ஆப்கானிஸ்தான் அணி பல திறமையுள்ள வீரர்களை கொண்டு சர்வதேச கிரிக்கெட்டில் தனக்கென ஒரு இடத்தை தேடி வருகிறது. அவ்வகையில் பார்த்தால் முகமது சேஷாத், முகமது நபி , ரஷித் கான் போன்ற வீரர்களே சிறந்த உதாரணம். இங்கு நான் முகமது சேஷாத் பற்றி ஆழமாக விவரிக்கப்போகிறேன். இவர் ஆசிய கோப்பை போட்டி தொடரில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக 124 ரன்கள் குவித்ததன் மூலம் கிரிக்கெட் ரசிகர்களை தன்மேல் கவனத்தை ஈர்த்துள்ளார். ஆட்ட முடிவில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி தோல்வி இல்லாமல் முடிவு பெற்றது. சர்வதேச கிரிக்கெட்டில் பலசாலியான இந்திய அணி வெற்றி பெற ஆப்கானிஸ்தானின் கடும் நெருக்கடிகளை சமாளித்தது. இறுதியில் அந்த வெற்றியையும் இந்திய அணியால் பெற முடியவில்லை. காரணம் அவர்கள் நிர்ணயித்த சிறந்த இலக்கும் கட்டுக்கோப்பான பந்துவீச்சும் ஆகும்.இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதம் அடித்த முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெற்ற முகமது ஷேசாத், அதற்கு முன்னர் பெரிதாக அனைவராலும் அறியப்படவில்லை என்றாலும் தனது திறனை தொடர்ந்து வெளிப்படுத்திய வண்ணம் இருந்தார். அவ்வாறு இவர் நேற்று நடந்த டி10 எனப்படும் மிகக்குறுகிய வகையான போட்டியில் பல சாதனைகளை புரிந்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் காலங்கள் மாறுவதுபோல கிரிக்கெட்டின் வடிவமும் அவ்வப்போது மாறி வண்ணமே உள்ளது. நீண்ட கால டெஸ்ட் போட்டிகளில் இருந்து 5 நாட்களாக குறைக்கப்பட்ட டெஸ்ட் போட்டிகள், 50 ஓவர்களாக குறைக்கப்பட்ட ஒருநாள் போட்டிகள், 20 ஓவர்களாக குறைக்கப்பட்ட டி20 போட்டிகள், தற்போது அதையும் மிஞ்சும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளடி10 போட்டிகள். இந்த போட்டியில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் வகையில் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தற்போது துபாயில் நடைபெற்று வரும் டி10 போட்டிகள்.
நேற்று ஷார்ஜாவில் நடைபெற்ற 2வது டி10 தொடரின் சிந்தி அணிக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க வீரர் முகமது ஷேசாத்தின் அதிரடியில் ராஜபுத்திரர் அணி 4 ஓவர்களில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முன்னதாக களமிறங்கிய சிந்தி அணி 10 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணியின் ஷேன் வாட்சன் 20 பந்துகளில் 42 ரன்கள் குவித்தார், இவரை தவிர வேறு எந்த வீரரும் முதல் இன்னிங்சில் இரட்டை இலக்கை தாண்டவில்லை. சமீபத்தில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய வீரர் முனாஃப் படேல் இரண்டு ஓவர்களில் 20 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை அள்ளினார். பின்னர் இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய அணியின் தொடக்க வீரர்கள் பிரண்டன் மெக்கலம் மற்றும் முகமது ஷேசாத் இணை 10 விக்கெட் வித்தியாசத்தில் அணியை வெற்றி பெற உதவியது. குறிப்பாக ஆப்கானிஸ்தான் அணி வீரர் ஷேசாத் வெறும் 16 பந்துகளில் 74 ரன்கள் குவித்து அணி இலக்கை நோக்கி பயணித்து வெற்றி பெற உதவினார்.
டி10 போட்டிகள் வரலாற்றில் அதிவேகமாக அரைசதத்தை கடந்த வீரர் என்ற சாதனையையும் நேற்று படைத்தார். வெறும் 12 பந்துகளில் அரைசதத்தை கடந்தார் ஆறு பவுண்டரிகளையும் எட்டு சிக்சர்களையும் அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார். மேலும் இவரது ஸ்ட்ரைக் ரேட் 462.50 ஆகும். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பிரண்டன் மெக்கலம் தனது பங்கிற்கு 8 பந்துகளில் 21 ரன்கள் குவித்து ஷேசாத்திற்கு நல்ல ஒத்துழைப்பையும் அளித்தார். 95 ரன்கள் என்ற இலக்கை வெறும் 17 நிமிடங்களில் அடைந்து ஒரு புதிய சாதனையையும் படைத்தனர்.
இரண்டாவது இன்னிங்சில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் வீசிய முதல் ஓவரில் 20 ரன்களும், ஜோப்ரா ஆர்ச்சரின் இரண்டாவது ஓவரில் 23 ரன்களும், இலங்கை அணியின் ஆல்ரவண்டர் திசாரா பெரராவின் மூன்றாவது ஓவரில் 3 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் உட்பட மொத்தம் 30 ரன்களும் அதிகபட்சமாக அடிக்கப்பட்டது.
மேலும் ஷேசாத்தின் 74 ரன்கள் டி10 போட்டி வரலாற்றில் தனிநபர் அதிகபட்ச ரன்களாகும்.இவரது ஆட்டமானது 1 4 6 4 4 6 1 6 6 4 6 4 4 6 6 6 என்ற அதிரடியில் அமைந்தது.மேலும் இந்த ஆட்டத்தின் முகம்மது ஷேசாத் எந்த ஒரு பந்தையும் டாட் வகையில் வீணாக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆட்டத்தின் பிறகு ரமீஸ் ராஜா எழுப்பிய யோ-யோ டெஸ்ட் தங்களுக்கு பிடிக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த இவர், “தான் யோ-யோ டெஸ்டை விரும்பவில்லை. சிலர் அந்த டெஸ்டில் 20 மதிப்பெண்கள் எடுத்த பின்னரும் ஆட்டத்தில் சிக்சர் அடிக்க தவறுகின்றனர். எனக்கு யோ-யோ டெஸ்டை பற்றி எந்த ஒரு கவலையும் இல்லை” என்று கூறியுள்ளார்.இதற்கு முன்னர் ஒரு பேட்டியில்,தான் விராட் கோலியை போல் உடல் கட்டுக்கோப்பாக இல்லை என்றாலும் அவரை விட மிகப்பெரிய சிக்சர்களை அடிக்கும் திறன் பெற்றவராகவும் தன்னை கருதியிருக்கிறார். மேலும் ,தான் விராட் கோலியை போன்று எந்த ஒரு உணவுக்கட்டுப்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் எனது சிக்சர்களே அணிக்கு பல வெற்றிகளை குவித்தது எனவும் கூறியுள்ளார். மேலும் தான் 90 கிலோ எடையில் உள்ளதை பற்றி எந்தவித கவலையும் இல்லை என்றும் கூறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.