வெஸ்ட் இண்டீஸ் நாட்டைச் சேர்ந்த அதிரடி தொடக்க வீரர் கிறிஸ் கெய்ல் சிக்ஸரை அடிப்பதில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். அவ்வாறு நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 33 பந்துகளை சந்தித்து அரை சதம் கடந்தார். நேற்றைய போட்டியில் 3 சிக்சர்களை அடித்து கிறிஸ் கெய்ல் உலக கோப்பை போட்டிகளில் அதிக சிக்சர்களை அடித்த தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏ.பி.டிவில்லியர்சின் சாதனையை முறியடித்தார். இவர் இதுவரை 37 இன்னிங்சில் 40 சிக்சர்களை அடித்துள்ளார். ஏபி டிவில்லியர்ஸ் 23 போட்டிகளில் 37 சிக்சர்களை அடித்து இரண்டாம் இடத்தில் உள்ளார். இந்த உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர், ஓய்வு பெறவுள்ளார், கிறிஸ் கெயில். இருப்பினும், இந்த தொடரை வெற்றிகரமாக முடிக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறார்.
இதுவரை உலக கோப்பை தொடர்களில் 30க்கும் மேற்பட்ட சிக்சர்களை வெறும் மூன்று வீரர்கள் மட்டுமே அடித்துள்ளனர். அவற்றில் மூன்றாம் இடத்தில் உள்ளார், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங். டி20 போட்டிகளில் சிறந்து விளங்கும் "யுனிவர்சல் பாஸ்" என்று வர்ணிக்கப்படும் கிறிஸ் கெய்ல், 50 ஓவர் போட்டிகளிலும் தமது 20 ஓவர் பாணியையே தொடர்கிறார். நேற்றைய போட்டியில் இவரது அதிரடியால் வெஸ்ட் இண்டீஸ் அணி 106 என்ற எளிய இலக்கை 14 ஓவர்கள் முடியும் முன்னே வெற்றி அடைந்தது. இதனால் 5க்கும் மேற்பட்ட ரன் ரேட்டை ஒரே போட்டியில் பெற்று புள்ளி பட்டியலில் இங்கிலாந்து அணியை பின் தள்ளி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது, வெஸ்ட் இண்டீஸ் அணி.
நேற்றைய போட்டியில் 9 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என வெளுத்து வாங்கினார், கிறிஸ் கெய்ல். 12 ஆண்டுகள் சர்வதேச டி20 வரலாற்றில் இரு முறை சாம்பியன் பட்டம் பெற்று வெஸ்ட் இண்டீஸ் அணி மிக வெற்றிகரமான அணியாக உள்ளது. பேட்டிங்கிலும் மட்டுமே கவனம் செலுத்தி வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, தற்போது பவுலிங்கிலும் நம்பிக்கை அளித்து கூடுதல் உத்வேகத்துடன் களம் இறங்கி வருகிறது. குறிப்பாக, ஒருநாள் போட்டிகளில் தங்களது தொடர் வெற்றிகளை பெற்று மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. உலகக் கோப்பை தொடர்களில் இரு முறை சாம்பியன் பட்டத்தை வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.