முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டனும் 1999ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி உலக கோப்பை தொடரை வென்ற கேப்டனுமான ஸ்டீவ் வாக், இம்முறை உலகக் கோப்பை தொடரை வெல்லும் விருப்ப அணியாக இங்கிலாந்து உள்ளது என்று தற்போது கூறியுள்ளார். நான்கு முறை உலகக் கோப்பை தொடர்களில் பங்கேற்றுள்ள, ஸ்டீவ் வாக். பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் இருந்து மீண்டுள்ள ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோரின் பேட்டிங் பங்களிப்பு உலக கோப்பை தொடரின் எதிரணிகளை அச்சுறுத்தும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன்னர் சர்வதேச போட்டிகளில் விளையாடிய ஸ்டீவ் வாக் அவரது காலத்தில் சிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்தார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்து உள்ள இவர், ஆஸ்திரேலிய அணியின் வெற்றி கேப்டன்களில் ஒருவராகவும் இருந்துள்ளார். இவர் தலைமையில் விளையாடிய 57 போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி 41 ஆட்டங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. மேலும், இவரது ஆட்ட வெற்றி சதவீதம் 72 ஆகும்.
கடந்த 5 உலகக் கோப்பை தொடர்களில் நான்கு முறை முறை ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றில், 1999 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி ஸ்டீவ் வாக் தலைமையில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. உலக கோப்பை தொடர் துவங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் தமது விருப்ப தொடரை வெல்லும் அணியை அறிவித்துள்ளார். இங்கிலாந்தில் 12வது உலக கோப்பை தொடர் நடைபெற இருப்பதால் அவர்களின் பங்கு சற்று கூடுதலாக இருக்கும். இவர் கூறியதை போலவே ஆஸ்திரேலிய அணியின் மற்றொரு முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் இங்கிலாந்து கோப்பையை வெல்லும் என்று கூறியுள்ளார். ஸ்டீவ் வாக் கூறுகையில்,
"எனது கணிப்பின்படி இங்கிலாந்து அணி தற்போது கோப்பையை வெல்லும். கடந்த சில ஆண்டுகளாக இவர்களின் பங்களிப்பு அபாரமாக உள்ளது. மேலும், அவர்களது சொந்த மண்ணில் உலக கோப்பை தொடர் நடைபெற இருப்பதால் அவர்களுக்குக் கூடுதல் பக்கபலமாக அமையும். இந்த அணிக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகள் கோப்பையை வெல்லும் எனவும் எதிர்பார்க்கலாம்" என்று கூறியுள்ளார், ஸ்டீவ் வாக்.
மேலும் அவர் கூறியதாவது,
"முன்பு இருந்த ஆஸ்திரேலியா அணிகளை விட தற்போதைய ஆஸ்திரேலிய அணி வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் திரும்பியுள்ளதால் மிக பலமானதாக உள்ளது என்று கூறியுள்ளார். கடந்த எட்டு ஒருநாள் போட்டிகளில் அவர்கள் அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். மீண்டும், அணிக்கு ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோர் திரும்பியுள்ளனர். உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியினர் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். எனவே, இந்த உலக கோப்பை தொடரில் இவர்களின் பங்கும் சிறப்பாக அமையும் என்றும் கூறியுள்ளார்".
12வது உலக கோப்பை தொடர் வரும் முப்பதாம் தேதி துவங்க உள்ளது இந்த முதலாவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.