நடந்தது என்ன?
2019 உலகக் கோப்பை தொடரில் ஒவ்வொரு அணிகளிலும் துரதிர்ஷ்ட வசமாக இடம்பெறாத வீரர்களின் பட்டியலை ஆராய்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒரு அணியின் ஆடும் XI போன்று 11 வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
உங்களுக்கு தெரியுமா...
2019 உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் மே 30 அன்று தொடங்க உள்ளது. இதற்காக உலகக் கோப்பையில் பங்கேற்கும் 10 அணிகளும் தங்களது 15 பேர் கொண்ட அணியை வெளியிட்டுள்ளது. இதில் உலகக் கோப்பை தொடரில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட சில வீரர்கள் இடம்பெறவில்லை.
கதைக்கரு
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் உலகக் கோப்பையில் பங்குபெறதா வீரர்களை ஒரு அணிபோல் துரதிர்ஷ்ட XIஆக வெளியிட்டுள்ளது. இந்த அணியில் அம்பாத்தி ராயுடு மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் உலகக் கோப்பை தேர்வில் கடைசி நிமிடம் வரை போட்டியாளர்களாக இருந்தனர். இருப்பினும் கடைசியில் அவர்கள் உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்யப்படவில்லை.
பாகிஸ்தான் அணி உலகக் கோப்பையில் மாற்று விக்கெட் கீப்பர் இன்றி கிளம்பியுள்ளது. முகமது ரிஜ்வான் இந்த இடத்திற்கு சரியான வீரராக இருப்பார். கீரன் பொல்லார்டின் அனுபவம் உலகக் கோப்பை தொடரில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு மிகவும் அவசியம். ஆனால் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இளம் வீரர்களை நம்பி களமிறக்கியுள்ளது.
சிறந்த ஆட்டத்திறனுடன் திகழும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் பீட்டர் ஹான்ட்ஸ்கோமிற்கு ஆஸ்திரேலிய உலகக் கோப்பை அணியில் இடம் கிடைக்கவில்லை. நிரோஷன் திக்வெல்லா கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ஒருநாள் போட்டிகளில் 500 ரன்களை விளாசியுள்ளார். இவரை இலங்கை உலகக் கோப்பை அணியில் மாற்று விக்கெட் கீப்பராக கூட தேர்வு செய்யவில்லை. சமீபத்தில் இங்கிலாந்திற்கு எதிரான தொடரில் இலங்கை கேப்டனாக செயல்பட்ட அனுபவ வீரர் தினேஷ் சன்டிமாலையும் இலங்கை கிரிக்கெட் வாரியம் உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்யப்படவில்லை.
சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகாத ஜோஃப்ரா ஆர்சருக்கு இங்கிலாந்து உலகக் கோப்பை அணியில் இடம் கிடைக்கவில்லை. இது இங்கிலாந்து ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. இருப்பினும் உலகக் கோப்பைக்கு முன் பாகிஸ்தானிற்கு எதிரான இங்கிலாந்து ஓடிஐ அணியில் ஆர்ச்சர் இடம்பெற்றுள்ளார். பவர் ஹீட்டர் ஆஸீப் அலியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உலகக் கோப்பை அணி தேர்விலிருந்து ஒதுக்கியுள்ளது.
கடந்த ஒரு வருடத்தில் இலங்கை அணிக்காக விளையாடி 23.00 சராசரியுடன் 28 விக்கெட்டுகளை வீழ்த்திய அகிலா தனஞ்செயாவிற்கு இலங்கை உலகக் கோப்பை அணியில் இடம் கிடைக்கவில்லை. இவருக்கு பதிலாக ஜெஃப்ரே வென்டெர்சே-வை இலங்கை அணியில் தேர்வு செய்துள்ளது அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் உள்ளது. 2017 சேம்பியன் டிராபியிலிருந்து சுமாரான பந்துவீச்சை மேற்கொண்டு வந்த முகமது அமீருக்கும் பாகிஸ்தான் உலகக் கோப்பை அணியில் இடமில்லை. இங்கிலாந்து ஆடுகளத்தில் இவரது பந்துவீச்சு சிறப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி அதிர்ஷ்டமில்லா XI: நிரோஷன் திக்வெல்லா, அம்பாத்தி ராயுடு, ரிஷப் பண்ட், பீட்டர் ஹான்ட்ஸ்கோம், தினேஷ் சன்டிமால், கீரன் பொல்லார்ட், முகமது ரிஜ்வான், ஆஸீப் அலி, ஜோஃப்ரா ஆர்சர், அகிலா தனஞ்செயா, முகமது அமீர்.
அடுத்தது என்ன?
உலகக் கோப்பை தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக ஒவ்வொரு உலகக் கோப்பை அணிகளிலும் உள்ள வீரர்களில் ஏதேனும் மாற்றம் இருந்தால் மாற்றி கொள்ளலாம் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது. எனவே ஒரு சில உலகக் கோப்பை அணியில் சில வீரர்களின் ஃபிட்னஸ் மற்றும் ஆட்டத்திறனை பொறுத்து மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published 28 Apr 2019, 22:14 IST