மெயின் கேலேகா(நான் விளையாடுகிறேன்) - சச்சினின் மந்திர சொற்கள் 

sachin
sachin

அது 1989. கராச்சியில்(பாக்கிஸ்தான்) குளிர் நிலவிய ஒரு நவம்பர் - டிசம்பர் மாத இடைப்பட்ட காலம்.இரண்டு இளம்புயல்கள் ஒரே நேரத்தில் தங்களின் அறிமுக களம் கண்ட சிறப்பு மிக்க வைபவம் (தொடர்) அப்போது தான் அரங்கேறியது.கிரிக்கெட் களத்தின் பரம வைரிகளான பாகிஸ்தானும் இந்தியாவும் நான்கு டெஸ்ட் மற்றும் நான்கு ஒரு நாள் போட்டி கொண்ட நீண்ட தொடரில் சந்தித்து கொண்ட சீரிஸ் அது. முதல் டெஸ்டில் பாகிஸ்தான் சைடில் தங்களது முதல் டெஸ்டில் டெபுட்டன்டாக இறங்கியவர்கள் ஷாகித் சயீத் மற்றும் கீர்த்திமிகு வக்கார் யூனுஸ். இந்திய தரப்பில் களம் கண்ட இரு புதுமுகங்களில் ஒருவர் சலீல் அங்கோலா, வேகப்பந்து வீச்சாளராக இருந்து பிற்காலத்தில் திரைப்பட நடிகராக மாறிப் போனவர்.மற்றொரு புதுமுகத்தின் பெயர் தான் சச்சின் டென்டுல்கர்.

முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இருபத்தி நான்கு பந்துகளில் இரண்டு பவுண்டரிகளுடன் எடுத்த பதினைந்து ரன்களுடன் வக்காரின் பந்தில் போல்டாகி பெவிலியன் திரும்பினார் சச்சின். அடுத்த இரண்டாவது இன்னிங்சில் மஞ்ரேக்கரும் சித்துவும் பெரும் நேரங்களை களத்தை ஆக்ரமித்து எடுத்துக் கொள்ள மேட்ச் ட்ராவாகி சச்சினுக்கு பேட் செய்யும் வாய்ப்பு கூட கிடைக்க வில்லை. அந்தப் பக்கம் பாகிஸ்தானுக்காக வக்கார் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திச் சிறப்பான அறிமுக கவனத்தை பெற்றிருந்தார். பாக் கேப்டன் இம்ரான்கான் வித்தியாசமான பரிசோதனை முயற்சிகளில் எப்போதும் ஆர்வம் காட்டுபவர். அடுத்த இரு டெஸ்டுகள் நடைபெற்ற ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சிற்கு சாதகமானவை என்பதால் வக்காருக்கு ஓய்வு கொடுத்து உட்கார வைத்து விட்டு அப்துல் காதிர் மற்றும் அக்ரம் ராசா போன்ற ஸ்பின்னர்களுடனும் சலிம் மாலிக் போன்ற பகுதி நேர பந்துவீச் சாளர்களுடனும் களமிறங்கினார் இம்ரான்.

Imran Khan Pakistan
Imran Khan Pakistan

இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் சச்சின் தனது முதல் அரைச்சதத்தை எடுத்து 59 ரன்களுக்கும் இரண்டாவது இன்னிங்சில் மிகச் சொற்ப ரன்களுடனும் வெளியேறினார். மூன்றாவது டெஸ்டில் சச்சின் 41 ரன்களை மட்டுமே எடுத்து வெளியேற… அந்த இரண்டு டெஸ்டுகளுமே இரண்டு அணிகளும் விட்டுக் கொடுக்காமல் ஆட.. பெரியதொரு குறிப்பிட தக்க சம்பவங்கள் இன்றியே ட்ராவில் முடிந்து போயின அந்த இரு ( இரண்டாவது & மூன்றாவது) டெஸ்டுகள். அப்போதைய பாகிஸ்தான் அணி இந்திய அணியுடன் ஒப்பிடும்போது மிக மிகப் பலம் வாய்ந்ததாகக் கணிக்கபட்டிருந்தது. தொடருக்கு முந்தைய பத்திரிக்கை செய்திகள் மற்றும் கேப்டன்கள் பேட்டிகளின் போதும் பாகிஸ்தானே தொடரை வெல்லும் என்றும் இம்ரான் சொல்லியிருந்தார். இந்தியாவின் புதிய கேப்டன் ஸ்ரீகாந்த் அதை மறுத்திருந்தார். எனவே மூன்று டெஸ்டுகள் ட்ராவில் முடிந்த நிலையில் இம்ரானுக்கு இது ஒரு கௌரவ பிரச்னை ஆகி போயிருந்தது.நான்காவது டெஸ்ட்டின் ஆடுகளத்தை முழுக்க முழுக்க வேகப்பந்துக்கு சாதகமாக உருவாக்கித் தர தங்களது கிரிக்கெட் போர்டிடம் கோரி அதில் வெற்றியும் பெற்றிருந்தார் இம்ரான்.

Fourth Test At Sialkot
Fourth Test At Sialkot

இப்படியான சூழ்நிலையில் தான் அந்தச் சரித்திர முக்கியத்துவம் பெற்ற நான்காவது டெஸ்ட் சியால்கோட்டில் நடைபெற தொடங்கியது. ஜெயித்தே ஆக வேண்டும் எனக் கங்கணம் கட்டாத குறையாக இம்முறை களமிறங்கியிருந்த இம்ரான்.. தான், வாசிம் அக்ரம், ஜாகிர் உடன் வக்கார் யூனுசையும் மறுபடி அழைத்து நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் அணியை அறிவித்தார். இந்திய தரப்பில் பெரிய மாற்றங்கள் இன்றியே உள்ளிறங்கியது அணி. முதல் இன்னிங்சில் மஞ்ச்ரேக்கர், அசார் ஆகியோரின் அரைச்சதங்களும் சச்சினின் 35 ரன்களும் கைகொடுக்க இந்தியா 324 ரன்களை எடுத்திருந்தது. பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 250 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்சைஆட துவங்கிய இந்தியாவிற்கு எடுத்ததுமே அடி. வெறும் 38 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. இனி நடந்த சரித்திர பிரசித்தி வாய்ந்த அந்த நிகழ்வினை அன்று மறுமுனையில் பேட் செய்து கொண்டிருந்த நவ்ஜோத் சித்துவின் வார்த்தைகளிலேயே தர முயல்கிறேன். இதோ சித்து உங்களிடம் பேசுகிறார்...

Narjot Sidhu
Narjot Sidhu

“ அந்தப் பாகிஸ்தானின் டிசம்பர் குளிரில் என்னைக் காட்டுத்தனமான பவுன்சர்களை வீசிக் கொண்டிருந்த நான்கு பவுலர்களிடம் தத்தளிக்க விட்டு விட்டு போய் விட்டார்களே இந்த சீனியர்கள் .. எனக்கு அப்போது தான் திருமணமாகிய புதிது.புது மனைவியை வீட்டில் விட்டுக் கிரிக்கெட் ஆட வந்திருக்கிறேன். இம்ரான்கான் வேறு இந்த சியால்கோட் ஆடுகள பராமாரிப்பாளரிடம் “புற்களைத் துளியும் வெட்டக் கூடாது.. புல்லை வெட்டினால் உன் கழுத்தை வெட்டி விடுவேன்” (Agar ghass kaategaa tho tere gardhaan kaategaa) என மிரட்டியதாக அறிகிறேன். இந்த பாஸ்ட் பவுலர்கள் அதை மிகச்சரியாக உபயோகித்து கொண்டு இப்படி பவுன்சர்களை போட்டு ஏற்றுகிறார்களே.. நான் இந்த களத்தை விட்டு வெளியேறி செல்வேனா.. திரும்ப எமனைவியைப் பார்ப்பேனானா என்றெல்லாம் சிந்திக்க தொடங்கியிருந்தேன்.நான்காவது விக்கெட்டாக சாஸ்திரி அவுட் ஆகி சென்றார்.சுத்தமாக எனது நம்பிக்கையை இழந்து விட்டிருந்தேன்.

Ravi Shastri
Ravi Shastri

அப்போது தான் சச்சின் ஐந்தாவது விக்கெட்டாக உள்ளே வந்து கொண்டிருந்தார். நல்ல வேளையாக கடவுள் என்னைக் காப்பாற்ற தான் பலியாடாக இந்தச் சிறுவனை அனுப்பியதாக எண்ணி சந்தோஷப்பட்டு கொண்டேன். இந்த குள்ள சிறுவன் மட்டும் சீக்கிரம் அவுட்டாகி சென்று விட்டான் எனில் அடுத்ததாக டெயில் எண்டர்களை பாக் பவுலர்கள் சடுதியில் ‘கவனித்து’ அனுப்பி விடுவார்கள். ரன்னர் முனையிலேயே தாக்கு பிடித்து என்னுடைய பெயரைக் கெடாது காப்பாற்றி கொண்டு விடலாம் என்று எனது மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது. சச்சின் எதிர் கொண்ட முதல் பந்து அந்த எண்ணத்தை வலுப்படுத்துமாறு இருந்தது. கணிக்கவே முடியாத வேகத்தில் கடந்த இன்னிங்சில் என்னை அவுட்டாக்கிய ஒரு இன்சுவிங்கரை போன்றே இருந்தது.அதில் தப்பி பிழைத்த சச்சினுக்கு வக்கார் போட்ட அடுத்த பந்து வாழ்நாள் முழுமைக்கும் என்னால் மறக்க முடியாத ஒரு வலியைத் தந்ததாக அமைந்து போனது.

dangerous paki pace trio
dangerous paki pace trio

அது ஆப்சைடில் வீசப்பட்ட மின்னலை போன்ற ஒரு ஷார்ட் பவுன்சர். சச்சின் அதை ஹுக் செய்ய முயல அவரது பேட்டில் பட்ட பந்து இன்சைட் எட்ஜாகி அப்படியே உள்ளிறங்கி அவரது மூக்கை பதம் பார்த்தது. அந்த அடி ரன்னர் முனையில் இருந்த எனக்கு வலித்தது என்பது தான் உண்மை. நான் அருகே ஓடிச் சென்று பார்ப்பதற்குள் சரிந்த தக்காளி மூட்டையாக நிலைகுலைந்து கீழே விழுந்து கிடந்தான் அந்தப் பதினாறு வயது பாலகன்.மூக்கு கிட்டத்தட்ட இடம் மாறிப் போய் அவனது ஜெர்சி எங்கும் ரத்தம்.ஒரு கணம் செய்வதறியாது திகைத்த நான் “ஸ்ட்ரெச்சர்”, “டாக்டர்” என்று கத்த துவங்கினேன்.'டாக்டர்.அலி இராணி’.. அன்றைய எங்களின் பிசியோ..தனது ஒரே பழங்கால வைத்திய முறையான சாரிடான் மாத்திரைகளுடனும் ஐஸ்பேக்குடனும் பெருத்த உடம்பை தாங்கிக் கொண்டு ஓடி வந்தார்.இவர் தரும் சாரிடானை விழுங்கி ஐஸ்பேக்கை வைத்து அழுத்துவதை தாங்குவதற்கு அந்தச் சிறுவன் இந்த வலியையே தாங்கிக் கொண்டுடு விடலாம் என்று எண்ணி கொண்டிருந்தேன். அலி தனது வழக்கமான முயற்சிகளைச் செய்து கொண்டிருக்க சச்சினிடம் பேச்சு மூச்சையே காணோம். அலி பொறுத்து பார்த்து விட்டு “ஷெர்ரி உள்ளே தூக்கிட்டு போய்டலாம்.. சீரியசாகிட போகுது” என என்னிடம் சொல்லிய தருவாயில் தான் அந்தப் பிரசித்தி பெற்ற கீச்சுக்குரல் மென்மையாக ஒலித்தது.

sachin
sachin

இரண்டே வார்த்தைகள் தான். “ மெய்ன் கேலேகா”.. நான் ஆடுகிறேன். எனக்கும் அலிக்கும் பிரமிப்பில் பேச்சே எழவில்லை. என்னுள் அதுவரை ஓடிக் கொண்டிருந்த சுயநல சிந்தனைகளை எண்ணி வெட்கி போனேன் ஒரு கணம். சின்னஞ்சிறுவன் தன்னுடைய அணிக்காக இப்படி கந்தலாகி கிடக்கும் நிலையிலும் முன் நிற்க முயல்கிறான். நான் என்னுடைய மனைவியை பற்றி சிந்தித்து கொண்டிருந்தேனே களத்தில் நின்று கொண்டு என்று என்னை நானே உசுப்பி கொண்டேன். என்னுடைய காதுகளை நம்ப முடியாது சச்சினை மறுபடி பார்க்க, அதே வார்த்தைகளை மீண்டும் சொல்லியவாறு எழுந்து நின்றார்அவர். பிரமிப்பு விலகாமலேயே நான் ரன்னர் முனைக்குச் செல்ல அடுத்த பந்தை வக்கார் யார்க்கராகத் தான் வீசுவாரென நான் கணித்திருந்தேன். பயமுறுத்தி உடனே விக்கெட்டைப் பறிக்க வேகப்பந்துவீச்சாளர்கள் செய்யும் தந்திர அணுகுமுறை அது.

waqar younis
waqar younis

ஆச்சரியம் என்னவெனில் நான் கணித்ததை போலவே சிறுவன் சச்சினும் அடி பட்டிருந்த அந்த நிலையிலும் சரியாகக் கணித்து க்ரீசை விட்டு ஒரு அடி உள்ளே நின்று கொண்டு பந்தை எதிர்கொண்டார். நாங்கள் எதிர்பார்த்த அதே இன்சுவிங்கிங் யார்க்கரை 150 கீமி வேகத்தில் வக்கார் வீச அதை 180 கீமி வேகத்தில் நேராக ஸ்ட்ரெய்ட் ட்ரைவ் செய்து திருப்பி அனுப்பினார் சச்சின். அவரது மட்டையில் பட்டு சீறி திரும்பி வந்த அதன் வேகத்திலிருந்து என்னைத் தற்காத்து கொள்ள தாவி குதிக்க வேண்டியிருந்தது.அடித்த அடியில் நேராக பவுண்டரி போர்டில் மீது பந்து மோதிய சத்தம் சச்சின் மூக்கில் ஏற்பட்ட அதே வலியை வக்காருக்கு உணர்த்தியிருக்கும் என்று நம்பினேன். வக்கார் சச்சினுக்கு மிக அருகே சென்று அவரைக் குறுகுறுவென மிரட்டுவதை போல் பார்க்க சச்சின் நேரடியாக அவரது கண்களை எதிர்கொண்டு மராத்தியில் “பட்டர்.. பட்டர்.. து ஜா ஐசா சலி".. என மெலிதாக உறுமினார். வக்கார் வேறு எதையுமே பேசாது தனது பவுலிங் முனைக்குத் திரும்பி விட்டார். அன்றைய தினம் நம்புங்கள்.. சச்சின் எடுத்தது 57 ரன்கள். அவர் தந்த உத்வேகத்தில் நான் எடுத்தது 97 ரன்கள். நாங்கள் நான்காம் டெஸ்டையும் ட்ரா செய்திருந்தோம்..”

sachin - india's pride
sachin - india's pride

அன்று “நான் விளையாடுகிறேன்” என்று தைரியமாகச் சச்சின் சொல்லிய வார்த்தைகள் அவரை 28 ஆண்டுகள் தொடர்ந்து இந்தியாவிற்காக ஆட வைத்திருந்தது. நான் சச்சின் வக்காரிடம் பேசிய அந்த மராத்திய வார்த்தைகளுக்கு மிக நீண்ட காலம் கழித்து என்னுடைய மராத்திய நண்பர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட அர்த்தம் இது தான்..

“ போடா.. போடா.. வெண்ணெய்…”..

Quick Links

Edited by Fambeat Tamil