் முனைப்போடு விளையாடி வருபவர். இந்நிலையில் நானும் ஒருநாள் விராட் கோலி போல மாறி காட்டுவேன் என சூளுரைத்துள்ளார் ஒரு வீரர்.
அந்த வீரர் வேறு யாருமல்ல இங்கிலாந்தின் அதிரடி ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான ‘ஜோஸ் பட்லர்’ தான். டெய்லி மெயில் பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இதனை இவர் தெரிவித்துள்ளார். “விராட் கோலி போல் மாறுவது அவ்வளவு சாதாரணமான விஷயமல்ல. அவர் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் சதமடிக்கும் நினைப்போடு விளையாடுகிறார், பெரும்பாலான போட்டிகளில் சதம் அடித்து விடுகிறார். இது சாதாரண விஷயம் கிடையாது. அவர் இதற்காக தன்னம்பிக்கையுடன் கடுமையாக உழைக்கிறார். நானும் இதே தன்னம்பிக்கையோடு கடுமையாக உழைத்து நிச்சயம் விராட் கோலியின் இடத்தை ஒருநாள் அடைவேன் என நம்புகிறேன்”. இவ்வாறு ஜோஸ் பட்லர் கூறியுள்ளார்.
இந்திய கேப்டன் ‘விராட் கோலி’யின் ஒருநாள் போட்டி பேட்டிங் சராசரி தற்போது 60-ஐ நெருங்கியுள்ளது. மேலும் ஒருநாள் போட்டிகளில் 41 சதங்களை விளாசி உள்ளார். ‘கோலி’யோடு ஒப்பிட்டு பார்க்கும்பொழுது ஜோஸ் பட்லர் 126 ஒருநாள் போட்டிகளில் வெறும் 7 சதங்களை மட்டுமே அடித்துள்ளார்.
மேலும் கடந்த சில ஆண்டுகளில் விராட் கோலியின் பேட்டிங் ‘வேற லெவல்’ என சொல்லும் படியாக ஆடி வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு 10 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள கோலி 92.37 என்ற சராசரியில் 739 ரன்கள் சேர்த்தார். 2017-ஆம் ஆண்டில் 26 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய கோலி 1460 ரன்கள் குவித்தார். இந்த வருடத்தின் பேட்டிங் சராசரி 76.84 ஆகும்.
2018-ஆம் ஆண்டில் விராட் கோலி மேலும் புதிய உச்சத்தை தொட்டார். இந்த ஆண்டில் 14 ஒருநாள் போட்டியில் ஆடிய இவர், 133.55 என்ற நம்ப முடியாத ஒரு பேட்டிங் சராசரியோடு 1202 தங்களை விளாசித் தள்ளினார். மேலும் தற்போதைய 2019-ஆம் ஆண்டில் ஏற்கனவே மூன்று சதங்களை விளாசி விட்ட விராட் கோலி 11 ஒருநாள் போட்டிகளில் 611 ரன்கள் சேர்த்துள்ளார்.
விரைவில் இங்கிலாந்து மண்ணில் நடைபெற உள்ள ‘உலகக்கோப்பை’ போட்டிகளில் அதிக ரன்களைக் குவிக்கும் வீரராக விராட் கோலி இருப்பார் என்பதே பெரும்பாலான முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் கணிப்பாகும்.
அதே நேரம் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லரும் சிறப்பான ஒரு வீரர் என்பதை மறுப்பதற்கில்லை. எந்த சூழ்நிலையிலும் தனது அதிரடி ஆட்டத்தால் ஆட்டத்தின் போக்கை மாற்றுவதில் இவர் வல்லவர். இங்கிலாந்து அணிக்காக இவர் மிகச் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். ஆனால் உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட் கோலியுடன் இவரை எந்த நிலையிலும் ஒப்பிட முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.
இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடரில் ‘ராஜஸ்தான் ராயல்ஸ்’ அணிக்காக தொடக்க வீரராக விளையாடவுள்ள ஜோஸ் பட்லர் இந்த ஐபிஎல்-லில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.