பன்னிரண்டாவது உலக கோப்பை தொடர் தொடங்க இன்னும் இரு வாரங்களே உள்ளது. இந்த உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். உலக கோப்பை தொடரை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக இந்திய அணி கருதப்படுகிறது. இந்திய அணியின் இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் சரியான கலவையுடன் இருக்கின்றார்கள். இது மட்டுமின்றி, சில வெற்றியைத் தேடித் தர கூடிய வீரர்களும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர். எனவே, இந்த தொகுப்பில் இந்திய அணி மூன்றாவது முறையாக உலக கோப்பையை வெல்வதற்கு காரணமாக அமைய உள்ள மூன்று முக்கிய வீரர்களை பற்றி காண்போம்.
#1.பும்ரா:
சந்தேகமின்றி தற்போதைய கிரிக்கெட் உலகின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்று கூறினால், அது பும்ரா தான். இவர் தனது அபார பந்துவீச்சு தாக்குதலால் எதிரணியின் பேட்ஸ்மேன்களை நெருக்கடிக்கு ஆளாக்கி விக்கெட்களை கைப்பற்றி வருகிறார். மேலும், இவரது அற்புதமான யார்க்கர் வகை பந்துகள் ஆட்டத்தின் இறுதி கட்ட நேரங்களில் எதிரணியின் ரன்களை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு அளிக்கிறது. எனவே, கேப்டன் விராத் கோலி இவரை முக்கிய துருப்பு சீட்டாக இந்த உலக கோப்பை தொடரில் பயன்படுத்துவார் என்பதில் மாற்று கருத்து இல்லை. மேலும், நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் இடம் பெற்ற பூம்ரா 19 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#2.விராட் கோலி:
30 வயதான விராட் கோலி உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் ஆவார். இவர் அனைத்து மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் தன்னை மெருகேற்றியுள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக இவரின் பேட்டிங் தாக்கம் சற்று அதிகமாக உள்ளது. கடைசியாக விளையாடிய 50 ஒருநாள் போட்டிகளில், இவர் 3151 ரன்களை குவித்துள்ளார். அவற்றில் 14 சதங்களும் 11 அரை சதங்களும் அடக்கமாகும். ஒரு கேப்டனாகவும் ஒரு பேட்ஸ்மேனாக பங்காற்றக்கூடிய விராட் கோலி, உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக திகழ்வார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
#3.மகேந்திர சிங் தோனி:
இந்த உலக கோப்பை தொடரில் ஓய்வு பெற இருக்கும் 37 வயதான மகேந்திர சிங் தோனி, இந்திய அணியின் மிக முக்கியமான வீரர்களில் ஒருவர் ஆவார். எவ்வித சூழ்நிலையும் தனக்கேற்ற மாதிரி மாற்றி அணிக்கு வெற்றியை தேடித்தரும் வீரராகவும் திகழ்ந்து வருகிறார். மேலும், இவரின் விக்கெட் கீப்பிங் பணியும் போற்றத்தக்கது. அவ்வப்போது விராட் கோலிக்கு ஆலோசனை வழங்கி வெற்றி கண்டுள்ளார். எனவே, இவரின் அறிவுரை இந்த உலகக் கோப்பைத் தொடரில் விராத் கோலிக்கு பெரிதும் உதவும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. நடந்து முடிந்து ஐபிஎல் தொடரிலும் இவரின் பேட்டிங் திறன் மேலும் புதிய பரிணாமத்திற்கு வளர்ந்து உள்ளது. ஆகவே, உலக கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல இவர் பாடு படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.