இந்தியா, ஆஸ்திரேலியா டி20 தொடர் மற்றும் அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் டி20 தொடர் முடிவடைந்த நிலையில் ஐசிசி புதிய டி20 தரவரிசை பட்டியை இன்று வெளியிட்டது. அயர்லாந்திற்கு எதிராக டி20யில் தனது கிரிக்கெட் வாழ்வில் 163 ரன்களை விளாசிய ஹச்ரதுல்லா ஜஜாய் டி20 பேட்டிங் தரவரிசையில் 31 இடங்கள் முன்னேறி தனது டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ரேங்கான 7வது இடத்தை பிடித்தார். இவர் இந்த தொடரில் 3 போட்டிகளில் பங்கேற்று 203 ரன்களை குவித்துள்ளார்.
சமீபத்தில் முடிந்த இந்திய-ஆஸ்திரேலிய தொடரில் தங்களது சிறப்பான பேட்டிங்கை வெளிபடுத்திய கே.எல்.ராகுல், க்ளேன் மேக்ஸ்வெல், டார்ஸி ஷார்ட் ஆகியோரும் டி20 பேட்டிங் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர். சிறப்பாக விளையாடிய மேக்ஸ்வெல் நடந்த இரு டி20 போட்டிகளிலும் 56, 113 ஆகிய ரன்களை குவித்து ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் டி20 தொடரை வெல்ல காரணமாக இருந்தார். அத்துடன் டி20 பேட்டிங் தரவரிசையில் 2 இடங்கள் முன்னேறி தனது கிரிக்கெட் வாழ்வில் அதிக ரேட்டிங் புள்ளிகளான 815வுடன் மூன்றாவது இடத்தை பிடித்தார். இவர் கடந்த வருடத்தில் டி20 ரேங்கில் முதலிடத்தில் இருந்த போது கூட இவருடைய ரேட்டிங் புள்ளிகள் இவ்வளவு அதிகமாக இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான டார்ஸி ஷார்ட் 8 இடங்கள் முன்னேறி 8வது இடத்தை பேட்டிங் தரவரிசையில் பிடித்துள்ளார். விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டி20யில் சிறப்பாக பந்துவீச்சை மேற்கொண்டு ஆட்டநாயகன் விருது பெற்ற நாதன் குல்டர் நில் டி20 பௌலிங் தரவரிசையில் 45வது இடத்தை பிடித்துள்ளார்.
இந்திய அணியில் கே.எல்.ராகுல் டி20 பேட்டிங் தரவரிசையில் 4 இடங்களில் முன்னேறி 6வது இடத்தை பிடித்தார். விராட் கோலி 2 இடங்கள் முன்னேறி 17வது இடத்தையும், தோனி 7 இடங்களில் முன்னேறி 56வது இடத்தையும் பிடித்துள்ளனர். பந்துவீச்சை பொருத்த வரை ஜாஸ்பிரிட் பூம்ரா 12 இடங்களில் முன்னேறி 15வது இடத்திலும், க்ருனால் பாண்டியா 18 இடங்களில் முன்னேறி தனது கிரிக்கெட் வாழ்வில் அதிகபட்ச ரேங்கான 43 வது இடத்தை பிடித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான், அயர்லாந்து டி20 தொடர்களை பொறுத்த வரை பேட்டிங் தரவரிசையில் முகமது நபி 12 இடங்கள் முன்னேறி 30வது இடத்திலும், உஸ்மான் கானி 25 இடங்களில் முன்னேறி 79வது இடத்திலும் உள்ளனர். முஜிப்புர் ரகுமான் 2 இடங்களில் முன்னேறி 40வது இடத்தை டி20 பௌலிங் தரவரிசையில் பிடித்துள்ளார்.
அயர்லாந்து அணியின் கெவின் ஓ பிரைன் பேட்டிங் தரவரிசையில் 10 இடங்கள் முன்னேறி 61வது இடத்தை பிடித்துள்ளார். பந்துவீச்சில் பீட்டர் சேஸ் 22 இடங்கள் முன்னேறி 99வது இடத்தை பிடித்துள்ளார்.
டி20 அணிகள் தரவரிசையில் இந்திய அணி 2 ரேட்டிங் புள்ளிகளை இழந்துள்ளது. இருந்தாலும் தனது இரண்டாவது இடத்தை தக்கவைத்துள்ளது. ஆஸ்திரேலிய அணி மேலும் இரு ரேட்டிங் புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.