2019 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி வாகை சூடும் அணிக்கு 4 மில்லியன் டாலரை பரிசுத் தொகையாக அறிவித்துள்ளது ஐசிசி. இது இந்திய ரூபாய் மதிப்பில் 28 கோடியே எட்டு லட்சத்து நாற்பதாயிரம் ஆகும். விளையாட்டு தொடரில் தற்போது வரை இதுவே அதிக பரிசுத் தொகையாகும். ஜுன் 16 அன்று லார்ட்ஸ் மைதானத்தில் இறுதிப்போட்டியில் வெல்லும் அணிக்கு பரிசுத்தொகையுடன் உலகச் சேம்பியன் அடையாளமாக கோப்பை ஒன்றும் வழங்கப்படும். 12வது உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் மே 30 அன்று தொடங்க உள்ளது. ஓவல் மைதானத்தில் தொடங்கும் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பலபரிட்சை நடத்த இருக்கின்றன.
உலகக் கோப்பை தொடருக்காக மொத்தமாக 10 மில்லியன் டாலர்கள் பரிசுத் தொகையாக ஒதுக்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. இது இந்திய மதிப்பில் 70 கோடியே 19 லட்சத்து தொண்ணூற்று ஐந்தாயிரம் ஆகும். இறுதிப் போட்டியில் தோற்கும் அணிக்கு 2 மில்லியன் டாலர்கள் அளிக்கப்பட உள்ளது. இந்திய மதிப்பில் 14 கோடியே 3 லட்சத்து என்பத்து ஆறாயிரம் ஆகும். அரையிறுதிக்கு தகுதி பெறும் ஒவ்வொரு அணிகளுக்கும் 800,000 டாலர்கள் அளிக்கப்பட உள்ளது. இதன் இந்திய மதிப்பு 5 கோடியே 61 லட்சத்து ஐம்பத்தெட்டாயிரத்து நானூறு ஆகும். இவையனைத்தும் உலகக் கோப்பை தொடர் நடைபெறும் 46 நாட்கள் முடிந்த பின்னரே வழங்கப்படும். இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள 11 மைதானங்களில் 7 வாரங்களுக்கு 46 போட்டிகள் மொத்தமாக நடைபெற உள்ளது. தகுதிச் சுற்றில் அணிகள் வெல்லும் ஒவ்வொரு போட்டிகளுக்கும் பரிசுத் தொகை உள்ளது.
இதற்கு முன் நடந்த உலகக் கோப்பை தொடர்களில் அதிகப்படியான அணிகள் பங்கேற்கும் நிலை இருந்தது. ஆனால் தற்போது 10 அணிகள் மட்டுமே உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது. இதில் டாப் 8 அணிகள் நேரடியாகவும் கடைசி இரு இடங்களுக்கு தகுதிச் சுற்று வாயிலாகவும் அணிகள் தேர்வு செய்யப்பட்டன. 10 அணிகள் பங்கேற்கும் 2019 உலகக் கோப்பையில் ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் ஒரு போட்டியில் தகுதிச் சுற்றில் மோத வேண்டும். தகுதிச் சுற்று முடிந்து புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். மொத்தமாக 45 லீக் சுற்றுக்களும் 2 அரையிறுதிப் போட்டிகளும் நடைபெற உள்ளது. 2015ல் நடந்த கடைசி உலகக் கோப்பையில் மைக்கேல் கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி கோப்பையை கைப்பற்றியது.
தற்போதும் சிறந்த அணியுடன் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இங்கிலாந்திற்கு ஏற்கனவே சென்று மீண்டும் கோப்பையை கைப்பற்றும் நோக்கில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. உலகக் கோப்பை வரலாற்றில் அதிக முறை கோப்பையை கைப்பற்றிய அணியாக ஆஸ்திரேலியா உள்ளது. ஆஸ்திரேலிய அணி 1987, 1999, 2003, 2007, 2015 ஆகிய வருடங்களில் நடந்த உலகக் கோப்பையில் சேம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணி உலகக் கோப்பை ஆரம்பித்த வருடமான 1975 மற்றும் 1979 ஆகிய உலகக் கோப்பை தொடரை வென்றுள்ளது. இந்திய அணி 1983 மற்றும் 2011 ஆகிய வருடங்களில் நடந்த உலகக் கோப்பையை வென்றுள்ளது. 1992ல் பாகிஸ்தான் அணியும், 1996ல் இலங்கை அணியும் உலகக் கோப்பையை வென்றுள்ளது.
2019 உலகக் கோப்பை தொடரின் பரிசுத் தொகை விவரம்
சேம்பியன் அணி(1) - ₹ 28,07,52,000
இறுதிப் போட்டியில் தோற்கும் அணி(1) - ₹ 14,03,66,000
அரையிறுதியில் தோற்கும் அணி(2) - ₹ 5,61,46,400
தகுதிச் சுற்றில் வெல்லும் ஒவ்வொரு அணியின் பரிசுத் தொகை(45) - ₹ 28,07,520
லீக் சுற்றுடன் வெளியேறும் அணிகளின் பரிசுத் தொகை (6) - ₹ 7,01,8800
மொத்த பரிசுத் தொகை - ₹ 70,18,15,000